காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மிக சிக்கலான அறிவியல் செய்திகளை மிக எளிமையாக ஆனால் சுவாரஸ்யமாக மக்களுக்கு புரிய வைப்பதில் வெற்றி கண்டவர். இவர்களைப் போன்றவர்களைக் கொண்டு ’அறிவியல் பாடப்புத்தகங்களை’ தயாரித்து இருந்தால் அறிவியல் கல்வியில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும் என்பது எனது கருத்தாகும்.
அவர் தொண்ணூறுகளில் ’முத்தாரம்’ வார இதழில் எழுதிய அறிவியல்கட்டுரைகளில் ஒன்றுதான் இந்த ’ அன்பு காட்டும் தாவரங்கள்’
அன்பு காட்டும் தாவரங்கள்
ஜாக்கராண்டா
பங்களூர் சாலைகளில் ஒரு வகை மரம் உள்ளது. ஊதா நிறத்தில் பூக்கும். இந்த மரங்களின் விசேஷம் வருஷம் பூராவும் சும்மா இருந்துவிட்டு ஒரு நாள், ஒரே நாளில் நகரத்தின் அத்தனை மரங்களும் பூக்கும். அந்த மரத்தின் பெயர் ஜாக்கராண்டா. நான் எப்போதும் வியந்ததுண்டு. எப்படி சொல்லு வைத்தார்போல் அத்தனை மரங்களும் ஒரே நாளில் பூக்கின்றன. அவைகளுக்குள் ஏதாவது பாஷை, செய்தி பரிமாற்ற முறை இருக்கிறதா ?அதைப்போல மாமரங்கள் சட்டென்று பூத்துக் குலுங்குவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தாவரங்களுள் கம்யூனிக்கேஷன் இருக்கிறதோ இல்லையோ ஒரு விதமான காலப்பிரமானம், பருவகால பிரக்ஞை நிச்சயம் இருக்கத்தான் வேண்டும். நாவல் பழங்களுக்கு நிச்சயம் ஆகஸ்டு மாதம் தெரிந்திருக்கிறது.
தீவிரமான அறிவியல்வாதியான நான் தாவரங்களுக்கு உயிர், மூச்சு, சாகசங்கள், எண்ணத்தொடர்புகள் எல்லாம் உண்டு என்பதை நம்பத்தயங்குகிறேன். இருந்தும் பீட்டர் டாம்கின்ஸ், கிறிஸ்டோபர் பர்ட் இருவரும் எழுதிய ‘தாவரங்களின் ரகசிய வாழ்க்கை’ என்கிற புத்தகம் என்னை சிந்திக்க வைத்தது. ஆராய்ச்சியாளர்களும், உயிரியல் நிபுணர்களும் கண்டறிந்த உண்மைகளை கோர்வையாக நோக்கும் போது தாவரங்களைப்பற்றி புதிதாக எண்ணத்தோன்றுகிறது.
ஒரு பூவைவிட அற்புதமான விஷயம் உலகில் அதிகம் இல்லை. நம்மைச்சுற்றியுள்ள பசுமையைவிட முக்கியமான விஷயமும் இல்லை. பசுமையான தாவரங்கள் இல்லையேல் நமக்கு உணவு இல்லை. மூச்சும் இல்லை. உலகத்தின் ஒவ்வொரு இலையும் லட்சக்கணக்கான சிறிய துவாரங்கள் மூலம் கார்பண்டை ஆக்ஸைடை வாங்கிக்கொண்டு பிராண வாயுவை விடுவிக்கின்றன.மொத்தம் சுமார் இரண்டரை கோடி சதுர மைல் பரப்பளவு இலைகள் உள்ளன, ஃபோட்டோ சிந்தஸிஸ் முறையில் நம் உணவையும் ஆக்ஸிஜனையும் உண்டாக்குவதற்கு.
வருஷம் நாம் 375 பில்லியன் (1993 வருடம் கணக்குப்படி) டன் உணவு உண்கிறோம். (பில்லியன் என்பது நூறு கோடி) இதில் முக்கால் பகுதிக்கு மேல் தாவரங்களிலிருந்து கிடைப்பது. காற்றிலிருந்தும், பூமியிலிருந்தும் மாற்றித்தரும் சாகசம். மிஞ்சியிருக்கும் கால் பாகம் மாமிசம் கூட ஆதாரமாக மாமிசப் பிராணிகள் உண்ணும் தாவரங்களின் ஆதாரம்தான்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ராவுல் ஃப்ரான்ஸ் என்கிற உயிரியலாளர் தாவரங்கள் தத்தம் உடல்களை தம் இச்சைப்படி நகர்த்தக் கூடியவை. என்ன கொஞ்சம் மெல்ல நகர்த்தும். அதுதான வித்தியாசம் என்கிறார். தாவரங்களின் வேர்கள் பூமிக்குள் தேடுகின்றன. இலைகளும், மலர்களும் மாறுதலுக்கேறப் திரும்புகின்றன. யார் சொன்னது இலைகளுக்கு தன்னிச்சை இல்லையென்று!
அல்ஃபால் ஃபா
தாவரத்தின் இலைகள் ஈரம் தேடும்போது முனிசிபாலிடி குழாய்களில் கூட நுழைந்து விடுகின்றன. நாற்பது அடிவரை அல்ஃபால் ஃபா என்னும் தாவரம் நீர் தேடுகிறது. கான்கிரீட்டை துளைக்கிறது. ‘ரை’ என்கிற ஒருவகை தாவரத்தில் வேர்களின் மொத்த நீளத்தைக் கணக்கிட்டால் 380 மைல் வருகிறது. வேர்கள் மூலம் தரையடி ஈரத்தை இலைகளுக்கு கடத்தி அங்கே ஆவியாகி மழையாகி மீண்டும் தரைக்கு வந்து இந்த இயற்கைச் சக்கரம் ஒழுங்காக நடந்து வருகிறது.
ரை (rye ) என்ற புலவகை தாவரம்
(Image courtesy: http://www.eofdreams.com)
‘ரை’ ன் வேர்கள்
(Image courtesy:www.soilandhealth.org)
ஒரு சூர்யகாந்திச்செடி ஒரு முழு ஆசாமிக்கு உண்டான அள்வுக்கு ‘வியர்க்கிறது’. உண்ணும் உணவு, பருகும் பானம், மருந்துகள் எல்லாமே ஃபோட்டோ சின்தஸிஸ் என்னும் ஆதார தாவர குணத்தின் அடிப்படையில் உருவானதுதான்.
சர்க்கரை, ஸ்டார்ச், கொழுப்பு.எண்ணெய்கள், மெழுகுகள். செலுலோஸ் எல்லாமே தாவரங்களிலிருந்து கிடைப்பவை. நம் வீடுகள், உடைகள், எரிபொருள்கள், நம் காகிதங்கள் எல்லாம் தாவர இனங்கள்தான்.
மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்ட்த்திலும் அவை நமக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. குழந்தைபிறந்தால், திருமணத்தின் போது மலர்களால் கொண்டாடுகிறோம், வாழைமரம் கட்டுகிறோம். இலையில் சாப்பிடுகிறோம். வீடுகளில் தோட்டம் வைக்கிறோம். அறைகளில் மலர்சாடி வைக்கிறோம். புல் தரையில் விளையாடுகிறோம்.
அரிஸ்டாட்டில் ‘தாவரங்களுக்கு ஆன்மா இருக்கிறது. ஆனால் உணர்ச்சி இல்லை என்றார். இடைக்காலங்களில் தாவரங்கள் மனிதர்களைப்போல சலன சக்தி இல்லாதவை என்று நம்பினார்கள். டார்வின் இது தப்பு என்றார்.
தாவரங்கள் எப்போதும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இவைகள் திரும்புகின்றன, நடுங்குகின்றன, கொடிகள் கொழு, கொம்பு தேடி ஒரு மணி நேரத்தில் ஒரு முழுச்சுற்று சுற்றிவிட்டு ஏதாவது சார்பு கிடைத்துவிட்டால் இருபது செகண்டுகளுக்குள் அதை சுற்றிக்கொண்டு விடுகின்றன. அதன்பின் ‘கார்க் ஸ்குரூ’ மாதிரி சுற்றிப்படர்ந்து சீக்கிரமே தனக்கான சக்தி பெறுகிறது.
உயரே படரும் கொடி கிட்டேயிருக்கும் ஆதாரத்தையும் தேடி அலைகிறது. ஆதாரத்தை இடம் மாற்றினால் ஒரு மணி நேரத்தில் கொடியும் திசை மாறுகிறது… தாவரத்தால அந்த கொழு கொம்பை பார்க்க முடிகிறதா ? இது எப்படி நிகழ்கிறது ?
தாவரங்களுக்கு இச்சை இருக்கிறது என்கிறார் ஃப்ரான்ஸ்.
ஸ்ன்யூ என்னும் தாவரம் திறமையாக ஈ பிடிக்கிறது. சில காளான்களுக்கு வாசனை கூட பார்க்கத்தெரியும் என்கிறார்கள். பூக்கள் தம் தேனை நக்க எறும்புகள் படையெடுத்தால் இதழ்கள் மூடிக்கொள்கின்றன. எறும்பு ஏறி வராதபடி, தண்டில் ஈரம் இருந்தால்தான் மறுபடி இதழ்களை திறக்கின்றன. சில பூக்கள் மற்ற பூச்சிகள் அண்டவிடாமல் பார்த்துக்கொண்ட்தற்கு பரிச்சாக எறும்புகளுக்கு கொஞ்சம் தேன் தருகின்றன !
மகரந்த சேர்க்கைக்கு தோதாக சில பூக்கள் வடிவம் மாற்றிக்கொள்கின்றன. தேனீக்கள் வருகைக்காக ஸ்பெஷல் மேக் அப், ஸ்பெஷல் நறுமணம், ஸ்பெஷல் தேன், உள்ளே சறுக்க ஸ்பெஷல் பாதைகள், காரியம் முடிந்தவுடன் கழற்றிவிட கதவுகள்.
‘பார்வி ஃப்ளோரஸ்’ என்னும் ஆர்க்கிட் வகைத் தாவரம் ஆண் தேனீ வருவதற்கு ஏற்ப தனது இதழ்களை பெண் தேனீயின் வடிவத்தில் மாற்றிக்கொள்கிறது.
இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று கேட்கும்போது தாவரங்களுக்கு மற்ற உயிர்களைப் போல் எல்லா குணங்களும் உள்ளன. தாக்கினால் எதிர்பதிலிருந்து அன்பு காட்டினால் நன்றி செலுத்துவது வரை சகல குணங்களும் இருக்கிறது என்று முடிவு செய்துள்ளார்கள்.
நம்ப கஷ்டமாக இருக்கிறதா ?
நன்றி: அறிவோம் சிந்திப்போம் – சுஜாதா
வெளியீடு: பாரதி பதிப்பகம்-சென்னை 17.
படங்கள்:
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !