மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி? - nelliadynet
Headlines News :
Home » » மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?

மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?

Written By www.kovilnet.com on Tuesday, April 8, 2014 | 6:29 PM

Temple images
புறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. புலன்களின் மேல் ஏற்படும் பதிவுகளாலுண்டான வெளிப்புறத் தூண்டுகோலாலோ உணர்வு அல்லது நினைவின் மூலம் ஏற்படும் உட்புறத் தூண்டுகோலினாலோ உண்டாகலாம். ஒவ்வொரு தனித்த புலன் மேல் பதிவும் சிக்கலான உணர்ச்சி மூட்டையேயாகும். வெளிப்பாகத்திலிருந்து மூளையை நோக்கிச் செலுத்தப்படுகின்றன உணர்ச்சிகள். மனதின் அடித்தட்டில் ஏற்படும் ஒரு விழிப்புத்தன்மையே உணர்ச்சி. தனித்த புலன்மேல் பதிவிலிருந்து ஏற்படும் விழிப்புகளின் சேர்க்கைகள் மிகவும் சிக்கலானவை. புலன்களின் வழியாக ஏற்படும் மனஎழுச்சிகளை தியான சமயத்தில் வெறுத்தொதுக்குங்கள். எந்தவித கருத்துக்களையும் நினைவுக்குக் கொண்டுவருவதை விட்டொழியுங்கள். வேறு எண்ணமின்றி கடவுளது ஒரே எண்ணத்திலேயே மனோசக்தி முழுவதையும் ஒன்றச் செய்யுங்கள்.
மற்றெல்லா புலன்வழிப் பதிவுகளையும் எண்ணங்களையும் தவிருங்கள். மனத்தின் அடிப்படையில் எழும் எதிர்ச் செயல்களினின்று தோன்றும் சிக்கல்களை அகற்றுங்கள். மனதிலிருந்து ஒரே எண்ணத்தை மாத்திரமே பிரித்தெடுங்கள். மனதில் மற்றெல்லா தொழில்களையும் மூடிவிடுங்கள். இப்பொழுது மனம் ஒரே ஒரு எண்ணத்தினால் மாத்திரம் நிரப்பப்படும். நிஷ்டையும் பின்தொடரும். ஒரு எண்ணம் அல்லது ஒரு செயலைப் பன்முறை செய்தலானது அவ்வெண்ணம் அல்லது செயலின் பூரணத்தன்மைக்கு வழிகோலுவதைப் போல், ஒரே எண்ணத்தின் முறையொன்றைப் பல தடவை செய்தலானது ஒன்றித்தல், தியானம் இவற்றின் பூரணத்வத்திற்கு வழிகாட்டுகின்றன.
கீழ்க்காணும் பிரயோகங்களை கீதையில் பின்வரும் அநேகவிடங்களில் காணலம்.
அனன்ய சேதா; மச்சித்த; நித்யயுக்த; மன்மன; ஏகாக்ரம் மன; ஸர்வ பாவ். இப்பிரயோகங்கள் எல்லாம் நீங்கள் உங்கள் முழு மனதையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டியதிருக்கும் என்பதையே குறிக்கின்றன. அப்பொழுது தான் நீங்கள் ஆத்மானுபூதியை அடைவீர்கள். மனதின் ஒரு கதிர் கூட வெளியே செல்லுமேயாகில் தெய்வீக உணர்வைப் பெறுதல் அசாத்தியம். உங்கள் மனதில் வி÷க்ஷபம் நிலவிநிற்குமேயாகில் தியானத்தில் நிலைத்து நிற்கவும் மனச்சாந்தியைப் பெறவும் உங்களால் இயலாது. மனசஞ்சலமே வி÷க்ஷபமாகும். ரஜஸே வி÷க்ஷபமாகும். மனதில் வி÷க்ஷபமும் ரஜஸும் சேர்ந்தே இருக்கின்றன. நீங்கள் வி÷க்ஷபத்தை ஒழிக்க விரும்பினால் இச்சையடக்கம், இறைவனிடத்தில் ஆத்ம சரணாகதி மூலமாக இவ்வநித்ய ஆசைகளை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்.
மனத்தூய்மை: நீங்கள் ஆத்மானுபூதியை அடைய விரும்பினால் பரிசுத்தமான மனதைப் பெற்றிருக்க வேண்டும். ஆசைகள் அவாக்கள், கவலைகள், மயக்கம், கர்வம், காம உணர்ச்சி, பற்றுதல், விருப்பு வெறுப்புகள் முதலியவற்றிலிருந்து மனம் விடுபட்டாலொழிய பரமசாந்தி, மாசற்ற இன்பம், நித்திய வாழ்வு முதலியவற்றின் சாம்ராஜ்யத்தினுள் புக அதனால் இயலாது. மனம் ஒரு பூங்காவனத்துடன் ஒப்பிடப்படுகிறது. உழுதல், உரமிடுதல், களை அறுத்தல், முட்களை நீக்குதல், மரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் முதலியவற்றின் மூலமாக நீங்கள் ஒரு தோட்டத்தில் பூ, பழம் முதலியவற்றை அபிவிருத்தி செய்ய முடிவதைப்போல் பேராசை, சினம், கஞ்சத்தனம், மருட்சி, கர்வம் முதலிய அசுத்தங்களை அகற்றி தெய்வீக எண்ணங்களாகிய தண்ணீரைப் பாய்ச்சி உங்கள் மனமாகிய பூங்காவில் பக்தியென்னும் மலரை நீங்கள் உற்பத்தி செய்யலாம். முட்களும் களைகளும் மழை காலத்தில் தோன்றி கோடைக்காலத்தில் மறைகின்றன. ஆனால் அவைகளின் விதைகள் பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. ஒரே ஒருதரம் மழை பெய்தவுடன் விதைகள் மறுபடியும் முளைத்துக் குருத்து விடுகின்றன. இதுபோலவே, மனதின் விருத்திகளும் மேல்தளத்தில் தோன்றுகின்றன. பிறகு மறைந்து, சமஸ்காரங்களின் ரூபத்தில் நுண்ணிய விதை நிலையை மேற்கொள்கின்றன. அக அல்லது புறத் தூண்டுகோலினால் இந்த சமஸ்காரங்கள் மறுபடியும் விருத்திகளாகின்றன. களைகள், முட்களின்றி பூங்காவனம் சுத்தமாக இருக்கையில் இனிய பழங்களை நீங்கள் பெறலாம். இதுபோலவே, மனம் சுத்தமாக இருக்கையில் பேராசை, கோபம் முதலியவற்றிலிருந்து விலகி மனம் தனித்திருக்குங்கால், நல்ல ஆழ்ந்த தியானமாகிய பழத்தை நீங்கள் பெறலாம். ஆகவே முதலில் மனதை அதன் அசுத்தங்களிலிருந்து சுத்தப்படுத்துங்கள். பிறகு தானாகவே தியான ஊற்று பெருக்கெடுத்தோடும்.
நீங்கள் ஒரு தோட்டத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க விரும்பினால், களைகள் முட்கள் பிற செடிகள் முதலியவற்றை நீக்குவதோடல்லாமல் மழைக்காலத்தில் மறுபடியும் மறுபடியும் துளிர்விடும் ஏனைய விதைகளையும் நீங்கள் நீக்கவேண்டியிருக்கும். இதேபோல் நீங்கள் சமாதி அவஸ்தையையும், பரிபூரண சுதந்திரத்தையும் பெற விரும்பினால் மனதின் விருத்திகளாகிய பெரிய அலைகளை மட்டும் அகற்றுவதோடல்லாமல், மறுபடியும் மறுபடியும் விருத்திகளை முளைக்கச் செய்யும் பிறப்பிற்குரிய விதைகளான சகாரங்களையும் இல்லாதாக்க வேண்டியதிருக்கும். ஈரமுள்ள பச்சை மரமொன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது தீப்பற்றிக் கொள்ளாது. ஆனால் காய்ந்த மரம் ஒன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது உடனே தீப்பற்றி எரியும். அதுபோல், தங்கள் மனதைப் பரிசுத்தப் படுத்தாதவர்களால் தியானமாகிய தீயை எழுப்ப முடியாது. அவர்கள் தியானத்திற்கு உட்காருகையில் தூங்கிக் கொண்டோ, உடையை சரிபடுத்திக் கொண்டோ, அல்லது மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டோ இருப்பர். ஆனால் தங்கள் மனதிலிருக்கும் அசுத்தங்களை ஜபம், சேவை, ஈகை, பிராணாயாமம் முதலியவற்றால் நீக்கியவர்கள் ஆசனத்தில் அமர்ந்த மாத்திரத்திலேயே, தியானத்திலாழ்ந்து விடுவர். நன்கு உலர்ந்தமனம் தியானத்தீயுடன் உடனே தீப்பற்றிக் கொள்ளும். தினந்தோறும் ஒரு தட்டை நீங்கள் கழுவாவிடில் அது ஒளி மழுங்கிவிடும். மனதிற்கும் இதேநிலை தான். ஒழுங்காகத் தியானப் பயிற்சியுடன் மனம் சுத்தமாக வைத்திருக்கப்படாவிட்டால் அது அசுத்தமடைகிறது. தியானம் வியக்கத்தகும் வகையில் மன அழுக்கை நீக்குகிறது. ஆகையினால் ஒழுங்காக விடியற்காலையில் தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.
எந்த ஒரு ஜீவப்பிராணிக்கும் பேராசை, சுயநலம், வெடுவெடுப்பு, தொந்தரவு முதலியவற்றால் துன்பம் கொடுக்காதீர்கள். சமர்செய்யும் உணர்ச்சியையும் காரசாரமான விவாதங்களையும் விட்டொழியுங்கள். விவாதம் செய்யாதீர்கள். எவருடனும் சண்டை செய்தாலோ அல்லது எவருடனாவது ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாலோ நீங்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு தியானம் செய்ய முடியாது. உங்கள் மன சமத்வநிலை தடுமாற்றமடைகிறது. உபயோகமில்லாத கால்வாய்கள் மூலம் அதிகமான சக்தி வீணாக்கப்படுகிறது. இரத்தம் கொதிக்கும். நரம்புகள் முறுக்கை இழந்துவிடும். எனவே, எப்பொழுதும் பிரசாந்தமானதோர் மனதைக் கொண்டு விளங்க நீங்கள் உங்கள் முழு முயற்சியையும் செய்ய வேண்டும். அமைதியானதோர் மனத்திலிருந்தே தியானம் தோன்றமுடியம். தூய மனம் தான் உங்களது விலையுயர்ந்த ஆன்மீகப் பொக்கிஷமாகும். உண்மையாகவே தியானத்தில் விரைந்து முன்னேற நீங்கள் விரும்பினால், நீங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். எச்சமயத்திலும் உண்மையையே நீங்கள் மொழிய வேண்டும். பிறர் மனதைப் புண்படுத்தத் தக்க வகையில் எந்த ஒரு சுடு சொல்லையும், அநாகரீக வார்த்தையையும் நீங்கள் மொழிதல் கூடாது. சிறுகவே நீங்கள் பேச வேண்டும். இதுவே உங்களுக்குச் சக்தியளித்து, மனசாந்தியையும் ஆத்மீக பலத்தையும் அளிக்கக் கூடிய வாக்தபஸாகும்.
உங்கள் ஒழுக்கத்தை ஆராயுங்கள். அதில் புலப்படும் தவறொன்றைப் பொறுக்கி எடுங்கள். அதன் எதிரிடையை கண்டுபிடியுங்கள். நீங்கள் கோப குணம் பொருந்தியவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். கோபத்திற்கு எதிர் குணம் பொறுமை. பொறுமையின் தனித்த குணத்தில் தியானித்து, இவ்வரிய குணத்தை விருத்தி செய்ய முனையுங்கள். ஒவ்வொரு நாள் விடியற்காலையிலும் நான்கு மணிக்குப் பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்து மனம் சுற்றித்திரியுங்கால் அதைப் பிடித்திழுக்கும் வகையில் தீவிரமாக சிந்தித்து, பொறுமை அதன் மதிப்பு, உத்வேகத்தின் போது அதை எங்ஙனம் பயிலுதல் முதலியவற்றை ஒவ்வொறு நாளும் ஒவ்வொரு குணத்தின்மீது சிந்தனை செய்ய முனையுங்கள். மனம் ஓடத்தொடங்கும் போதெல்லாம் அதைப் பிடித்திழுத்து நிறுத்துங்கள். உங்களை முற்றிலும் பொறுமையுடையவர்களாகவும், சாந்தஸ்வரூபிகளாகவும் நினைத்து, எனது உண்மை ஆத்மாவான இந்தப் பொறுமையை இன்றிலிருந்து நான் கொண்டு நிற்பேன் என்ற சபதத்துடன் முடியுங்கள். சிறிது நாட்களுக்குக் காணக்கூடிய அளவுக்குள்ள மாற்றங்கள் தோன்றாமலிருக்கலாம். நீங்கள் பழைய முரட்டுக் குணத்திலேயே நின்று வாழலாம். ஒவ்வொரு நாளும் காலையில் நன்கு அப்பியசித்து வாருங்கள். நான் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் அடிக்கடி உருவாகி நிற்கும். தொடர்ந்து அப்பியசித்து வாருங்கள். பொறுமையின்மையுடன் பொறுமையுணர்ச்சியும் சேர்ந்து தோன்றி வருவதுடன் பொறுமையின்øயின் வெளிப்படுகை ஒடுங்கி வரும். இன்னும் தொடர்ந்து அப்பியசியுங்கள். உத்வேக உணர்ச்சிகளெல்லாம் அடங்கி ஒடுங்கி நிற்பதுடன், நெருக்கடி நேரங்களில் பொறுமையானது உங்களது இயற்குணமாகவே அமைந்து விடும். இந்த மாதிரி, இரக்கம், தன்னடக்கம், தூய்மை, பணிவு, பெருந்தன்மை, தாராள மனப்பான்மை முதலிய உயர் பண்புகளை வளர்க்க முற்படுங்கள். மனதின் செயல்களே உண்மையில் கர்மங்கள் எனப்படும். செயலற்ற மனதின் மூலமே உண்மை விடுதலை உருவாகிறது. மனதின் ஆட்டத்திலிருந்து விடுபட்டவர்களிடம் சீரிய நிஷ்டை வந்தடைகிறது. மனம் மாசகன்ற தன்மையை அடைந்ததும், சாந்தியை அடைவதுடன் பிறப்பிறப்பைத் தரும் சம்சார மயக்கங்கள் விரைவிலேயே ஒழிக்கப்படுகின்றன. தூய்மையைப் பெற்ற பின் ஏற்படும் மனஒருமைப்பாடு உங்களுக்கு உண்மை இன்பத்தையும், அறிவையும் அளிக்க வல்லது. இந்த விஷயத்திற்காகவே நீங்கள் பிறந்துள்ளீர்கள். பற்றுதலினாலும், மோகத்தினாலும் நீங்கள் புறப்பொருள்களால் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். கடவுளை இதயத்தில் தியானித்து நில்லுங்கள். ஆழ்ந்து தியானியுங்கள். உள்ளந்தரங்கத்தில் இரண்டறக் கலந்து ஒன்றாகுங்கள்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template