பிரபஞ்ச வெளியில் நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டத்தில் கோடிக்கணக்கான விண்மீண்கள் காணப்படுகின்றன.
இவற்றின் அமைவிடம் மற்றும் செயற்பாடு குறித்து விரிவான முப்பரிமாண வரைபடத்தைத் தயாரித்து ஆராய்வது என்பது விஞ்ஞானிகளுக்கு இதுவரை கனவாகவே இருந்து வந்தது. தற்போது இக்கனவை நனவாக்குவதற்காக பில்லியன் டாலர்கள் செலவில் ஐரோப்பாவின் நவீன Gaia செய்மதி வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
இத் தொலைக்காட்டியின் முக்கிய அம்சம் என்னவெனில் இதன் வில்லை (lense) பில்லியன் பிக்சல் (billion pixel or 1000 mega pixel) நோக்கு திறன் வாய்ந்தது என்பதாகும். உண்மையில் இந்தளவு அதிகபட்ச நோக்கு திறன் கொண்ட தொலைக்காட்டியால் மட்டுமே பால்வெளி அண்டத்தில் நூறு தொடக்கம் பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள கோடிக் கணக்கான நட்சத்திரங்களின் பட்டியலை முப்பரிமாணத்தில் தயாரிக்க முடியும் என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாக உள்ளது. இதைவிட இத் தொலைக்காட்டியின் மூலம் பெறப்படவுள்ள அவதானங்களைக் கொண்டு நாம் வாழும் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்தும் பால்வெளி அண்டத்தின் (Milkyway) செயற்பாடு குறித்தும் பல சான்றுகளைப் பெறுவதும் விஞ்ஞானிகளின் நோக்கமாக உள்ளது.
ரஷ்யாவின் சோயுஷ் ராக்கெட் மூலம் பிரெஞ் கயானா ஏவுதளத்தில் இருந்து இந்த கையா விண் தொலைக்காட்டி விண்ணுக்குச் செலுத்தப் பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ஈசாவுக்கு (ESA) அஸ்ட்ரியும் (Astrium) நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இத்தொலைக்காட்டியின் நோக்கு திறனுக்கு உதாரணமாக விண்வெளியில் நேர்ப்பாதையில் 1000 Km தொலைவில் ஒரு மனிதனின் தலை முடி இருந்தால் கூட அதன் விட்டத்தைத் துல்லியமாக கையா தொலைக்காட்டியால் கணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
நமது பால்வெளி அண்டத்தில் குறைந்தது 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம் என்றும் அவற்றைச் சுற்றி பூமியைப் போன்ற 10 பில்லியன் கிரகங்களாவது இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் ஊகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கையா தொலைக்காட்டி மூலம் பால்வெளி அண்டத்தில் வேற்றுக் கிரக வாசிகள் வசித்து வருகின்றனரா என ஆராய்வதற்கும் முடியும் என்றும் கூறப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !