எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது.சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.
மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.
பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.
மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன. பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.
சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.
எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !