நம் தலைக்கு மேலே இருக்கும் அரைவட்டப் பரப்பைத்தான் வானம் என்று குறிப்பிடுகிறோம். தலைக்கு மேல் உள்ள கூரை என்றும் வானம் அழைக்கப்படுவது உண்டு. பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உள்ள வளிமண்டலம், விண்வெளி ஆகிய அனைத்துமே உள்ளடங்கியதுதான் வானம். வானியலில் இது வான்கோளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கற்பனைக் கூரையில் சூரியன், நட்சத்திரம், கோள்கள், நிலா போன்றவை சுற்றிக் கொண்டிருப்பதை இரவில் பார்க்கலாம். வான்கோளம் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, இதற்கு விண்மீன் தொகுதிகள் (constellations) என்று பெயர்.
மேகம், வானவில், துருவஒளி (Aurora) போன்றவை வானத்தில் உருவாகும் இயற்கையான சில நிகழ்வுகள். இவை தவிர புயல், மழை நேரங்களில் மின்னலைப் பார்க்க முடியும். பறவைகள், பூச்சிகள், பட்டங்கள், விமானங்கள் போன்றவை வானத்தில் பறப்பதையும் நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். வானம் எப்போதுமே பல்வேறு வர்ணஜாலங்களை உள்ளடக்கியது என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
இரவில் வானம் பெரும்பாலும் இருட்டாகவே இருக்கும். அல்லது ஆங்காங்கே நட்சத்திரங்களை வாரித் தெளித்து போலிருக்கும். மனிதச் செயல்பாடுகள் காரணமாக வானத்தில் பகலில் தூசுப்படலத்தையும், இரவில் ஒளிமாசையும் பெருநகரங்களுக்கு மேலே பார்க்க முடிகிறது. சிவப்பு நிற நியான் விளக்குகள் நம் நகரங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.
சரி, நம் கேள்விக்கு வருவோம். பெரும்பாலான குழந்தைகள் முதலில் கேட்கும் கேள்விகளில் இதுவும் நிச்சயம் இடம்பெறலாம். "ஏன் வானம் சிவப்பாகவோ, பச்சையாகவோ இல்லாமல், நீல நிறத்தில் இருக்கிறது?".
சூரிய ஒளி நிறப்பிரிகை அடைவதால் தோன்றும் வானவில்லில் அனைத்து வண்ணங்களும் இருக்கின்றன. வெள்ளை ஒளிதான் அப்படிப் பிரிகிறது. எனவே, வானமும் நமக்கு வெள்ளை நிறத்திலேயே தெரிய வேண்டும். ஆனால், ஏன் அப்படித் தெரிவதில்லை?
வானம், வாயு மூலக்கூறுகளால் ஆனது. வானத்தின் ஒரு பகுதியான வளிமண்டலத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய தூசுத் துகள்கள் பரவியிருக்கின்றன. அந்தத் துகள்கள் எவ்வளவு நுணுக்கமானவை என்றால், சாதாரண கண்களுக்குத் தெரியாத அளவுக்கு நுண்ணியவை. இந்த நுண்ணிய துகள், எதிர்பாராதவிதமாக நீலநிற ஒளியின் அலைநீளத்துக்கு இணையாக இருக்கின்றன.
சூரியனின் ஒளி வளிமண்டலத்தில் நுழையும்போது, அதில் கலந்துள்ள பெரும்பாலான நிறங்கள் எந்த இடையீடும் இல்லாமல் பூமியின் மேற்பரப்பை வந்தடைந்து விடுகின்றன. ஆனால் நீல நிற ஒளி, வளிமண்டலத்தில் உள்ள துகள்களின் அலைநீளத்தை ஒத்திருப்பதால், அது எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் நீளம் கொண்ட வளிமண்டத்தில் உள்ள ஒவ்வொரு நுண்ணிய துகளிலும் நீலநிற ஒளி மோதிச் சிதறடிக்கப்பட்டு, கடைசியாக நம் கண்களை வந்தடையும் வரை துகள்களில் மோதிக் கொண்டே இருக்கிறது. இந்தக் காரணத்தால், வானத்தை எந்தப் பக்கத்தில் இருந்து நாம் பார்த்தாலும் அது நீல நிறமாகவே தெரியும்.
நமது பார்வை ஆழமடைய ஆழமடைய வானம் அடர்நீலமாகத் தெரியும். அதனால்தான் தொடுவானப் பகுதியும், நம் தலைக்கு மேலே உள்ள பகுதியும் அடர்நீலமாகத் தெரிகின்றன.
நீலநிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும்கூட, குறிப்பிட்ட சில நிறக் கதிர்களை பார்ப்பதற்கான உணர்திறன் நமது கண்களில் குறைவாக இருப்பதால், நீல நிறமே பார்வையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
அந்திநேரத்தில் அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தொலைவிலும், குறிப்பிட்ட அச்சில் சாய்ந்தும் இருப்பதால், சிதறடிக்கப்படும் நீலநிற ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடுகிறது. அப்போது வானம் மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.