சைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle
உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே? நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன ஷிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார். அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.
சிந்தனைக்கு மரத்துண்டுகளால் உயிர்கொடுத்த ஷிவ்ராக் 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைச் சைக்கிளில் திசைமாற்றியோ (Steering), மிதிஇயக்கியோ (Pedals), தடையோ (Break) கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வுதான் சைக்கிள் உருவாவதற்கு காரணமாக இருந்தது
கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு சைக்கிளை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுபவர் சீட்டில் உட்கார்ந்துகொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட சைக்கிள் இதுதான்.
அன்றைய காலங்களில் முழுக்க முழுக்க மரதுண்டுகளால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சைக்கிளை உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்க முயற்ச்சித்தவர் லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் ஆவர். கார்ல் வோன் ட்ரைஸின் சைக்கிள் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட இந்த சைக்கிளின் நேர்த்தியான தோற்றம் மற்றும் இலகுவாக உருளக்கூடிய சக்கரம் ஆகியவை சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பைபெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.
உலகில் முதன் முதலில் பெடலை (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவரையே சாரும் ஆகையால்தான் இன்று சைக்கிளை கண்டரிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக (Blacksmith) வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி (Steering), தடை (brake) மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.
இந்த சைக்கிளில் பின்புறச்சக்கரம் (Wheel) முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி (steering), தடை (brake), மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. இதில் இணைக்கப்பட்டிருந்த பெடலை பற்றி குறிப்பிடுவதென்றால் நாம் எல்லோரும் தையல்மிஷினை பார்த்திருப்போம்தானே. அதில் தையல்மிஷினை காலால் மிதித்து இயக்குவதற்கு அமைக்கப்பட்டிக்கும் பெடலையும் பார்த்திருப்போம்தானே. அதே செயல்பாட்டு முறையை கொண்ட பெடலைத்தான் மேக்மில்லன் தனது சைக்கிளிளும் அமைத்திருந்தார். பெடலை கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு சைக்கிள் இயங்கியது.
தையல்மிசினுக்கு வேண்டுமானால் அந்தவகை பெடல் பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் சைக்கிளுக்கு அது பொருத்தமானதாக இல்லை அதனைதொடர்ந்து மேம்பட்ட பெடலை தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் மும்முறமாக இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் (Crank) மற்றும் பால் பியரிங்க்ஸ் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த பெடலை சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு சைக்கிள் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
பின்புறசக்கரம் சிறிதாகவும் முன்புறசக்கரம் பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை கண்டு 1868-ஆம் ஆண்டு சைக்கிள் தயாரிப்பதற்க்கென்றே ஒரு நிறுவனம் ஒன்றை துவக்கினார். மிசாக்ஸ் கம்பெனி (Michaux Company) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த கம்பெனிதான் உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் சைக்கிள் தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட உலகின் முதல் சைக்கிள் கம்பெனி ஆகும்.
சைக்கிளின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சைக்கிளின் சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து சைக்கிளின் சக்கரத்தையும் (Wheel) உலோகத்தில் தயாரிக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டார். முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டனர். அந்த பாகங்கள்தான் சக்கரத்தின் ரிம் (Rim) மற்றும் ஸ்போக்ஸ் (Spokes) கம்பிகள். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.
இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய சைக்கிள் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த சைக்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சைக்கிளைத்தான் முதன் முதலாக பெண்களும் பயன்படுத்ததொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களை கொண்ட சைக்கிள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் வடிவமைத்த சைக்கிளை தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த சைக்கிள்கள் அனைத்தும் முன்புறசக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்கும் வகையில்தான் சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருந்து. பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி சைக்கிளை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது. இதைதொடர்ந்து இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் ஹென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய சைக்கிள் ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.
இரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது சைக்கிளில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த பெடல் இயக்குசங்கிலி மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பெடலை மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது. அவர் வடிவமைத்த இந்த வகைச் சைக்கிளைத்தான் இன்று நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.
1888-ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் ஹெர்குலிஸ் என்ற சைக்கிள் கம்பெனியை துவங்கினார். ஹெர்குலிஸ் சைக்கிள் கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது.
நன்றி: வரலாற்று சுவடுகள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !