இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பலருக்கும் செவ்வாய் கிரகத்தைக் கண்டால் ஆகாது. செவ்வாய் தீங்கு விளைவிக்கின்ற கிரகம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். செவ்வாய் கிரகத்தைப் பிடிக்காது என்பதால் செவவாய்க் கிழமையைக் கூட ஒதுக்கிவிடுவார்கள். அக்கிழமையில் புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்ப மாட்டாகள். ஆனால் வானவியல் நிபுணர்களுக்கும் விண்வெளித் துறையினருக்கும் செவ்வாய் மிகவும் வேண்டப்பட்ட கிரகமாகும்.
நீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை. சிவந்த நிறம் செவ்வாயின் சுற்றுப்பாதை. |
டெலஸ்கோப் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதிகம் ஆராயப்பட்ட கிரகம் செவ்வாய் தான். வாய்ப்பான சமயத்தில் செவ்வாய் கிரகத்தை விடிய விடியத் தொடந்து ஆராய்ந்து கொண்டே இருக்கலாம். மனிதன் வேறு ஒரு கிரகத்துக்கு போக விரும்பினால செவ்வாய் கிரகம் ஒன்றுக்குத் தான் செல்ல முடியும். ஆகவே தான் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய்க்குத் ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டன. இப்போது கியூரியாசிடி விண்கலம் அனுப்பப்படுகிறது.
மற்ற கிரகங்களை விட செவ்வாயைப் பற்றித் தான் நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும் செவ்வாயைப் பின்புலனாக வைத்து நிறைய திரைப்படங்களை எடுத்துள்ளனர்.
சூரிய மண்டலத்தில் பூமியும் செவ்வாயும் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளில் அமைந்துள்ளன. இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாயும் ஒன்று. வானவியலின்படி செவ்வாய் இப்போது சிம்ம ராசியில் உள்ளது. நீங்கள் அதிகாலை நான்கு மணி வாக்கில் எழுந்து வானைப் பார்த்தால் செவ்வாய் கிரகம் தலைக்கு மேலே தெரியும். சிவந்த நிறத்தில் ஒளிப்புள்ளியாகத் தெரியும். அதன் நிறத்தை வைத்துத் தான் அக்கிரகத்துக்கு செவ்வாய் என்று நமது முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.
வடிவத்தில் செவ்வாய் கிரகம் பூமியை விடச் சிறியது. செவ்வாய் கிரகத்தில் மலைகள் உள்ளன. வட்ட வடிவப் பள்ளங்கள் நிறைய உள்ளன. நதிகள் ஓடிய தடங்கள் உண்டு. ஆனால் நதிகள் இல்லை. செவ்வாய் கிரகம் வெறும் பொட்டல். உயிரினம் ஏதுமில்லை.
இடது புறம் பூமி. வலது புறம் உள்ளது செவ்வாய். |
செவ்வாய் கிரகத்தில் உள்ள அவிந்து போன எரிமலை எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானது. சூரிய மண்டலத்திலேயே இது தான் மிக உயரமான சிகரமாகும்.
பல்வேறு காரணங்களால் மனிதன் புதன் கிரகத்தில் அல்லது வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தில் போய்க் குடியேற முடியாது. சந்திரனும் ஒத்து வராது. சந்திரனில் பகல் என்பது இரண்டு வாரம். இரவும் அப்படித்தான். இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகத்தில் பகல் என்பது 12 மணி நேரமே. இரவும் அதே போலத்தான். தவிர,செவ்வாய் கிரகத்தில் காற்று மண்டலம் உள்ளது. சந்திரனில் இல்லை.
செவ்வாயில் சூரிய அஸ்தமனம். ஸ்பிரிட் ஆய்வுக்க்லம் எடுத்த படம். |
பூமியின் காற்று மண்டலத்தில் நாம் சுவாசிப்பதற்கு மிக அவசியமான ஆக்சிஜன் வாயு 21 சதவிகித அளவுக்கு உள்ளது. செவ்வாயில் ஆக்சிஜன் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு. கார்பன் டையாக்சைட் 95 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நவீன தொழில் நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி செவ்வாயின் கார்பன் டையாக்சைடிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்துப் பயன்படுத்தலாம். தவிர, பெரிய பசுமைக் குடில்களை அமைத்து அவற்றுக்குள் செடி கொடிகளை வளர்த்தால் ஆக்சிஜன் கிடைக்கும்.
செவ்வாயின் நிலப்பரப்பு. தரை சிவப்பாக உள்ளதைக் கவனிக்கவும். |
செவ்வாய் கிரகத்தில் என்றோ பெரிய நதிகள் ஓடியதற்கான அடையாளங்கள் உள்ளன என்றாலும் இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை. எனினும் செவ்வாயின் வட துருவப் பகுதியில் நிலத்துக்கு அடியில் உறைந்த நிலையில் - பனிக்கட்டி வடிவில் - நீர் உள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற முடியும். எனினும் வெளிக்காற்று நுழைய முடியாத, அத்துடன் வலுவான கூரை கொண்ட, கூட்டுக்குள் தான் வாழ இயலும். செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தியானது அல்ல என்பதால் சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரக்கூடிய ஆபத்தான கதிர்களிலிருந்து பாதுகாப்பு தேவை. ஆகவே தான் இப்படி கூட்டுக்குள் வாழ்ந்தாக வேண்டும்.
செவ்வாயில் இப்படியாக நிறுத்தப்பட்டுள்ள கூட்டுக்குள் தான் வாழ வேண்டும் . படம் : நாஸா |
பூமி நல்ல அடர்த்தியான காற்று மண்டலத்தைப் பெற்றுள்ளது என்பதால் அக்காற்று மண்டலம் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. அத்துடன் விண்வெளியிலிருந்து வந்து விழும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் உராய்வு காரணமாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. இப்படியான பாதுக்காப்பை செவ்வாயின் காற்று மண்டலம் அளிக்காது.
செவ்வாயில் காற்று மண்டலத்தின் அடர்த்தியைத் திட்டமிட்ட முறையில் செயற்கையாக அதிகரிக்க முடியும் என்றும் காற்று மண்டல ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்க முடியும் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு Terraforming என்று பெயர். இதற்கான பல வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிவியல் ரீதியில் சாத்தியமே. செவ்வாயின் வட துருவப் பகுதியிலிருந்து தண்ணீரைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமே என்று கூறப்படுகிறது.
செவவாய் கிரகம் இப்போது |
செவ்வாய் கிரகத்தில் மேலும் இரு பிரச்சினைகள் உள்ளன். பூமியில் உள்ளது மாதிரியில் அங்கு வெயில் கிடையாது. குளிர், கடும் குளிர் என இந்த இரண்டைத்தான் காண முடியும். சில சமயங்களில் செவ்வாயில் புழுதிப் புயல் தோன்றும். வானமே தெரியாது. கிரகம் முழுவதையும் சூழ்ந்து வீசுகின்ற இப்புயல பல வாரங்களுக்கு நீடிக்கும்.
செவ்வாயின் காற்று மண்டலத்தை மாற்றியமைத்தால் இப்படி காட்சி அளிக்குமாம் |
இவை அனைத்தையும் சமாளித்து செவ்வாயில் வாழ முடியலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர் .எவ்விதமான கூடாரங்கள் தேவை, ஆக்சிஜனை எப்படி உற்பத்தி செய்து கொள்வது, செடி கொடிகளை எவ்விதம் வளர்ப்பது என பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான திட்டங்கள் ஏட்டளவில் தயாரிக்கப்பட்டுத் தயாராக உள்ளன. தனியார் துறை நிபுணர்களும் பல திட்டங்களை தீட்டியிருக்கிறார்கள்.
செவ்வாயில் திட்டமிட்ட ரீதியில் மககளைக் குடியமர்த்த வேண்டும் என்று கூறும் தனியார் அமைப்புகள் பல உள்ளன. Mars Society, Red Colony போன்றவை அவற்றில் அடங்கும். செவ்வாயில் மனிதன் குடியேறுவதானால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறி கடந்த காலத்தில் எண்ணற்ற கட்டுரைகள் வெளியாகியுள்ளன. நிபுணாகள் எழுதிய பல நூல்களும் வெளியாகியுள்ளன். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நோக்கில் தான் செவ்வாய் கிரகம் மேலும் மேலும் விரிவாக ஆராயப்படுகிறது.
செவ்வாய்க்குச் செல்வதற்கான ராக்கெட்டுகளையும் விண்கலங்களை உருவாக்கி மற்ற ஏற்பாடுகளையும் செய்வதானால் பல லட்சம் கோடி ரூபாய் தேவை. இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவால் மட்டுமே செவ்வாய்ப் பயணத் திட்டத்தை மேற்கொள்ள இயலும். அமெரிக்காவுக்கு பல நிதிப் பிரச்சினைகள் இருக்கும் போது செவ்வாய்ப் பயணத் திட்டத்துக்கு இப்போது அவசரம் ஏதுமில்லை தான்.
ஆனால் நாட்டின் கௌரவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று நினைத்தால் செலவு அம்சம் பெரிதாகத் தெரியாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (இப்போதைய ரஷியாவையும் மற்றும் பல நாடுகளையும் உள்ளடக்கிய பெரிய நாடு) இடையே கடும் போட்டியும் விரோதமும் நீடித்து வந்தது. அப்போது சோவியத் யூனியன் விண்வெளியில் மேலும் மேலும் சாதனைகளை நிகழ்த்தி உலகை அதிசயிக்க வைத்தது. அவ்வித நிலையில் அமெரிக்கா மீதான மதிப்பு குறையலாயிற்று.
அக்காலகட்டத்தில் தான் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சாதனை நிகழ்த்துவோம் என அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1961 ஆம் ஆண்டில் சபதம் ஏற்றார். சோவியத் யூனியனை மிஞ்ச வேண்டும் என்ற வேகத்தில் அமெரிக்க அரசு பெரும் பணத்தை ஒதுக்கிய போது அமெரிக்க சட்டமன்றம் உற்சாகத்துடன் அனுமதி அளித்தது. நாட்டு கௌரவமே முக்கியம் என்று கருதி மக்களும் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு பெரும் பணம் செலவிடப்படுவதை ஆட்சேபிக்கவில்லை.
ஆனால் இப்போதுள்ள நிலையில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்குப் பெரும் பணம் ஒதுக்குவதை அமெரிக்க சட்டமன்றமோ, அமெரிக்க மக்களோ ஆதரிக்க மாட்டார்கள். அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.
சீனா இப்போது விண்வெளித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. வருகிற ஆண்டுகளில் சீனா செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பப்போவதாக அறிவித்தால் உடனே அமெரிக்கா வீறு கொண்டு எழுந்து சீனாவை முந்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செவ்வாய்ப் பயணத் திட்டத்தை அவசர அடிப்ப்டையில் மேற்கொள்ள முற்படலாம்.
‘
செவ்வாய் கிரகம் பற்றிய தொடரின் மற்ற பதிவுகள்:
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !