எந்த ஒரு வெடிப்பு நிகழ்ந்தாலும், வெடித்துச் சிதறும் பொருட்கள் வேகமாக நாலாப்பக்கமும் பரவலாக சென்று விழுவதைக் கண்டுள்ளோம். அவ்வாறு விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்புவிசை. ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் இந்த வெடிப்பு நிகழுமேயானால் என்னவாகும்? வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்; கீழே விழாது. வேறு ஏதாவது ஒரு சக்தி தடுத்து நிறுத்தாவிட்டால் வேகமாய் செல்லும் பொருள் அதன் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.
வெளியில் நாம் ஒரு கிரிக்கெட் பந்தை மட்டையால் அடித்தால் அந்த பந்து சென்று கொண்டே இருக்கும்; விழவே விழாது. சிக்செர் எல்லாம் தாண்டிச் சென்றுவிடும். வேறு யாராவது அடித்த வேறு ஒரு பந்து, நாம் அடித்த பந்தின் அருகில் வந்தால் இரண்டு பந்தும் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு இணைந்துவிடும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் அதனதன் நிறைப்படி ஈர்ப்புவிசை இருக்கின்றது.
(சூரியன் உருவாகியவுடன் ஏற்பட்ட அதிபயங்கர வெடிப்புடன் உண்டான புகையும், தூசும் இப்படிதான் தூக்கி எறியப்பட்டு சூரியனைச் சுற்ற, அவை ஈர்ப்பு விசையால் இணைந்து தான் இந்த பூமியும் மற்ற கோள்களும் உருவாகின)
மா வெடிப்பிற்குப் பிறகு விரிவடைந்த பிரபஞ்சம் அதன் வெடிப்பு வேகம் குறையும்போது பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலம் போல உள்ள எண்ணற்ற மண்டலங்களின் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு சுருங்கி, தொடங்கிய நிலைக்கே வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். அதனை மா சுருக்கம் (big crunch) என்று அழைத்தனர். மாவெடிப்பு ஏற்பட்டு 1300 கோடி ஆண்டுகள் ஆனதனால் விரிவாக்க வேகம் குறைந்து ஈர்ப்பு விசையினால் இந்த சுருக்கம் ஆரம்பித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
ஆனால் அதிநவீன தொலைநோக்கியில் பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறையவில்லை என்றும், மாறாக பிரபஞ்சம் வேகமாய் விரிவடைவதை கண்டறிந்தபோது விஞ்ஞானிகள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள் . இந்த வேகத்தில் விலகிச் சென்றுகொண்டிருந்தால் ஈர்ப்பு விசை வலுவிழந்துவிடும். அதன் விளைவு மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதாவது நம்மைச் சுற்றி உள்ள பொருட்கள் எல்லாம் பூமியிலிருந்து மேலே எழுந்து முதலில் மிதக்க ஆரம்பிக்கும். எல்லாப் பொருட்களும் அணு அணுவாகப் பிரிந்து வெளியில் விலகிச் சென்றுவிடும். மனிதர்களும், விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் ஈர்ப்புவிசை தான் இவையனைத்தையும் இழுத்து இணைத்து வைத்திருக்கின்றன. முன்னர் கூறியதுபோன்று சூரிய குடும்பதில் உள்ள எல்லா கிரகங்களும் சூரியனை விட்டுப் பிரிந்து சென்றுவிடும். விரிவாக்கக வேகம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் பிரபஞ்சம் அழியும் என்ற கோட்பாட்டை பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆனால் கனடா நாட்டில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பரம்சிங் என்ற மதிப்பிற்குரிய இந்திய விஞ்ஞானி இந்த விரிவாக்கம் தொடர்ந்து நடக்காது, பிரபஞ்சம் ஈர்ப்புவிசையால் மீண்டும் சுருங்கும் என்கிறார். அவர் ஒரு புதிய கணக்கை வெற்றிகரமாக வடித்துள்ளார். அந்த கணக்கு கூறுவது என்னவென்றால் ஈர்ப்பு விசையினால் சுருங்கும் பிரபஞ்சம் மிக மிகச் சிறியதாக சுருங்கிவிட்டால் ஈர்ப்புவிசை எதிர்விளைவுகளை ஏற்படுத்தி பிரபஞ்சத்தை விரிவாக்கும் என்பதுதான். அதற்கு 'big bounce' என்று பெயர் கொடுக்கிறார். நாம் வாழும் இந்த பிரபஞ்சம் அப்படிதான் உருவாயிருக்கின்றது என்று தெளிவுபட கூறுகின்றார்.
விரிவடைதலும் சுருங்குவதும் என்ற திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்ச்சியால்தான் நாம் இப்போது வாழும் இந்தப் பிரபஞ்சம் இந்த நிலையில் இருக்கின்றது. 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் மாவெடிப்பின் மூலமாக பிரபஞ்சம் முதன் முதலாகத் தோன்றவில்லை. முன்னரே இருந்த பிரபஞ்சம் சுருங்கி விரிவடைந்ததினால் தான் அது பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றது என்று கூறுகிறார் .ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து பிரபஞ்சம் உருவாகவில்லை என்று அவர் உறுதிபட கூறுகின்றார். மிகச் சிறிதாக சுருங்கிய பிரபஞ்சத்தை 'ஒன்றுமில்லாத நிலை' என்று கூறமுடியாது என்கிறார்.
ஆனால் எப்பொழுது பிரபஞ்சம் முதன்முதலில் தோன்றியது என்ற கேள்விதான் ஆராயப்பட வேண்டியது என்கிறார். அவரது கோட்பாடும் பலரது பாராட்டைப் பெற்றிருக்கின்றது
முன்னர் ஒரு பிரபஞ்சத்தின் பல கருந்துளைகள் மூலமாக புதிய பல பிரபஞ்சங்கள் தோன்றியிருக்கின்றது என்று சில விஞ்ஞானிகள் கூறும் கோட்பாட்டைப் பற்றி பார்த்தோம். மற்றொரு கோட்பாடு பிரபஞ்சம் தோன்றி விரிவடைதாலும், பின்னர் சுருங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளினால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகின்றது..
இவை இரண்டும் இணைந்தே இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கலாம் அல்லவா?
பிரபஞ்சம் கருந்துளைகள் மூலமாக பல புதிய பிரபஞ்சங்களை உண்டாக்குவது, ஒரு மரம் முளைத்து அது பல விதைகளை உண்டுபண்ணி பெருகுதலை ஒத்தும், விரிவடைந்து சுருங்கும் பிரபஞ்சம் ஒரு வாழை மரம் வளர்ந்து பெரிதாகி, பின்னர் அழிந்து மீண்டும் பூமியின் அடியில் உள்ள கிழங்கிலிருந்து முளைப்பது போலவும் உள்ளதல்லவா? பூமியில் உயிரினங்கள் எப்படி பெருகுகின்றனவோ அதேபோல பிரபஞ்சமும் பெருகுகின்றன என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் பல தடைகற்களைக் கடந்து அனைத்து உண்மைகளையும், மனித குலத்திற்கு வெற்றிகரமாக வழங்குவார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !