நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.
1847 ஆம் ஆண்டு மார்ச் 3ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் நகரில் பிறந்தார் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். சிறுவயதிலிருந்தே கிரஹாம் பெல் கல்வியில் அதிக ஆர்வம் காட்டினார். கல்வியை முடித்தபிறகு அவர் காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் கற்பிப்பதில் அதிக கவணம் செலுத்தினார். 1870ல் கனடாவுக்குச் சென்ற பெல் அங்கும் காது கேளாதோருக்கும், பேச முடியாதோருக்கும் கற்பித்தார். பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த பெல் அங்கு காது கேளாதோருக்காக சிறப்புப்பள்ளி ஒன்றை நிறுவினார். 1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பெல்லுக்கு பேராசிரியர் தகுதி கிடைத்தது. அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார். காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார். தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார். பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர். அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன. 1876 ஆம் ஆண்டு மார்ச் 10ந்தேதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார். திடிரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது. வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார். பெல்லின் கனவு நனவானது.
அதே ஆண்டு பெலஃடால்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்திருந்தார் பெல். பெரும்பாலோனோர் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரேசிலின் மன்னர் டான்.பெண்ட்ரோ கருவியை காதில் வைத்து சோதித்தார். மறுமுனையில் பெல் “To be or not To be" என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை வாசித்தார். அதனை தெளிவாக கேட்டு அதிசயித்த மன்னர் "My God its Beats" என்று நம்ப முடியாமல் கூறினார். அதன்பிறகு அந்த கண்காட்சியில் பெல்லின் கண்டுபிடிப்பு பலரின் கவணத்தை ஈர்த்தது. அதே காலகட்டத்தில் வேறு சிலரும் தாங்கள்தான் தொலைபேசியை கண்டுபிடித்ததாக கூறிக்கொண்டனர். அதனால் பெல் பலமுறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஒவ்வொரு வழக்கிலும் பெல்லுக்கே வெற்றி கிடைத்தது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் என்பது உறுதிபடுத்தப்பட்டது.
அதன்பின்னர் பெல் வேறு சில கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினார். ஆனால் தொலைபேசிதான் அவரது பெயர் சொல்லும் கண்டுபிடிப்பாக இருந்தது. 1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ந்தேதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார். அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை மிகச் சிறந்த மனிதராக வருணிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். உதவி தேவைப்பட்டோருக்கு எப்போதுமே மறுக்காமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். காது கேளாதோர் மற்றும் பேச முடியாதோர் நலனில் அவர் அதிக அக்கறைக் காட்டினார். இன்னும் ஒரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் பெல் நேபல் ஹபர்ட் என்ற காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். தொலைபேசியின் தந்தை கிரஹாம் பெல் இறந்தபோது வட அமெரிக்கா முழுவதும் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினர். பெல்லின் இறுதிச் சடங்கின்போது வட அமெரிக்காவில் இருந்த அனைத்து தொலைபேசிகளையும் சில நிமிடங்களுக்கு பயன்படுத்தாமல் தங்கள் மரியாதையைச் செலுத்தினர் அமெரிக்கர்கள்.
தொலைபேசியை நமக்கு தந்ததன் மூலம் உலகை ஒரு குக்கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லையேச் சேரும். உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் தொலைபேசிக்கும் நிச்சயம் இடம் உண்டு. உடல் குறை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பெல்லின் உயரிய எண்ணமே அந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்த அவருக்கு உதவியது. உயரிய எண்ணங்கள் நம்மை உயர்த்தும் என்பதும் அந்த உயர்வால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் நம் காதுகளில் சொல்லும் செய்தியாக இருக்கும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !