சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கால கட்டத்தில் பெரிய கிரகம் ஒன்று தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க வானவியல் நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். சூரியனும் கிரகங்களும் தோன்றி 60 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் இது நிகழ்ந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்வெஸ்ட் ஆராய்ச்சிக் கழகத்தைச் (Southwest Research Institute) சேர்ந்த நிபுணர் டேவிட் நெஸ்வொமி (David Nesvomy) இவ்வாறு சொல்கிறார்.
சூரிய மண்டலத்தில் ஆரம்பத்தில் எவ்வளவு கிரகங்கள் இருந்திருக்கலாம்?இப்படி இருந்திருக்குமா அல்லது அப்படி இருந்திருக்குமா என்று கம்ப்யூட்டரில் கற்பனையான நிலைமைகளை (simulations) உண்டாக்கி அவற்றின் விளைவுகளை ஆராய்வது உண்டு. அப்படியாகப் பல ஆயிரம் நிலைமைகளைத் தோற்றுவித்து ஆராயந்து அதன் முடிவில் அவர் தமது மேற்கூறிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சூரிய மணலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கிரகம் இப்படியாக இருந்திருக்கலாம். |
சூரிய மண்டலத்தில் சூரியனை 9 கிரகங்கள் சுற்றுவதாகவே மிக நீண்டகாலம் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச வானவியல் நிபுணர்கள் மாநாட்டில் புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று முடிவு எடுத்து அதனுடைய கிரக அந்தஸ்தை ரத்து செய்தனர். புளூட்டோவை விலக்கி விட்டுப் பார்த்தால் சூரிய மண்டலத்தில் இப்போது நான்கு ராட்சத கிரகங்களும் நான்கு சிறிய கிரகங்களும் உள்ளன.
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ராட்சத கிரகங்கள். ராட்சதக் கிரகங்களை காலிப் பானையாக கற்பனை செய்து கொண்டால் வியாழனுக்குள் 1300 பூமிகளையும் சனி கிரகத்துக்குள் 700 பூமிகளையும் யுரேனஸில் 63 பூமிகளையும் நெப்டியூனில் 57 பூமிகளையும் போட்டு அடைத்து விடலாம்.
இவற்றுடன் ஒப்பிட்டால் பூமி, சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியவை சிறியவை. நான்கு சிறிய கிரகங்களில் பூமி தான் பெரியது.
சூரிய மண்டலம் |
சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கிரகம் இப்போதுள்ள ராட்சத கிரகங்களைப் போல வடிவில் பெரியதாக இருந்திருக்க வேண்டும் என்பது நெஸ்வோமியின் கருத்தாகும்.
சூரிய மண்டலம் தோன்றிய காலத்தில் நிலையற்ற தன்மை இருந்திருக்க வேண்டும். பூமியானது செவ்வாய், அல்லது வெள்ளி கிரகத்துடன் மோதுகின்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம். வியாழன் சூரியனுக்கு நெருக்கமாக வர முயன்றிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நிகழ்ந்து விடாதபடி ஏதோ ஒரு பெரிய கிரகம் வியாழனை இழுத்துப் பிடித்திருக்க வேண்டும். கடைசியில் அந்த கிரகத்தை விடப் பெரியதான் வியாழன் அந்த கிரகத்தை சூரிய மண்டலத்திலிருந்தே வெளியே தூக்கியெறிவதில் போய் முடிந்திருக்கலாம் என்று நெஸ்வொமி கூறுகிறார்.
நெஸ்வோமி தமது இந்தக் கருத்துக்கு வேறு ஓர் ஆதாரத்தையும் குறிப்பிடுகிறார். கிரகங்கள் தாமாகத் தோன்றுவதில்லை. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றித் தான் உண்டாகின்றன (சூரியனும் ஒரு நட்சத்திரமே). ஆனால் இப்போது எந்த நட்சத்திரத்தையும் சார்ந்திராமல் --வீட்டை விட்டு ஓடிப் போன பிள்ளை மாதிரியில் -- அண்ட வெளியில் ஏராளமான கிரகங்கள் காணப்படுகின்றன. ஆகவே சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் நெஸ்வோமியின் கட்டுரை The Astrophysical Journal Lettersஇதழில் வெளியாகியுள்ளது.
நெஸ்வோமியின இக்க்ருத்து சரிதானா என்பது வேறு பல விஞ்ஞானிகளும் இது போன்று ஆய்வுகளை நடத்தி உறுதிப்படுத்தினால் தான் ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !