சூழல் பாதுகாப்பின் அவசியம் - nelliadynet
Headlines News :
Home » » சூழல் பாதுகாப்பின் அவசியம்

சூழல் பாதுகாப்பின் அவசியம்

Written By www.kovilnet.com on Sunday, January 19, 2014 | 1:44 AM

மனிதனைச் சுற்றியுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் 'சூழல்' எனலாம். நாள்தோறும் நாம் காண்கின்ற எம்மைச் சுற்றியுள்ள சகல அம்சங்களையும் சூழல் என்பது குறித்து நிற்கும். அந்தவகையில் 'சூழல்' என்பது உயிர்வாழும் அங்கிகளுக்கு இடையில் காணப்படும் நிலைமைகளின் மொத்த கூட்டு என வரையறுக்கபடும். 

உயிரற்றனவாகிய பௌதீக, இரசாயன அசேதனங்களுக்கும் உயிர் வாழும் சேதனங்களின்  பரிமாணங்களுக்கும் இடையிலான இடையீடுகளின் விளைவே இச்சூழல் நிலைமைகளாகும். இங்கு அனைத்து அம்சங்களும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டு இடைத்தாக்கம் புரிகின்றன. உதாரணமாக இதனை ஒரு உணவுச்சங்கிலி வலை மூலம் விளங்கிக் கொள்ளலாம். கீழுள்ள படமானது ஒரு உயிர் இன்னொரு உயிரியுடன் இடைத்தாக்கம் புரியும் செயற்பாட்டை அவதானிக்கலாம். ஒரு மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரைக்கும் சூழலுடன் நேரடியாகவும்,மறைமுகமாகவும் இடைத்தாக்கம் செய்துகொண்டே வாழ்கின்றான்.



இச்சூழல் இரண்டு வகைப்படும்.
01. பௌதீக சூழல்/ இயற்கை சூழல்
02. பண்பாட்டு சூழல் /மனிதனால் உருவாக்கப்படும் சூழல்

இயற்கை சூழலும் பண்பாட்டு சூழலும்
பௌதீகசூழல் எனும்போது தரைத்தோற்றம், வடிகாலமைப்பு, காலநிலைத்தன்மைகள், தாவரங்கள் என்பன அடங்குகின்றன. பண்பாட்டுச்சூழல் எனும்போது பயிர்ச்செய்கை அம்சங்கள், நகரச் சூழல் அம்சங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட தெருக்கள் என்பனவற்றோடு இவற்றில் வாழுகின்ற சமூகச்சூழல் அம்சங்களையும் குறிக்கும். சூழல் எனும் பதமானது விபரண ரீதியாக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதை வரையறை செய்வது மிகவும் கடினமாகும். அண்மைக்காலங்களில் மனிதனைச் சூழ்ந்து காணப்படும் பௌதீக, பண்பாட்டு அம்சங்களுக்கு வழங்கப்படும் மறுபெயரே சூழல் எனப்படும். சுற்றுச்சூழல், சுற்றாடல், சூழல் என்பன ஒரே கருத்துடைய சொற்களாக வழங்கி வருகின்றன.
சூழலின் முக்கியத்துவம்
    உலகளாவிய ரீதியில் அநேக துறைகளில் இன்று சூழல் கல்வி முக்கிய இடம்பெறுகின்றது. இதற்கு அடிப்படைக்காரணம் அண்மைக்கால உலக சூழல் நெருக்கடியாகும். சர்வதேச சமூகத்தின் சூழல் பற்றிய ஈடுபாட்டை இனங்காண ஐக்கிய நாடுகள் சபையினால் 1972 ம் ஆண்டு ஸ்ரோக்கம் நகரில் நடைபெற்ற முதலாவது சூழல் மாநாட்டைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட உலக சூழல் தினமான ஜூன் 5 உம், 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் றியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவியுச்சி மாநாடும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும். உலகின் சுற்றுப்புற சூழ்நிலையை நோக்குவோமாக இருந்தால் 1960 களின் முற்பகுதியில் மனிதன் முதன்முதலாக தன்னுடைய சுற்றுச் சூழலைத் தொடர்புபடுத்தி அக்கறையாக சிந்திக்கத் தொடங்கினான். அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் மிக நீண்ட காலமாக சுற்றுச் சூழலைப்பற்றி விவாதித்து வருகிறான். இன்று கொள்கை வகுத்தலின் வௌ;வேறு சந்தர்ப்பத்திலும் பிரயோகிக்கப்படுகின்றது.
    இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்வுக்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும் சுற்றுச் சூழலையும் எந்தத் தேவைக்குப் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும் என்பது எவ்வளவு உணரப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு அவை பயன்படுத்தும் போதும் பொருளின் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் சிக்கலான கோட்பாடுகள் அரசியல் மற்றும் சமூகவியல் போன்ற துறைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். இங்கு இவை அனைத்திலும் கூட்டுச்சேர்க்கையின் விளைவாக சுற்றுச்சூழலில் ஒரு சிக்கலான நிலை தோன்றுகின்றது.
    இதன் விளைவாக தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. இந்த விடயத்தில் உள்ள சிக்கல்தன்மை, பாதகத்தன்மை மற்றும் இதன் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கின்றது. அபிவிருத்தியைப் பற்றிக் கருதும்போது பொருளாதார, அரசியல் மற்றும் சமூகவியல்சார் அழுத்தங்கள் அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் அதே வேளை அந்தக் காரணிகள் மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்ததாகவும் எம்மால் சிறியளவே விளங்கி கொள்ளப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் என்ற விடயத்திற்கும் அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவும் விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படுகின்றது. இதற்கு காரணம் மனிதன் சுற்றுச் சூழலின் இயற்கைச் சமநிலையைப்பற்றி பூரணமாக அறியாமல் இருப்பதாகும். அண்மைய காலங்களில் விஞ்ஞானத்துறையானது. மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் எம்மால் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் சம்மந்தமான அறிவை இன்னும் பூரணமாக பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இந்த அறிவை வளங்களைப் பயன்படுத்தல் மற்றும் அவற்றினைப் பேணுதல் போன்றவற்றிலும் மற்றும் அபிவிருத்தி, நின்று நிலைக்கும் பயன்பாடு போன்றவற்றிலும் கூட எம்மால் பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது.
    சுற்றுச் சுழலியல் என்ற கோட்பாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுற்றுச் சூழலைப் பேணல் மற்றும் நின்று நிலைக்கும் பயன்பாடு ஆகியவற்றில் இருந்தே தோன்றின. ஆனால் அவை தற்போது அந்தக் குறிக்கோள்களின் உண்மையான நோக்கங்களில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட தடுமாற்றங்களாகும். இத்துடன் இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற ஒரு கோட்பாடு கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சுற்றுச் சூழலுடன் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு துறையினையும் எடுத்துக்கொண்டாலும் கூட அந்தத் துறைகளினுள் அகமுரண்பாடுகளும் வௌ;வேறு துறைகளுக்கிடையிலான முரண்பாடுகளும் காணப்படுவதால் ஒரு மோதலான நிலை தோன்றுகின்றது.

சூழல் மாசடைதல்
    உலகளாவிய ரீதியில் நாடுகளை பொதுவாக அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள், என பிரிக்க முடியும். இத்தகைய இரண்டு வகையான நாடுகளிலும் குடித்தொகை அதிகரிப்பு, நகராக்கவிருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பது பொதுவாகக் காணப்படும் விடயமாகும். குடித்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே மனிதன் தனக்கு ஏற்படும் தேவைகளை நிவர்த்தி செய்ய முற்படும் போது அதன் விளைவாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே சூழல் மாசடைதல் என்பது காணப்படுகின்றது. நாம் அறிந்தும் அறியாமலும் சூழல் மாசாக்கங்களில் ஈடுபடுகின்றோம்.  அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மேற்க்கொள்ளப்படும் கைத்தொழில் நடவடிக்கைகள், அபிவிருத்தி செயற்பாடுகள் போன்ற அனைத்து செயற்பாடுகளினாலும் சூழல் மாசாக்கப்படுகின்றது. இதனை யாராலும் மறுக்கமுடியாது. எனினும் இந்நாடுகள் சூழல் மாசாக்கங்களில் தம்மில் தவறில்லை என்றும் ஏனைய நாடுகளை குற்றம் சாடியும் வருகின்றன. இப்போக்கானது தொடர்ந்து செல்லுமானால் உலக அழிவு என்பது மனித இனத்தாலேயே ஏற்ப்படுத்தப்படும் என்பதில் எவ்வித அச்சமுமில்லை.
    எனவே இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒழுங்கானமுறையில் சட்டதிட்டங்களை கடைப்பிடித்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படவேண்டும்.
    இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது அது சூழல் தொகுதியில் அல்லது சுற்றாடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்மாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். இன்னொரு வகையில் கூறினால் இயற்கை சூழல் என்பது தூய்மையானது, ஆனால் பலவகைப்பட்ட மனித நடவடிக்கைகளினால் அச்சூழலானது மாசாக்கப்படல் அல்லது இயற்கை வட்டங்கள் அல்லது இயற்கை சமநிலை பாதிக்கபடுதலானது. சூழல் மாசடைதல் எனப்படும்.
அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. அந்த வகையில் சூழலிற்கு விடப்படும் பாதார்த்தங்கள் அல்லது வாயுக்கள் அல்லது அங்கு தாவர விலங்கினங்கள் வாழ்வதற்கு பொருத்தமில்லாத மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். எவ்வாறு இருந்தும் மேலே கூறப்பட்ட வரைவிலக்கணத்தினை ஒருபடி முன்னோக்கி பார்த்தால் சூழல் மாசடைதல் என்பதற்கு மிகப்பபொருத்தமான வரைவிலக்கணம் பின்வருமாறு முன்வைக்கப்படுகின்றது. 'தொகுதியில் அல்லது சூழலில் ஏற்படுத்தப்படும் பௌதீக இரசாயன உயிரியல் இயல்புகளின் விரும்பத்தகாத மாற்றம் அல்லது ஏற்படுத்தப்படும் ஆபத்தான நச்சுவிளைவுகளின் தொற்றுகையே சூழல் மாசடைதல்' எனப்படும்.

இவ்வாறு சூழல் மாசடைவதன் விளைவாக சூழலில் உள்ள மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களும் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலுக்கு சர்வதேச ரீதியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக நாடுகளின் நகர்ப்புற அபிவிருத்தி காரணமாக இன்று நகரச்சூழல் பெருமளவில் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. நகரங்களில் வசதிவாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற மக்கள் நகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். மொத்த குடித்தொகையில் 40 வீதமான மக்கள் நகரப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்கின்றனர். இதன் காரணமாக கிராமங்களை விட குடித்தொகைச்செறிவு நகரங்களில் அதிகமாக உள்ளதுடன், சூழல் மாசடைதல் பிரச்சினைகளும் அதிகமாக காணப்படுகின்றது. மேற்கூறப்பட்ட வகையில்; சூழல் மாசடைதல் இடம்பெறுகின்றது.
    எனவே இதனைக் கருத்திற்கொண்டு நாம் ஒவ்வொருவரும் சூழல் பற்றிய அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயற்படுவோமாயின் பாரியளவிலான சூழல் மாசாக்கத்தினை கட்டுப்படுத்தலாம். நாம் எமது அயற் சூழலை நேசிப்பதன் மூலம் இதனை பேணலாம்.

(ஆக்கம்:- அ.பிரசாந்தன், கிழக்குப்பல்கலைக்கழகம்)
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template