தத்துவ ஞானி சோக்கிரட்டீஸ் ஒரு விந்தை மனிதர் (பாகம் -6.. -இறுதி அத்தியாயம்-) -ஆக்கம்: ஞானதேவன்!!! - nelliadynet
Headlines News :
Home » » தத்துவ ஞானி சோக்கிரட்டீஸ் ஒரு விந்தை மனிதர் (பாகம் -6.. -இறுதி அத்தியாயம்-) -ஆக்கம்: ஞானதேவன்!!!

தத்துவ ஞானி சோக்கிரட்டீஸ் ஒரு விந்தை மனிதர் (பாகம் -6.. -இறுதி அத்தியாயம்-) -ஆக்கம்: ஞானதேவன்!!!

Written By www.kovilnet.com on Wednesday, February 6, 2013 | 11:14 PM



Socretes5










எழுதப்பட்ட ஒரு மரணத்தின் இறுதி நாளிகைகள் அவைகள்…
தன் வாழ்நாளில்.. பெயரையோ அல்லது புகழையோ விரும்பாமல்.. வாழ்நாள் முழுவதும் நேர்மையை கடைப் பிடித்து.. உலக செல்வங்களில்.. அதன் ஆடம்பரங்களில்.. சிறிதளவும் பற்றற்று.. முற்றும் துறந்த ஒரு முனிவனாக வாழ்ந்து வந்த‌ அந்த‌ மனிதனின் இறுதி அத்தியாயம் இது.. ..
ஏதேன் நகரத்து இளைஞர்கள் மத்தியில்.. அந்த‌ நகரத்து கடைத் தெருக்களில்.. ஒரு மாற்று உடைகூட இல்லாமல்.. பாதஅணி அணிந்திராத‌ வெறும் பாதங்களுடன்.. தினமும் உலவி வந்த‌ அந்த‌ தத்துவ ஞானியின் கடைசி நிமிடங்கள் அந்த சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் அன்று மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.. வேண்டப்படாத‌ அந்த‌ விதி மௌனமாக அவரின் கடைசி அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருந்தது..
ஒரு வெள்ளை உள்ளம் கொண்ட தங்கள் தலைவன் சோக்கிரட்டீஸ் என்னும் இந்த இனிய‌ மனிதனின் உயிரை.. ஒரு துர்மரணம் கொள்ளை கொள்ளப் போவதை எண்ணி அவர் சீடர்கள் கலங்கிக் கொண்டிருந்த அந்த‌ வேளையில்.. அவர் மட்டும் அந்த சிறைச்சாலைக்குள்.. மங்கிய விளக்கொளியில்.. அங்கும் இங்கும் மௌனமாக நடந்தபடி “மரணத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று திடீரென்று கேட்டவுடன் அவர்கள் சற்று திகைத்துத்தான் போனார்கள்..
எப்படியோ இந்த மனிதன் இந்த இறுதி நேரத்திலாவது.. தனக்குக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி.. இந்த சிறையிலிருந்து தப்பிச் சென்று.. தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் மனதுக்குள் இல்லாத‌ தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்த அவர்கள்.. இப்படி மரணத்தை பற்றி அவர் திடீரென்று பேசியதும்.. திடுக்குற்றுப் போனதில் அப்படியொன்றும் ஆச்சரியமில்லை!….
“நண்பர்களே!.. மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய ஆசீர்வாதங்களில் மரணமும் ஒரு மிகப் பெரிய ஆசீர்வாதமாக இருக்கலாம்!.. ஆனால் நாம் நம் அறிவினால் நமது மரணத்தை கண்டு அஞ்சுகிறோம்!.. இந்த அறிவு மட்டும் நமக்கு இல்லாதிருக்குமேயானால் நாம் தெரியாத ஒன்றை தெரிந்து கொண்டதாக எண்ணி வீணாக‌ அஞ்ச வேண்டிய அவசியமில்லை!… சிலவேளை மரணம்தான் மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு மிகச் சிறந்த சம்பவமாகக்கூட இருக்கலாம்… அது நம் மானிட அறிவுக்கு எட்டாத ஒரு விடயமாகக்கூட இருக்கலாம்!..
ஆனால் நாமோ மரணம் என்பது மனித வாழ்க்கையில் நடைபெறும் மிகவும் மோசமான ஒரு காரியம் என்று அதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்போல் அதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறோம்..
நாமறிந்த‌ அறிவினால்.. நாம் தெரியாத ஒன்றை தெரிந்து கொண்டதுபோல் எண்ணிக் கொள்ளும் ஒரு வெட்கப்பட வேண்டிய காரியம் இது என்பது உங்களுக்குத் தெரியுமா?.. இதுதான் நாம் அறிவு என்று நம்பியிருக்கும் அந்த‌ அறியாமையா?!..
சிறைச்சாலைக்கு வெளியே வீசிக் கொண்டிருந்த அந்த ஊதற் காற்று. அந்த சிறைச்சாலை சாளரத்தின் ஊடாக‌ புகுந்து சுவர் மாடத்தில் இருந்த விளக்கை ஊதி அணைக்க‌ முயற்சித்த போதும்.. அது ஆடியசைந்து அந்த காற்றுக்கு ஈடு கொடுத்துக் கொண்டுதான் இருந்தது..
நண்பர்களே!.. நான் புறப்படும் நேரம் இதோ வந்து விட்டது.. செல்ல வேண்டிய அந்த வழியில் நான் சென்றுதான் ஆகவேண்டும்.. அந்த வேளையை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்!.. நான் இறக்கப் போவதிலும்.. நீங்கள் வாழப் போவதிலும் எது சிறந்தது?.. அது நம்மைப் படைத்த அந்த இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும்!..
என் இனிய நண்பர்களே!.. நான் அடிக்கடி உங்களிடம் கூறி வந்ததையே இந்த இறுதி நேரத்திலும் கூறி விடைபெற எண்ணுகிறேன்.. “தயவு செய்து உங்கள் வார்த்தைகளையும் உங்கள் நடவடிக்கைகளையும் புகழ்ந்து பேசுபவர்கள் மேல் உங்கள் நம்பிக்கையை வைப்பதைவிட‌.. அடிக்கடி நீங்கள் செய்யும் தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி கண்டிப்பவர்கள்மேல் நம்பிக்கை வையுங்கள்!.. அதுதான் உங்கள் வாழ்க்கையின் சிறந்த வழி!..
தான் நேசித்த தன் சீடர்களிடம் தனது இறுதி உபதேசத்தை கூறி முடித்த‌ சோக்கிரட்டீஸ்.. தனது மரண தண்டனையை நிறைவேற்றக் காத்திருக்கும் அந்த சிறைச்சாலை ஊழியனை மௌனமாக ஏறெடுத்துப் பார்த்தார்…
அவருடைய இந்த‌ இறுதி உபதேசத்தை உன்னிப்பாக‌ கேட்டுக் கொண்டிருந்த அந்த சிறை ஊழியனுக்குக் கூட அவர் இறந்து போவதில் சிறிதளவும் இஸ்டமில்லை என்பதை அவன் முகமே காட்டியது…. சோக்கிரட்டீஸ் தனது இறுதி நிமிடத்தில் தனது மரண தண்டனையை சில நாட்களுக்கோ.. அல்லது சில வருடங்களுக்கோ தள்ளிப்போட எண்ணினால்கூட .. அதை அனுமதிக்கும்படி கிரேக்க அரசாங்கம் அவனுக்கும் இரகசியமாக உத்தரவிட்டிருந்தது..
“என்னப்பா!.. எனது மரண தண்டனையை நீ நிறைவேற்ற வேண்டிய‌ வேளை நெருங்கி விட்டதே.. ஆனால் நீயோ இன்னும் நான் பருக வேண்டிய அந்த நஞ்சு பதார்த்ததை தயாரிக்காமல் சும்மா வாழா வெட்டியாய் இருக்கிறாயே!”.. என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அந்த விந்தையான மனிதர்..
பரிதாபமாக அவரை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்த அந்த ஊழியின்.. அந்த நாளைய கிரேக்க மரண தண்டனை வழக்கப்படி ஹெம்லொக் (Hemlock) என்னும் அந்த கொடிய‌ நஞ்சுத் தாவரத்தின் இலைகளை சிறிதளவு மதுவுடன் கலந்து கல்லுரல் ஒன்றில் நன்றாக இடித்து.. அதன் சாற்றை பிழிந்து வடித்தெடுத்து.. ஒரு கிண்ணத்தில் ஊற்றி.. அவரிடத்தில் கொண்டு வந்து.. தன் முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி அவரிடத்தில் நீட்டினான்…
அப்படி அவன் அதை கொடுக்கும்போது.. அவன் கைகள் நடுங்கியதையும்.. அவனையறியாமல் அவன் கண்களிலிருந்து பீறிட்ட‌ கண்ணீர் துளிகளையும் கண்டு கொண்ட சோக்கிரட்டீஸ்.. “என்னப்பா தண்டனை அனுபவிக்கின்ற நானே சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் நீயோ இப்படி அழு மூஞ்சியாக இருக்கிறாயே” என்று வேடிக்கையாக பேசிச் சிரித்தார்..
அந்த ஊழியனின் தோளை ஒருமுறை ஆதரவாக தட்டி அவனை ஆசுவாசப்படுத்தியபடி…. அவனிடத்திலிருந்து அந்த கிண்ணத்தை வாங்கிய சோக்கிரட்டீஸ்.. அதை அப்படியே ஒரே மூச்சில் மடமடவென்று குடிப்பதை பார்த்த அவருடைய‌ சீடர்கள்.. “ஐயோ!..ஐயோ!!.. என்று தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அலறி அழுவதைப் பார்த்த சோக்கிரட்டீஸ்..
“என்னப்பா நீங்கள் பெண்களைப் போல இப்படி அழுது புலம்புகிறீர்களே!.. இப்படியெல்லாம் நடைபெறக் கூடாது என்றுதானே நான் ஏற்கெனவே எல்லா பெண்களையும் இங்கிருந்து அனுப்பி வைத்து விட்டேன்.. நீங்களும் இப்படி அழுது புலம்புவீர்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் உங்களையும் அவர்களுடன் சேர்த்து அப்போதே அனுப்பி வைத்திருப்பேனே” என்று கடிந்து கொண்டார்..
(அவருடைய அந்த இறுதி நேரத்தில்.. தன் இடுப்பில் கைக் குழந்தையுடன்.. மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு.. அழுது புலம்பிய அவர் மனைவி “சந்தபேயை”.. அந்த நஞ்சை அவர் அருந்துவதற்கு சற்று நேரத்துக்கு முன்னரே.. தனக்கு வேண்டிய ஒரு சீடனுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார் சோக்கிரட்டீஸ்.. சந்தபே அந்த சிறைச்சாலையே விட்டுப் போகும் போது.. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடித்தபடி. அவரை ஏக்கத்துடன் திரும்பி திரும்பி பார்த்தபடி அங்கிருந்து வெளியேற மனமில்லாமல் வெளியேறியது மனதை உருக்கும் ஒரு காட்சியாக இருந்தது என்று பிளட்டோ (Plato) அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் பின்னர் குறிப்பிட்டிருந்தார்)
தங்கள் மனதை சற்றுத் தேற்றியபடி.. கண்களை துடைத்துக் கொண்டார்கள் சீடர்கள்!.. அந்த நஞ்சை அவர் அருந்தியபின் அதன் தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதை சிறை ஊழியனிடமிருந்து ஏற்கெனவே கேட்டறிந்திருந்தார்கள் அவர்கள்..
அந்த ஹெம்லொக் என்ற நஞ்சுச் செடியின் இலைச் சாற்றை அருந்திய பின்.. அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தார் சோக்கிரட்டீஸ்.. முதலில் கால்களில் சற்று விறைப்பு ஏற்படுவதை உணர்ந்த அவர் மெல்ல அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டார்.. அவர் அருகில் அமர்ந்திருந்த கிறிட்டோ (Crito) அவர் பாதங்களை கிள்ளி “இந்த‌ வலியை நீங்கள் உணர்கிறீர்களா”.. என்று கேட்டான் .. “இல்லை” என்றார் அவர்..
பின்னர் தொடையை கிள்ளிப் பார்த்தான் கிறீட்டோ.. அங்கும் உணர்வில்லை.. சற்று நேரத்தின் பின்னர் “எனக்கு குளிர்ந்து விறைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது”.. என்றார் சோக்கிரட்டீஸ்.. அருகில் தயாராக இருந்த தடித்த‌ போர்வையை எடுத்து அவரை தலையிலிருந்து கால்வரை மூடினார்கள் சீடர்கள்..
சற்று நேரத்தின் பின் போர்வையை தன் கரங்களால் மெல்ல விலக்கிய சோக்கிரட்டீஸ் தனது நேசத்துக்குரிய சீடன் கிறிட்டோவை தனது ஒளி இழந்து போய்க் கொண்டிருக்கும் விழிகளால் மெல்ல அருகில் அழைத்தார்..
“கிறிட்டோ!.. நான் ஒரு சேவல் கோழியை எனது அயலவரிடன் கடனாக வாங்கியிருந்தேன் என்பது உனக்கு நினைவிருக்கிறதா?… ஆனால் அதை திருப்பி செலுத்த நான் மறந்து விட்டேன் என்பது இப்போதுதான் என் நினைவுக்கு வருக்கிறது.. ஆகவே அதற்குரிய பணத்தை நீ தவறாமல் அவருக்கு செலுத்திவிடு”.. என்று கூறியபடியே மீண்டும் சோர்ந்து போன அவரை.. போர்வையை இழுத்து மீண்டும் மூடினான் கிறிட்டோ..
அந்த சிறைச்சாலையில்..வேதனை ததும்பும் அந்த‌ சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியாமல் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது நேரம்.. ஊதல் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருந்த அந்த சிறைச்சாலை அகல் விளக்கு மெல்ல மெல்ல மங்கி ஒளியிழந்து கொண்டிருந்தது..
எதுவித அசைவுமில்லாமல் போர்வைக்குள் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்த‌ சோக்கிரட்டீஸை உற்றுப் பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்த‌ சீடர்களில் ஒருவன் மெதுவாக போர்வையை விலக்கி அவர் முகத்தை பார்த்தான்.. திறந்திருந்த அவர் விழிகள்..மேலே பார்த்தபடி நேராக‌ நிலை குத்தி நிற்பதை கண்ட அவர்கள்.. தங்கள் தலைவன் தங்களை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டு… தாங்க முடியாத சோகத்துடன் அலறித் துடிக்கத் தொடங்கினார்கள்… கிறிட்டோ தன் கைகளால் திறந்திருந்த‌ அவர் விழிகளை மூடினான்..
சுமார் 2400 வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த‌ சோக்கிரட்டீஸ் என்னும் அந்த தத்துவ ஞானி.. இந்த உலகத்தில் இருந்து விடைபெற்ற கடைசி நாள் அது.. இந்த நிகழ்வுகளை அவரது சீடர்களான பிளட்டோ (Plato) வும் சென‌போனும் (Xenophon) அவரது வாழ்க்கை வரலாற்றில் துல்லியமாக‌ எழுதி வைத்து விட்டு மறைந்து போனார்கள்..
ஆனால் அந்த தத்துவ ஞானியின் வரலாற்றை மட்டுமல்ல.. பல்லாண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த‌ இப்படிப்பட்ட பல மனிதர்குல மாணிக்கங்களின் வரலாறுகளை இந்த உலகம் இழந்து விடாம‌ல் அவற்றை பதிவு செய்து வைத்து விட்டுப் போன பல வரலாற்று ஆசிரியர்கள்‍‍.. வருங்கால‌ உலகத்தின் பல‌ தலைமுறைகளுக்கு மிகவும் அவசியமானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட போற்றப்பட வேண்டிய‌ அந்த வரலாற்று பதிவாளர்கள் மனித குலத்தால் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்த 2400 வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த‌ சோக்கிரட்டீஸின் வரலாற்றை விரிவாக எழுதி வைத்திருக்கும் பிளட்டோவும் செனபோனும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக சுட்டிக் காட்ட தகுதியானவர்கள்…… (முற்றும்)
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template