"பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்! அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும். எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பேயில்லை! அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ – கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர வாய்ப்பேயில்லை! பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.
சில மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள கிரகங்களால் பாதிப்பு இல்லை என்கின்ற பொழுது பல மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களால் பாதிப்பு என்பது பித்தலாட்டமாகும். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு நொடிக்கு 1,76,000 கிமீ வேகத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தூரம். பத்து ட்ரில்லியன் கிமீ க்கு சற்றே குறைவு. அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.
சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடைவிடாமல் தாக்கிக் கொண்டு இருக்கின்றன! இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே புவியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்துவிடும் போது வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா?
சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதித்து விடுமோ என்ற அச்சத்திற்கே இடமில்லை!
கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! ஏதாவது கோள் மனிதரது வாழ்க்கை முறையைப் பாதிக்கும் என்றால் அது நாம் வாழும் இந்தப் புவிதான். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் எமது உடல்நலத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால் சோதிடர்களுக்கு புவி ஒரு கோள் என்பது தெரிந்திருக்கவில்லை. அதனால் அதை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
இந்நிலையில் கிரகங்களால் தனி மனித வாழ்வில் தாக்குதல் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று சோதிடம் சொல்வது ஏற்கக் கூடியதேயல்ல! அது ஒரு புரட்டாகும்.
தமிழினம் கல்வி, பொருண்மியம், தொழில், கலை, பண்பாட்டுத் துறைகளில் மேலோங்க வேண்டும் என்றால் அது மூடநம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும். நாமே நமது மூளைக்குப் போட்டிருக்கும் விலங்கை உடைக்க வேண்டும்.
இந்த இடத்தில் முண்டாசுக் கவிஞன் பாரதி தமிழனைப் பார்த்துக் கூறிய அறிவுரையை எல்லோரும் ஊன்றிப் படிக்க வேண்டும். படிப்பதோடு நின்று விடாமல் மூடநம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும். புது மனிதர்களாக வாழப் பழக வேண்டும். பாடுபட்டுப் பனியிலும் வெய்யிலும் உழைக்கும் பணத்தை திருவிழா, தேர், தீர்த்தம், பூசை, பரிகாரம் என்பவற்றில் கரியாக்கக் கூடாது. அந்தப் பணத்தை வன்னியிலும் சம்பூரிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்தக் கொடுத்தால் நிறையப் புண்ணியம் கிடைக்கும்!
“புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே! தமிழா! உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆடயிடங் கொடுத்து விட்டாய்! தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள் எனப் பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.”
எனவே ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி ஒரு இயற்கையான நிகழ்வு. குரு பார்வை கோடி பெறும் என்பது கோள்கள் பற்றிய சரியான ஆய்வும் அறிவும் இல்லாத காலத்தில், குறிப்பாகத் தொலைநோக்கி, விண்வெளிக் கலங்கள் இல்லாத காலத்தில் மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கை ஆகும்.
மண்ணையும் விண்ணையும் துல்லியமாக ஆய்வு செய்வதில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய அறிவியல் காலத்தில் தமிழர்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு பகுத்தறிவோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பகுத்தறிவு புலன் அறிவு, கவனித்தல், சோதித்து அறிதல், ஊகித்து அறிதல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அறிவை அடித்தளமாகக் கொண்டது. பழக்கத்தின் காரணமாக நமது முன்னோர்கள் நம்பிவந்த நம்பிக்கைகளை நாம் கண்மூடித்தனமாக நம்பி வருகிறோம். இன்று அறிவியல் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. வானியலாளர்கள் மண்ணையும் விண்ணையும் அளந்து வருகிறார்கள். அந்த அறிவியலின் அடிப்படையில் எமது நம்பிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும். செக்கு மாடுகள் போல் ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வரக்கூடாது.
வியாழன் (குரு) புவியிலிருந்து 588.50 மில்லியன் கிமீ தொலைவில் புவியைப் போலவே ஞாயிறைத் தன்பாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் வாயுவினால் ஆன கோள். அது ஒரு இயற்கை நிகழ்ச்சி! வியாழன் கடந்த 5,000 கோடி ஆண்டுகளாக ஞாயிறைச் சுற்றிய வண்ணம் உள்ளது. இராசிகள், இராசி சக்கரம், வீடுகள் எல்லாம் கற்பனை. மனிதன் தானாக உருவாக்கிக் கொண்டவை. எனவே 588.50 மில்லியன் (58.85 கோடி) கிமீ தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் வியாழ கோளால் புவியில் வாழும் மக்களுக்கு நன்மையும் இல்லை தின்மையும் இல்லை!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !