நாளைய மனிதர்கள் சைபோர்க், வருகிறார்கள். - nelliadynet
Headlines News :
Home » » நாளைய மனிதர்கள் சைபோர்க், வருகிறார்கள்.

நாளைய மனிதர்கள் சைபோர்க், வருகிறார்கள்.

Written By www.kovilnet.com on Monday, October 6, 2014 | 7:48 AM

* 2100 ம் ஆண்டில் மனிதர்கள் காந்த அலைகள் (சிக்னல்) மூலமே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதை பார்க்கலாம். தொலைபேசி போன்ற பழைய சாதங்கள் தேவைப்படாது . நாம் உடலில் பொருத்தப்பட்ட சாதனங்கள் வழியே ஒருவருக்கு ஒருவர் சிந்தித்துக் கொள்வோம். 
-கெவின் வார்விக்; புகழ்பெற்ற சைபர்னடிஸ் பேராசிரியர், உலகின் முதல் சைபோர்க்.

* தொழில்நுட்பத்தை ஒரு சாதனமாக பயன்படுத்துவதை நாம் நிறுத்திக்கொண்டு ,தொழில்நுட்பத்தை உடலின் ஒரு பகுதியாக பயன்படுத்த துவங்குவோம். இது அடுத்த சில ஆண்டுகளிலேயே பரவலாகத்துவங்கும் என நினைக்கிறேன் 
- நீல் ஹர்பைசன் ; சைபோர்க் கலைஞர், வண்ணங்களை கேட்பவர்.

* இரண்டு வகையான எதிர்காலங்கள் இருக்கின்றன. விருப்பத்தின் எதிர்காலம்.விதியின் எதிர்காலம். மனித அறிவால் இந்த இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.
- ஜான் டெஸ்மண்ட் பெர்னல்; மனிதன் மற்றும் இயந்திரங்கள் சங்கமம் பற்றிய கருத்துக்க்ளை முன்வைத்த ஆங்கிலேய விஞஞானி.

இந்த கட்டுரையை படிக்கத்துவங்குவதற்கு முன் ஒரு நிமிடம், கற்காலத்து மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள். குகையே வீடு, வேட்டையாடுதலே தொழில், இலைகளே ஆடை என அலைந்து திரிந்த நம் முன்னோர்களில்  இருந்து நாம் மிகவும் முன்னேறி வந்திருப்பது புரியும். ஆதி மனிதனை விடுங்கள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்களை எண்ணிப்பாருங்கள். கையில் ஸ்மார்ட் போன், காதுகளில் ப்ளுடூத் சாதனம், ஷூவிலும், காலணியிலும் நடமாட்டத்தை கண்காணிக்கும்  டிராக்கர் என அவர்களை இக்கால மனிதர்கள் எங்கேயே வந்திருப்பதும் புரியும். 

இப்போது நாளைய மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்! இது உங்கள் கற்பனைக்கு சவால் விடும் கேள்வி அல்ல. தொழில்நுட்பமும், மனித உடலும் இன்னும் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருக்க கூடிய நாளைய யதார்த்த்திற்கு உங்களை அழைத்துச்செல்வதற்கான கேள்வி.

இந்த கேள்விக்கான பதில் நாளைய மனிதர்கள் சைபோர்களாக இருப்பார்கள் என்பது தான்! பல வகையான சைபோர்குகள்.(cyborgs). காத்திருக்கும் இந்த யதார்த்தம் ஸ்மார்ட்போனுக்கு பழகிய தலைமுறையை கூட கொஞ்சம் மிரள வைக்கவே செய்யும். எண்ணங்களால் பேசிக்கொள்வதும், நினைப்பது மூலமே சாதனங்களை இயக்குவதும் இந்த உலகில் சாத்தியமாகும். மனித பரிபாஷைகள் போல மனித- இயந்திர பரிபாஷைகள் சாத்தியமாகும். நீங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தானாக கதவு திறந்து விளக்கு எரிவது போன்ற மாயங்கள் சர்வ சாதாரணமாகலாம். படுத்த படுக்கையாக இருப்பவர் எண்ணங்கள் மூலமே சாதங்களையும் கருவிகளையும் இயக்கலாம் .மற்றவர்களோடு தொடர்பு கொள்ளலாம். வயோதிக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தலைக்குள் ஒரு சாதனத்தை பொருத்திக்கொண்டு நினைவாற்றலை மீட்டுக்கொள்ளலாம்.கவிஞர் ஆத்மாநாமின் கவிதை வாசகம் போல் இன்னும் பல போல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.  இன்னும் பல நம்ப முடியாத அற்புதங்கள் ஆனால்,  எதிர்கால நிஜங்கள் ( ஆத்மாநாம் கவிதையில் குறிப்பிட்ட எதிர்கால நிஜம் போல் அல்ல) எல்லாமே உடலில் பொருத்திக் கொள்ளகூடிய சிப்களாலும் தொழில்நுட்ப சாதனங்களாலும் சாத்தியமாகலாம். ’சிப்’ இல்லாமல் நாமில்லை என்று சொல்லும் நிலையும் வரலாம். 

உடலுக்குள் சிலிக்கான் சிப்பை பொருத்திக்கொள்ளும் நாளைய மனிதர்களை இப்போது அறிமுகம் செய்து கொள்வோம். அவர்கள் தான் சைபோர்குகள்! 

இன்று உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய சைபோர்க் மனிதர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் இனி வரும் காலத்தில், சைபர்னெட்டிக் ஆய்வாளர் மற்றும் உலகின் முதல் சைபோர்க் என அழைக்கப்படும் ஆங்கிலேயே பேராசிரியர் கெவின் வார்விக் (Kevin Warwick ) சொல்வது போல் அடுத்த நூற்றாண்டில் நாம் நுழையும் போது, மின்காந்த அலைகள் மூலம் பேசிக்கொள்ளும் புதிய யதார்த்தம் நமக்காக காத்திருக்கலாம். அதற்கு முன்பாகவே அதாவது 2050 ம் ஆண்டு வாக்கிலேயே கம்ப்யூட்டர் மற்றும் இயந்திரங்கள் மிகவும் புத்திசாலிகளாகிவிடும். ஒரு கட்டத்தில் இயந்திரங்கள் யோசித்து எடுக்கும் முடிவு அப்பாவி மனிதர்கள் மீது தாக்கம் செலுத்தலாம் என்றும் பேராசிரியர் வார்விக் சொல்கிறார். இதற்கான தீர்வாக தான் , மனிதர்களை இயந்திரங்களுடன் இணைத்து, பாதி மனிதம், பாதி இயந்திரம் சேர்ந்த கலைவையாக சைபோர்கை உருவாக்குவது என்கிறார் வார்விக்.

யார் இந்த வார்விக் என்று தொழில்நுட்ப உலகை அறிந்தவர்கள் கேட்க வாய்ப்பில்லை. வார்விக் தானே ஒரு சைபோர்க் தான் - உலகின் முதல் சைபோர்க்.  எதிர்கால சாத்தியங்களை கண்டறிவதற்காக அவர் தன்னைத்தானே சோதனைக்கூடமாக்கி கொண்டு அந்த ஆய்வின் பலன்களை உலகுடன் பகிர்ந்து கொண்டு வரும் வார்விக் 1998ல் தனது கையில் ஒரு சிறிய சிலிக்கான் சிப்பை பொருத்திக்கொண்டார். ரேடியோ அலைகள் மூலம் செயல்பட்ட அந்த சிப் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது என்ன நடந்தது தெரியுமா? வயர்டு பத்திரிகை கட்டுரையில் வார்விக்கே இதை விவரிக்கிறார். 

‘என் கையில் சிலிக்கான் சிப் பொருத்தப்பட்டு, 1988 முதல் நான் பேராசிரியராக இருக்கும் மேற்கு லண்டன் அருகே உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தின் சைபர்னட்டிக்ஸ் துறை அலுவலகத்திற்குள் எனது அசைவுகளை கண்காணிக்கும் வழி செய்தது. எனது இம்ப்லாண்ட் ( உடலில் பொருத்தப்பட்ட சாதனம் ) ரேடியோ அலைகள் மூலம் துறை முழுவதும் உள்ள ஆண்டனாக்களுடன் தொடர்பு கொண்டன. இவை எனது செயல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்த கம்ப்யூட்டருக்கு தகவல் அளித்தன. பிரதான வாயிலில் கம்ப்யூட்டரால் இயக்கப்பட்ட குரல் பெட்டி நான் நுழைந்ததும் ஹலோ என்று வரவேற்பு சொல்லும். எனது அசைவுகளை உணர்ந்து கொண்ட கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடத்தை நெருங்கியதும் கதவை திறந்துவிட்டு விளக்குகளை ஒளிரச்செய்தது. இந்த சிப் இருந்த 9 நாட்களுக்கு குறிப்பிட்ட திசை நோக்கி நடப்பது மூலமே நான் மாயம் போன்ற செய்கைகளை செய்தேன். இந்த பரிசோதனையின் நோக்கம் இம்பிலாண்ட் மூலம் தகவல்களை தெரிவித்து பெற முடியுமா? என்பது தான். இதில் வெற்றி பெற்றதுடன் மட்டும் அல்லாமல் இந்த சோதனை சைபர்னட்டிக்ஸ் பின்னே உள்ள கோட்பாடுகள் நிஜவாழ்க்கையில் எப்படி செயல்படும் என்பதையும் உணர்த்தின.’

வார்விக் குறிப்பிடும் சைபர்னடிக்ஸ் தான் அவரது ஆய்வுத்துறை. அவரது பேச்சும் மூச்சு எல்லாமும் என்றும் சொல்லலாம். சைபர்னெட்டிக்ஸ் பலவிதங்களில் அர்த்தம் சொல்லப்பட்டாலும், செயற்கை அறிவு, மனித -இயந்திரங்கள் இணைந்த செயல்பாடு என்ற அளவில் புரிந்து கொள்ளலாம். வார்விக் போன்றவர்களைப் பொருத்தவரை சிலிக்கான் சிப் போன்ற சாதனங்களை உடலில் பொருத்திக்கொண்டு, மூளையில் இருந்து புறப்படும் சிந்தனை அலைகளை புற உலகுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்துவதற்கான முயற்சியாகவும் புரிந்து கொள்ளலாம்.

வார்விக் முதல் முறையாக சிப்பை பொருத்திக்கொண்டு சைபோர்க் ஆன பிறகு அடுத்த சில ஆண்டுகளில் மேலும் மேம்பட்ட சிப்பை பொருத்திக்கொண்டு தனது எண்ண அலைகள் மூலம் இயந்திட கையை இயக்கி காட்டினார். அவரது துணைவியும் அவரைப்போலவே சிப் பொருத்திக்கொண்டார். இதன் பயனாக மனைவியின் அசைவுகளையும் அவரால் சிப் மூலமே உணர முடிந்தது. இது போன்ற முயற்சிகள் மூலம், அடுத்த நூற்றாண்டியில் எண்ணங்களால் பரஸ்பரம் தொடர்பு கொள்வது சாத்தியமாகலாம் என்றும் அவர் சொல்கிறார்.


வார்விக் சொல்வதை எல்லாம் கேட்டால், டெர்மினேட்டர் படத்தில் வரும் இயந்திர மனிதர்கள் எல்லாம் அறிவியல் புனைகதை பூச்சுற்றல்கள் அல்ல என்று தோன்றும். இது நிஜம் தான். ஆனால் விஞ்ஞானம் சாத்தியமாக்குவது அழிவுக்கு வித்திடும் இயந்திர மனிதர்கள் அல்ல. அறிவியிலின் விழைவு மேம்பட்ட மானிடர்களை உருவாக்குவது!.

ஆம், தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் செயல்பாடு மற்றும் ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதை தான் சைபோர்க் கருத்தாக்கத்தின் நோக்கம். இது பலவிதங்களில் வெளிப்பட்டாலும் மனிதர்களை மேம்படுத்திக்கொள்வது தான் பிரதானம். ரோபோக்கள் ஒரு கட்டத்தில் மனிதர்களை மிஞ்சும் ஆற்றல் பெற்று மனித குலத்தையே அடிமைப்படுத்தி ஆட்டிப்படைக்கலாம் எனும் கருத்தாக்கம் பலவிதங்களில் முன் வைக்கப்படுகிறது அல்லவா? மனிதர்களுக்கு எதிராக இயந்திரங்களை நிறுத்திப்பார்க்கும் இந்த சிந்தனைக்கு மாறாக மனிதர்கள் மற்றும் இயந்திரங்கள் ஆற்றலை ஒன்றுடன் ஒன்று பொருத்தி பார்ப்பது தான் சைபோர் கருத்தாக்கத்தின் மையம்.

உடலில் சிப் போன்ற சாதனங்களை பொருத்திக்கொண்டால் நமது குறைகளை இட்டு நிரப்பிக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிட்ட திறனை பலமடங்கு மேம்படுத்திக்கொள்ளாம் என்றும் இந்த துறை ஆய்வுகள் உணர்த்துகின்றன. கெவின் வார்விக் போன்றவர்கள் மேற்கொள்ளும்  சோதனைகளையும் ஆய்வுகளையும் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். இவை விபரீதமோ என யோசிக்க வைக்கும். ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரிட்சைகள் என்றும் கூட கேடக்த்தோன்றலாம். ஆனால் இவை வெறும் அறிவியல் புதுமைகள் மட்டும் அல்ல. இவை ஆய்வுக்கூட சோதனைகளுடனும் நின்றுவிடப்போவதுமில்லை. சிப்கள் மூலம் தொடர்பு கொள்வதும், மூளையின் எண்ண அலைகளை தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் சாத்தியமாகும் நிலையில் மனித உடலும் தொழில்நுட்பமும் கைகோர்பது தவிர்க்க இயலாத்தாக மட்டும் அல்ல, இயல்பான வளர்ச்சியாகவும் இருக்கிறது. 20 ம் நூற்றாண்டின் மனது இதை ஏற்க தயங்கலாம். ஆனால் சாதன்ங்களை உடலுக்குள் பொருத்திக்கொள்வது ஒன்றும் அந்நியமான விஷ்யம் இல்லை தானே. இதயத்தின் ஆற்றல் பலவீனமாகும் போது இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கரும் இயந்திரம் தானே. உடல் உறுப்புகளை இழக்கும் போது நாடும் செயற்கை உறுப்புகளும் தொழில்நுட்பம் சார்ந்தது தானே. இவற்றின் அடுத்த கட்டம் தான் உடலுக்குள் தொழிநுட்ப சாதனங்களை பொருத்திக்கொள்வது. இதனால் என்ன பயன்? இப்படி சாதாரணமாக கேட்டுவிடக்கூடிய கேள்வி அல்ல இது.
சைபோர்க் தன்மை நினைத்துபார்க்க முடியாத பலவித அணுகூலங்கள் இருக்கின்றன. எதிர்கால சாத்தியங்கள் ஒரு புறம் இருக்க நிகழ்கால மருத்துவ பலன்கள் நெகிழ வைப்பவை. இதற்கு நீல் ஹர்பைசன் அழகான உதாரணம். உலகின் முதல் சைபோரெ கலைஞர் என வர்ணிக்கப்படும் நீல், பிறவியிலேயே வண்ணங்களை உணரும் இல்லாதவர். ஆனால் தலைக்குள் ஒரு சிப்பை பொருத்திக்கொண்டு நிறங்கலை ஒலிகளாக உணரும் ஆற்றல் பெற்றிருக்கிறார். தலையில் ஆண்டனாவுடன் காட்சி தரும் நீல்லின் தோற்றம் வியக்க வைக்கலாம் .ஆனால் அவரது வாழ்க்கை அனுபவம் அதைவிட வியக்க வைப்பவை. அது மட்டுமா மனிதர் சைபோர்க் சங்கத்தையும் நடத்தி வருகிறார். சைபோர்க் ஆக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டுவதும் சைபோர்க் ஆக ஊக்குவிப்பதும் தான் இந்த சங்கத்தின் குறிக்கோள். அவரது அனுபவத்தையும் சைப்போர்க் சாத்தியமாக்க கூடிய இன்னும் பல அற்புதங்கள், இந்த கருத்தாக்கத்தின் தோற்றம் மற்றும் தேவை ஆகியவற்றை தொடர்ந்து பார்ப்போம்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template