இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.
இது கற்பனையா? நிஜமா? எனும் ஆய்வை விடப் பத்துத் தலை இராவணனன் எழுப்பக்கூடிய சுவாரஸ்யமான கேள்விகளைப் பார்க்கலாம். இராவணனின் பத்துத் தலைகளிலும் மூளை இருந்ததா? பத்து தலையின் கண்களும் தனித்தனியே காட்சிகளைக் கண்டனவா? பத்து தலை காதுகளும் ஒரே ஒலிகளை கேட்டனவா? தனித்தனி ஒலிகளை கேட்டனவா? நடைமுறையில் பத்து தலைகளின் பலன்கள் என்னவாக இருந்தன? இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். பத்து தலைகள் செயல்பட்ட விதம் என்னவாக இருந்தாலும் அவற்றின் கட்டுப்பாடு மையம் தலையின் மூளையில் இருந்திருக்க வேண்டும்.
அல்லது பத்து தலைகளிலும் மூளை இருந்து அவற்றுக்கு இடையே அசாதரணமான ஒருங்கிணைப்பு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கண்ணால் காண்பவை, காதால்
கேட்பவை தொடுதலால் உணரப்படுபவை என எல்லாமே மூளையால் தான் கட்டுப்படுத்தப் படுகின்றன. மூளையின் நியூரான்களிடையே நிகழும் மின் அதிர்வு பரிமாற்றங்களும் நியூரான்களில் இருந்து உடலுக்குள் பரவும் கட்டளைகளும் தான் நமது புரிதலுக்கும் இயக்கத்திற்கும் பின்னே இருக்கின்றன. ஒரு கம்ப்யூட்டர் அதன் நிரலுக்கு ஏற்ப செயல்படுவது போல் நாமும் இயற்கை ஏற்படுத்தி தந்துள்ள உயிரியல் நிரலுக்கு ஏற்பவே செயல் படுகிறோம். அதாவது நாம் ஒரு தலை இரண்டு கைகள் இரண்டு கால்கள் என உணர்வதற்காகவே பழக்கப் பட்டிருக்கிறோம். மனித உடலின் செயல்பாடு தொடர்பாக உள்ளுக்குள் ஒரு உடல் வரைபடம் பதிவாகி இருப்பதாக நரம்பியல் வல்லுனர்கள் சொல்கின்றனர். உடல் வரைபடத்திற்கு ஏற்பவே மூளை செய்திகளை உள்வாங்கி கொள்ளும் விதமும் அமைந்திருப்பதால் நம்மால் மூன்றாவது
கையையோ நான்காவது கையையோ உணர முடியாது. இது உயிரியல் வரம்பு என்று சொல்லப்படுகிறது.
ஆனால் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா கழகத்தில் உள்ள ஸ்வீடன் மருத்துவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூளை விஞ்ஞானிகள் ஒரு மாயத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
அவர்கள் மனிதர்களால் மூன்றாவது கரத்தை உணர முடியும் எனக் காட்டியுள்ளனர். ஆய்வு கூடத்தில் கட்டுப் படுத்தப்பட்ட சூழலில் ஒரே நேரத்தில் மூன்று கைகள் இருப்பதை உணரச் செய்வது சாத்தியம் என்று அவர்கள் உணர்த்தியுள்ளனர். இந்தப் பரிசோதனையின் போது பங்கேற்பாளர்களின் கை அருகே ஒரு ரப்பர் கையும் வைக்கப்பட்டது. அது இயற்கை கரத்திற்கு மாற்றாக விளங்க கூடிய புரோஸ்தட்டிக் கை. பங்கேற்பாளர்கள் மூன்று கைகள் இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நினைத்தால் போதுமா? மூளை அந்த கூடுதல் கையை உடலின் அங்கமாக ஏற்க வேண்டாமா? மூன்றாவது கையும் சொந்தக் கை தான் எனும் உணர்வை ஏற்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் இரண்டு கைகளையும் (செயற்கை மற்றும் இயற்கை வலது கரங்கள்) சிறிய பிரஷ்ஷால் அவற்றுக்கு தொடர்புடைய இடங்களில்
தொட்டிருக்கின்றனர். இந்த செய்கை கிடைத்ததும் மூளை இரண்டு வலது கைகளில் எது நிஜம் என குழப்பமடைந்து பின்னர், நிஜ கையையே சொந்த கையாக ஏற்கும் என எதிர்பார்க்கப் பட்டதற்கு பதிலாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மூளை இரண்டு வலது கைகளையுமே ஏற்றுக்கொண்டது. விளைவு பங்கேற்பாளர்கள் மூன்று கரம் இருப்பதாக உணர்ந்துள்ளனர்.
ஆக, புராணங்களில் அவர் பத்துத் தலைகளும் எட்டு கரங்களும் உண்மையா என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட கரங்களின் ஆற்றலை பெற வேண்டும் என்றால் மூளையில் உடலின் வரைபடம் அதற்கேற்ப தயாராகி இருக்க வேண்டும். மூளையின் செயல்பாடு மாயம் பற்றிய புதிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் மூளைக்குள் கைவைத்து அவற்றின் பரிபாஷயை இடைமறித்து உடல் ரீதியான கோளாறுகளையும், பாதிப்புகளையும் சரி செய்ய முயன்று வருகின்றனர். மூளைக்குள் கை வைப்பது என்றால் சிலிக்கான் சிப்களை பொருத்துவது. இது இம்ப்லாண்ட் என்று சொல்லப் படுகிறது. மூளையில் உள்ள நியூரான்கள் மெல்லிய மின் அதிர்வுகள் வழியே கட்டளைகள் பிறப்பிக்கின்றன. பசுமையான காட்சியை பார்த்ததும் விழித்திரையில் அந்த காட்சி பிக்சல்க்ளாக பதிவாகிறது. சமபந்தப் பட்ட நியூரான்கள் அந்த பிக்சல்களை உள்வாங்கிக் கொண்டு தேவையான கட்டளைகளை விழிகளுக்கு அனுப்பியதும் அடடா அற்புதமான காட்சி என மனம் உணர்கிறது.
உடலின் ஒவ்வொரு அசைவும் மூளையால் புரிந்து கொள்ளப் படுகிறது. மூளையால் கட்டுப் படுத்தப் படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் மூளையின் குறிப்பிட்ட செயல்பாடு அல்லது கட்டளைகள் வந்தடையும் விதம் பாதிக்கப் பட்டால் சிக்கல் உண்டாகிறது. இந்த சிக்கல்கள் மருந்து மாத்திரைகளுக்கு எல்லாம் கட்டுப் படாவிட்டால் விதியை நினைத்து சும்மாயிருக்க முடியுமா? அதனால் தான் மருத்துவ விஞ்ஞானிகள் மூளைக்குள் கைவைக்கத் துணிந்து விட்டனர். மூளைக்கும் உடலுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியை அல்லது தகவல் தொடர்பின்மையை கம்ப்யூட்டர் சிப்கள் மூலம் இட்டு நிரப்ப முடியுமா? என முயன்று வருகின்றனர். இந்தத் திசையில் பல்வேறு வகையான ஆய்வுகள் பல கட்டங்களில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிலும் சின்ன சின்னதாக முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பார்வைக் குறைபாட்டை போக்கக் கூடிய பயோனிக் விழிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இழந்த திறனை மீட்டு தரக்கூடிய பயோனிக் அங்கங்கள் எல்லாம் இவற்றின்
அடையாளங்கள் தான். உடலுக்குள் சிலிக்கான் சிப்பை பொருத்திக் கொள்ளும் சைபோர்க் காலத்தில் மருத்துவம் இந்த வகையில் தான் இருக்கும் என்கின்றனர். உலகம் முழுவதும் மருத்துவ விஞ்ஞானிகள் அல்லது உயிரி பொறியாளர்கள் மனித உடலில் நரம்பு மண்டலத்தில் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முயற்சிகள் புதுவகையான மருத்துவ தீர்வுகளுக்கும் வழிவகுத்து வருகின்றன.
இவை எல்லாமே மூளை நியூரான்கள் மூலம் பேசும் மின்சார மொழியை புரிந்து கொண்டு சிப்கள் மூலமே அதே மொழியைப் பேசுவதில் தான் இருக்கின்றன. ஸ்வீடன் மருத்துவ விஞ்ஞானிகளின் மூன்று கை சோதனையையே எடுத்துக் கொள்வோம். மூன்றாவது கையை மூளை உணரச் செய்தல், பக்கவாத பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு மூன்றாவது கையாக பயோனிக் கையை பொருத்து அதை சிப் உதவியுடன் இயக்குவது சாத்தியமாகலாம் என்கிறனர். தீயணைப்பு வீரர்கள் போன்றவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுபவர்கள் உயிர்களை காக்க இதே முறையில் கூடுதல் கரங்களை பயன்படுத்துவதும் சாத்தியமாகலாம் என்கின்றனர்.
மூளையில் எற்படும் மாற்றங்களை அப்படியே பிரதியெடுப்பதன் மூலம் பல மாயங்களை செய்யலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒரு உதாரணம் பார்க்கலாம்; நரம்பியல் விஞ்ஞானிகள் நியூரான்களின் செயல்பாட்டை மெல்லிய மின் அதிர்வுகளால் மாற்றலாம் என கண்டறிந்து வைத்துள்ளனர். இந்த அறிவை இப்போது நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர். அதீத மனச்சோர்வு என்பது மூளையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் பாதிப்பால் நிகழ்வதாக கருதப்படுகிறது. எனில் மூளைக்குள் ஒரு பேஸ்மேக்கரை பொருத்தி அதன் மூலம் பாதிகப்பட்ட நியூரான்கள் உள்ள இடத்திற்கு சரியான மின் அதிர்வுகளை அனுப்பினால் மனச்சோர்வை சீராக்கி விடமுடியும் என்று நம்பப்படுகிறது. இதே முறையில் ஏற்கனவே பார்கின்சட்ஸ் நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனச் சோர்வுக்கான இந்த பரிசோதனை அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு இதற்கான கிளினிகல் சோதனைக்கான அனுமதி விலக்கி கொள்ளப்பட்டது, இந்த திசையில் இருக்கும் சவால்களை சுட்டிக் காட்டினாலும் மருத்துவ உலகம் நம்பிக்கையுடன் உள்ளது.
மூளைக்குள் சிப்களைப் பொருத்துவது என்பது கோட்பாடு அளவில் எளிதாக இருந்தாலும் இதற்கான தொழில்நுட்ப சவால்கள் அதிகம். மூளைக்குள் பொருத்தக் கூடிய அளவிலான சிறிய சிப்களை தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருந்தாலும் கூட மூளையின் சுற்றுப் பகுதியில் அவற்றை இணைப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் மூளையின் மைய பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அவற்றால் மூளையின் திசுகக்கள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் நியூரான்கள் வெளிப்படுத்தும் மின் அதிர்வுகளை கிரகித்து அவற்றுக்கான அர்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை
துல்லியமாகப் பிரதியெடுக்கும் வகையில் சிப்கள் செயல் பாட்டிற்கான நிரல்களை உருவாக்க வேண்டும். மருத்துவ உலகம் இந்த சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே மூளையின் செயல்பாடு பற்றிய நமது புரிதலும் சொற்பமாக இருப்பதாகக் கருதப் படுகிறது. எனவே மூளையின் நுப்டங்களை மேலும் சரியாக புரிந்து கொள்ள மக்கதான திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இதற்கான பிரைன் திட்டம் (The BRAIN Initiative ) செயல்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் மனித மூளை திட்டம் (Human Brain Project ) செயல்பாட்டில் இருக்கிறது. இந்த திட்டங்கள் மூளையின் மொழியை புரிந்து கொள்வதற்கான நமது சொல்வங்கி வளமாகும் போது மூளையின் செயலை பிரதியெடுக்கும் முயற்சியிலும் மேலும் முன்னேற்றம் காணலாம் என கருதப்படுகிறது.
தியோடர் பெர்ஜரை (Theodore Berger) பொருத்த வரை, வயோதிகத்தால் ஏற்படும் நினைத் திறன் பாதிப்பைச் சரி செய்துவிட முடியும் என்கிறார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா உயிரி மருத்துவப் பொறியாளரான பெர்ஜர் பல ஆண்டுகளாக மூளையின் செயல்பாடு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். இவரும் ஒரு சைபோர்க் நம்பிக்கையாளர். அடுத்த 50 ஆண்டுகளில் சைபோர்க் ஆவது மிகவும் இயல்பாக இருக்கும் என்பது இவரது தீர்கதரிசன பார்வை. அல்சைமர்ஸ் போன்ற வயோதிக நோயால் பாதிக்கப் பட்டவர்கள் ஒரு சிப்பை பொருத்திக் கொள்வது மூலம் இழந்த நினைவுகளை மீட்டுக் கொள்வது சாத்தியம் என்கிறார் பெர்ஜர். இது தொடர்பாக எலிகளில் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் மூளையில் மின் கம்பிகளை பொருத்துவது மூலம் நினைவுகளை மீட்க முடிவதை இவர் நிருபித்திருக்கிறார். இதற்காக மூளையில் நீண்டகால நினைவுகளுக்கான நியூரான்கள் மற்றும் குறுகிய கால நினைவுகளுக்கான நியூரான்களை எல்லாம் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்து வருகிறார். ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது போல நினைவுத்திறனுக்கான நியூரான்களின் தகவல் முறையை கண்டறிந்து விட்டால் நினைவுகளை மீட்பது சாத்தியம் என்கிறார். இரு மொழிகளும் தெரியாவிட்டாலும் கூட, அதன் பரிமாற்ற முறையைக் கவனித்து அதைப் போலி செய்வதன் மூலமே மொழி பெயர்த்து விடலாம் என்று கூறும் பெர்ஜர்
மூளை செயல்பாட்டிலும் இதை உருவாக்க முடியும் என்கிறார். இதற்காக அவர் விளக்கும் விடயங்கள் மிகவும் சிக்கலாக இருக்கலாம். ஆனால் இதன் பலனை சுருக்கமாக
சொல்வதானால், ஒரு சிப்பை பொருத்திக் கொள்வதன் மூலம் இழந்த நினைவுகளை மீட்கலாம் என்பது தான். ஆக, அல்சைமர்ஸ் நோயாளிகளுக்கு மறதியில் இருந்து மீண்டு வர தேவை எல்லாம் ஒரு சிப் தான். ஆனால் இதில் கடக்க வேண்டிய தடைகள் ஏராளம் இருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் எண்ணம் மூலமே பயோனிக் அங்கங்களை இயக்க வைக்கும் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது எண்ண அலைகளை மின் அதிர்வுகளாகக் கிரகித்து அவற்றை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளக் கூடிய டிஜிட்டல் மொழிக்கு மாற்றுவதன் மூலம் செயற்கை அங்கங்களையும், கம்ப்யூட்டர்களையும் இயக்கலாம் என்கின்றனர். மூளையில் குறிப்பிட்ட செயல்களுக்கான நியூரான் மொழியை கண்டறிந்து அதை கம்ப்யூட்டருக்குப் புரியும் டிஜிட்டல் தகவலாக மாற்றுவதன் மூலம், ரோபோடிக் கரம் கொண்டு பொருட்களின் வடிவை உணர்வதும் பொருட்களை இயக்குவதும் கைகூடும் என்கின்றனர். சின்ன சின்ன அளவில் இது இப்போதே சாத்தியமாகத் துவங்கியிருக்கிறது. இந்த முறையை மூளை கணிணி இடைமுகம் என்கிறன்றனர். (brain-machine interfaces). பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முறையின் மூலம் பார்வையாலேயே பொருட்களை இயக்க முடியும். மருத்துவ துறையில் மட்டும் அல்லாமல் நடைமுறை உலகிலும் இந்த நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது மவுஸ் தேவை இல்லாமால் மூளையுடன் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் மூலம் பார்வையாலேயே கர்சரை நகர்த்தலாம் என்கின்றனர். இந்த முறையில் வீடியோ கேம் ஆடக்கூடிய சாதன்ங்கள் சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. புகழ்பெற்ற எழுத்தாளரான மைக்கேல் கிரக்டன் ஒரு நாவலில் எண்ணங்களாலேயே விமானத்தை இயக்குவது பற்றி எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் அறிவியல் புனை கதையாக கருதப்பட்டது எதிர்காலத்தில் நிஜத்திலும் சாத்தியமாகலாம்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள ஆய்வாளர் ஒருவரும் பிரான்சில் உள்ள ஒரு ஆய்வாளரும் டெலிபதி மூலம் எண்ண அலைகளை பரிமாறிக்கொண்டதாக செய்தி வெளியானது. தொலைபேசி போன்ற கருவி எதுவும் இல்லாமல் ஒருவர் எண்ணம் வெகு தொலைவில் உள்ள ஒருவருக்கு இணையம் மூலம் சென்றடைந்த இந்த சோதனை முக்கிய மைல்கல்லாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையாக இருப்பதும் மனித கணிணி இடைமுகம் தான் (computer-to-brain interface). எண்ணங்களை கம்ப்யூட்டருக்கு புரியும் டிஜிட்டல் தகவலாக்கி அந்த தகவலை மீண்டும் மூளை எண்ணமாக புரிந்து கொள்ளும் அற்புதம் இது என்கின்றனர் ஆய்வாலர்கள். எதிர்காலும் இன்னும் கூட நம்ப முடியாத அதிசயங்கள் நிகழ காத்திருக்கின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !