புவி வெப்பமடைவது எதனால்? : நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைக் காரணிகள் - nelliadynet
Headlines News :
Home » » புவி வெப்பமடைவது எதனால்? : நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைக் காரணிகள்

புவி வெப்பமடைவது எதனால்? : நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைக் காரணிகள்

Written By www.kovilnet.com on Tuesday, December 31, 2013 | 4:47 AM


இயந்திரமயமான வாழ்க்கையில் இயந்திரங்கள் மனிதனை முடக்கிக் கொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறுகிற வெற்றி கொள்கிற எண்ணத்தில் மனிதனின் தொடர்ந்த செயல்பாடு இருந்து கொண்டேயிருக்கிறது.
தொழிற்சாலைகள், போக்குவரத்து சாதனங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், விஞ்ஞான வளர்ச்சி என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனிதன் நுகரும் தீவிரத்தில் எல்லாவற்றையும் புறந்தள்ளிக் கொண்டிருக்கிறான். இயற்கையின் சமன்பாடும் குலைந்து பூமி சூடாகிக் கொண்டிருக்கிறது. வளி மண்டலத்தில் நிகழும் மாற்றங்கள் இன்னும் சூடாக்கிக் கொண்டிருக்கிறது.

    இப்போது வளிமண்டலத்தில் வெப்ப வாயுக்கள் உயர்வதைப் போல உயர்ந்து கொண்டே போனால் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு சமநிலை வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும். ஒரு பக்கம் வெள்ளம் மறுபக்கம் வறட்சி. விவசாயம் வெகுவாகக் குறைந்து போதல் குடிநீர் தட்டுப்பாடு, காடுகள் அழிந்து போதல் என்று பெரும் விளைவுகளை வரும் காலத்தில் சந்திக்கப் போகிறோம்.

    பூமியைச் சுற்றினப் பரப்பில் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு பிராணவாயுவை வைத்திருக்கிறது. பூமியின் சமநிலைக்கு இந்த காற்று மண்டலம் உதவுகிறது. பூமியை போர்வை போல் காற்று மண்டலம் போர்த்திக் கொண்டிருக்கிறது. காற்று மண்டலத்தின் பிராணவாயு, கரியமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களும் இருக்கின்றன. இவையே பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படுபவை. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் சூடு பூவுலகில் மண், தண்ணீர் உயிரிகள் ஆகியவற்றால் உறிஞ்சிக் கொள்வதைத் தவிர மீதமுள்ளவை பசுமைக்குடில் வாயுக்களால் வான் வெளிக்கே திருப்பி விடப்படுகிறது. பூமி பரப்பை நோக்கி வெப்ப அளவு அதிகமாகிறது. அதிகமாகும் வெப்பம் அதிகமாக குளிரையும் தருகிறது. வெப்பம் கூடும் போது நீர் ஆவியாவது பெருகுகிறது. கடலும் வெப்பமடைந்து போகிறது.

    பனிப்பாறைகள் குறைந்து நிலச்சரிவுகளும் வெள்ளமும் உண்டாகும். இமாலயப் பனிப்பாறைகள் வெப்ப அதிகரிப்பால் இன்னும் இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின் காணாமல் போகும்.

    பூமி சூடாவதால் வீடுகளில் குளிர் சாதனங்கள் பொருத்தப்படுவது சாதாரணமாகி விட்டது. குளோரா புளோரா கார்பன் எனப்படும் வேதியல் பொருள் குளிர் சாதனம் மற்றும் சார்புடைய சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. கரியமிலவாயுவை விட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை இரு உருவாக்கும். ஓசோன் படலத்தை கழித்து புற ஊதாக் கதிர்களை பூமியின் மீது படரச் செய்து பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணும். பூமியின் சராசரி வெப்பம் அதிகமாகக் கூடினாலும், குறைந்தாலும் பூமிக்கு சிரமம்தான். மூன்றாவது உலகப் போரால் உண்டாகும் அழிவை விட புவி வெப்ப அதிகரிப்பால் அழிவு அதிகமாக இருக்கும்.

    பிளாஸ்டிக் பொருட்களும் வெப்ப உயர்வுக்கு முக்யமான காரணமாக இருக்கிறது. எந்தப் பொருளானாலும் மண்ணில் சிதைந்து மக்கிப்போவது சாதாரணமாக நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவது இல்லை. அதை எரித்தாலும் மூலக்கூறுகள் அதிக அளவில் சிதைவதும் இல்லை. இதுவே பெரும் தீங்காகி நிற்கிறது.

    வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருட்கள் பூமியை சூடாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பல்வேறு வாயுக்கள் சுற்றுச்சூழலை பாதித்து பூமியை வெப்பமடையச் செய்கிறது.

    காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு அதிகமாவதால் கடலும் அமிலமாகி விடுகிறது. உயிரினங்கள் வெளியே விடும் கரியமிலவாயுவை கடல் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. கடலின் அமிலத்தன்மை பவளப் பாறைகளுக்கும், கடல் உயிரினங்களுக்கும் கேடுகளை விளைவிக்கும்.

    உணவு பொருட்கள், வேளாண்மை உற்பத்தி தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும். சாதாரண மழையினால் ஏற்படும் விவசாயத்தையே நாம் தொடர்ந்து உணவிற்கு அனுபவித்து வருகிறோம். கடல் மட்ட உணர்வு என்பதும் சிறு சிறு தீவுகளை அழித்து விடும். இதனால் மக்களின் இடம் பெயர்வும் அதிக அளவில் நிகழும். மனித இனம் இந்தச் சூட்டைத் தாங்கிக் கொள்ள முடியாது. விலங்குகளும், தாவரங்களுக்கும் இதே நிலைமைதான்.

    கடல் மட்டம் உயர்வதால் நிலத்தடி நீருக்குள் உப்பு புகுந்து விடுகிறது. கடலோரப் பகுதிகளில் வேளாண்மைக்கு தண்ணீரும், குடிநீர் உபயோகத்திற்கும் கிடைப்பதில்லை. நோய்கள் அதிகரிப்பதும் அதனால் இயற்கைச் சாவுகளுக்கு முந்தின நிலையிலான சாவுகளும் சுலபமாக நடக்கும். வெப்பம் உடல் சோர்வை அதிகமாக்குகிறது. சுவாசக் கோளாறுகள் சகஜம்.

    தொழிற்சாலை எரிபொருளுக்காக மரங்களை எரிப்பது பல காலமாக நடைபெறுகிறது. இது பூமியின் வெப்பத்தைக் கூட்டுகிறது. மரக்கட்டைகளை வாயுவாக மாற்றி எரிபொருளாகப் பயன்படுத்த பல ஆய்வுகளம் நடந்து வருகிறது. மரக்கட்டைகளை வறுத்து உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது போல பயன்படுத்தப்படுகிறது. புங்கமரம், கிரிக்கெட் பேட் செய்ய பயன்படுத்தப்படும் வில்லோ மரம் ஆகியவற்றை எரிபொருளாக மாற்றுவது எளிது. வைக்கோலைக் கூட நேரடியாக எரி பொருளாக மாற்றுவதை விட வாயுவாக மாற்றி எரி பொருளாக்கலாம்.

    இன்னும் கிராமப்புறப் பகுதிகளிலும், விறகு கிடைக்கிற பகுதிகளிலும் சமையலுக்கு பிறகு பயன்படுத்தப்படுகிறது. விறகுப்புகை அவசியம் என்றாலும் தவிர்க்கப்பட வேண்டியதாக உள்ளது. திருப்பூர் நகரத்தில் பனியன் கழிவுகளை சமையலுக்கும், அடுப்பெரிக்கவும், தண்ணீர் காய்ச்சுவதும் பயன்படுத்துகின்றனர். இது வெளியிடும் வாயுக்கள் சூழலை வெகுவாகக் கெடுக்கிறது.

    நமது நாட்டின் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பெரும் ஆதாரமாய் விளங்கும் தென்மேற்கு பருவமழை பருவ மாற்றல் வெகுவாக குறைந்து விட்டது. இந்தியாவின் மேற்குப் பகுதியும் அரபிக் கடலும் ஒரே வெப்ப நிலைக்கு வரும் அபாயங்கள் உள்ளன. வேளாண்மையை நம்பியிருக்கும் நாடுகள் வறுமைப் பிடிக்குள் அகப்பட்டுக் கொள்ளப்போகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடைக்காமல் போய்விடும். குழந்தைகள் தானே நம் எதிர்காலம் என்பதும், புதிய தலைமுறை வாரிசு என்பதும்!

    ஆண்டுதோறும் புலம்பல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. "சூடு தாங்க முடியலே... இந்த மாதிரி சூடு எந்த வருஷமும் இருந்ததில்லை..." நம் பூமியின் தென் துருவ அண்டார்டிக் என்பது பனிப்பாறைகள் நிறைந்திருக்கும் பகுதியில் வெப்பம் அதிகரித்து வருகிறது. பனிப்பாறைகள், உறைபனிப் போர்வைகளுக்கு கீழ் பிளவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதனால் பனிப்போர்வை உருகி கடல் மட்டம் உயர்ந்து பல தீவுகளும், கடலோர நகரங்களும் மூழ்கலாம். கங்கையின் மூலாதரமான கங்கோத்ரி வேகமாக உருகுகிறது. யமுனை நதியின் ஆதாரமான கோமுக் பனிச்சிகரம் உருகுகிறது. கோமுக் பனிச் சிகரம் பசுமுகத்தைக் கொண்டிருக்கும் அதையும் சிலர் வழிபடுவர். அந்த பசு முகம் இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது. சிதைந்த குழந்தையொன்றின் முகமாய் அது தெரிய ஆரம்பித்திருக்கிறது. சுற்றுச் சூழல் மாசுபாட்டால் எதிர்கால தலைமுறையினரான குழந்தைகளின் முகங்களின் நாம் சிதைத்து வருவதையே இது காட்டுகிறது. இதுவரை இப்பந்திகளில் கூறப்பட்டிருப்பது பூமியில் அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளே. இதைக்கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் இந்தப் பந்திகளிலேயே அடங்கியுள்ளன. உதாரணம் பிளாஸ்டிக் பாவணையைக் குறைத்தல், மரங்கள் வெட்டப்படுவதை தவிர்த்து, மரங்களை இன்னமும் அதிகளவில் வளர்ப்பதை துரிதப்படுத்தல் போன்ற பல சிறிய செயற்பாடுகளை நீங்கள் செய்யத்தொடங்குவதன் மூலம் பூமி வெப்பமாவதை குறைந்தது கட்டுப்படுத்தவாவது முடியும்.  முயற்சிப்போமா நாம்?
 சுப்ரபாரதிமணியன்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template