தேள் போன்று கொட்டும் கொடுக்கினைக் கொண்ட இனம். ஆனால் கூடவே அமிர்தமெனத் தேனை நமக்களிக்கும் இனம். அதுதான் தேனீ இனம். அதைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாமா?
உலகிலேயே மிக உன்னதமான ஒரு உணவுப் பொருள் தேன். அது எவ்வளவு நாட்கள் வெளியில் வைத்திருந்தாலும் கெட்டுவிடாது. புளிக்காது. பூஞ்சக் காளான் பிடிக்காது. தேன் உணவுப் பொருள் மட்டுமல்ல. மருந்தும் கூட. குழந்தைக்கு ஜுரம். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுக்கிறார். கூடவே சொல்கிறார், மாத்திரையை பொடி செய்து தேனில் கலந்து நாக்கில் தடவி விடுங்கள் என்று. குழந்தைகளை மாத்திரை விழுங்க வைப்பதே கஷ்டம் அதிலும் கசப்பு மாத்திரை என்றால் கேட்கவே வேண்டாம். டாக்டர் சொன்னபடி செய்வதில் இரண்டு சௌகரியங்கள். தேனின் தித்திப்பு மாத்திரையின் கசப்பை மறைத்து விடும். கூடவே தேனும் மருந்தாகும்.
கடையில் வாங்கும் இருமலை அடக்கும் மிட்டாய்கள் பேக்கெட்டின் மீதுள்ள வாசகங்களையோ இருமலுக்கு சாப்பிடும் மருந்து பாட்டிலின் மீதுள்ள வரிகளையோ படித்துப் பார்த்தால் அதில் தேனும் கலந்திருப்பது தெரியும்.ஆயுர்வேதத்திலோ சித்த வைத்தியத்திலோ பார்த்தாலும் தேனுக்கு ஒரு முக்கிய இடம் இருப்பது புரியும்.இப்படி நற்குணங்களையும் நல்ல மதுரமான ருசியையும் கொண்ட தேனை நமக்கு அளிப்பது ஒரு வகை ஈ. அது தான் தேனீ.
தேனீக்கள் குடும்பம் குடும்பமாக வாழும் ஈக்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தலைவி அதுதான் ராணீத் தேனீ. ராணீத் தேனீ குடும்பத்தில் உள்ள மற்றவர்களை விட உருவத்தில் பெரியது. பணியாளைப் போல் இரு மடங்கு நீளத்தில் இருக்கும்.
படத்தில் பணி ஆட்கள் நடுவே ராணியைப் பாருங்கள்.
ராஜாக்கள் பலர் உண்டு. இவர்கள் நிறத்தில் பணி ஆட்களை விடக் கருப்பாக இருப்பார்கள். ராஜாக்களின் வேலை உண்பது, உறங்குவது, இனப் பெருக்க காலத்தில் ராணியோடு உடலுறவு கொள்ளுதல் இவைதான். ராஜாவிடம் ஆயுதமும், அதான், கொடுக்கும் கிடையாது.
மூன்றாவது குடும்ப அங்கத்தினர்கள் ஆணுமல்லாது பெண்ணுமல்லாது மூன்றாம் பால் ஆன வேலைக்கார தேனீக்கள்.
“என் கடன் பணி செய்து கிடப்பதே”
மெழுகு கொண்டு தேன் அடையைக் கட்டுதல், கட்டிய அடையின் அறைகளில் மலர்களில் இருந்து சேகரித்து வந்த தேனையோ, ராணி முட்டைகள் இட்டிருந்தால், தன் கால்களில் மலர்களில் இருந்து சேகரித்து வந்த மகரந்தத் துகள்களைத் தேனோடு சேர்த்துக் குழைத்து முட்டைகளிலிருந்து வெளி வரும் புழுக்களுக்கு உணவாக வைத்துப் பின் முட்டையில் இருந்து மூன்று நான்கு நாட்களில் புழுக்கள் வெளி வந்தவுடன் அறைகளை மூடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்வது இந்த மூன்றாம் பால் வேலைக்காரர்கள்தான்.
புழுக்களுக்கு அளிக்கப் படும் உணவிலும் சில ஆச்சரியங்கள் உள்ளன. முதல் நான்கு நாட்களுக்கு முட்டையிலிருந்து வெளி வரும் எல்லாப் புழுக்களுக்குமே ஒரே உணவு தான். அது தான் ‘ராஜ ஹல்வா’ (Royal jelly). இந்த உணவு வேலைக்கார தேனீக்களின் தொண்டையில் உள்ள ஒரு சுரப்பியில் உண்டாகிறது. அதன் பின்னர் வேலைக்காரர்களாகவும் ராஜாக்களாகவும் வர வேண்டியவர்களுக்கு தேனும் மகரந்தமும் கலந்த கலவை தேவையான அளவு ஆறு பட்டை அறைகளில் வைக்கப் பட்டு அறைகளின் கதவு மெழுகால் மூடப்படும். புழுக்கள் தேனீக்களாக உருமாறி அறைக் கதவை பிய்த்துக் கொண்டு வெளியே வரும் முட்டையாக ஜென்மம் எடுத்த நாளிலிருந்து சுமார் பதினேழு நாட்களில்.
ராணிக்களாக வரவேண்டிய புழுக்களுக்காக அமைக்கப் படும் அறையே தனி மாதிரியானது.
ராணி வீடு
இந்த அறை மற்ற அறைகளை விடப் பெரியது. ஆறு பட்டை வடிவிலானது அல்ல. நிலக் கடலை வடிவிலானது. ஒரு கிண்ணம் போன்றது. ஆறு பட்டை அறைகளின் மேல் குறுக்கு வாட்டில் ஒட்டப் பட்டிருக்கும். ராணியாக வளர வேண்டிய புழுவுக்கு மட்டும் முழு வளர்ச்சி அடையும் வரை உணவு ராஜ ஹல்வாதான். 7 அல்லது 8 நாட்களில் புழு நிலையில் முழு வளர்ச்சி கண்டபின் அதன் அறையும் மூடப்பட்டு விடும். அன்றிலிருந்து பத்து நாட்களுள் ராணியாக மாறி வெளியே வரும். முட்டையாய் ஜனித்த இருபது நாட்களிலேயே ராணி திருமணத்திற்குத் தயார். இருபத்து மூன்றாம் நாளிலிருந்து முட்டை இடவும் தயார்.
புதுக் குடித்தனத்திற்கு வீடு தேட வேண்டுமே? புதுக் குடித்தனம் போகப் போவது யார் தெரியுமா? புது மணப் பெண் அல்ல. அம்மா(!!!) என்பது சிலர் கணிப்பு.
மலர்கள் குன்றி தேன் கிடைப்பது குறைந்தால் ராஜாக்களை, அதான் சுகம் ஒன்றை மட்டுமே அனுபவிக்கும் சோம்பேறிகளை, பலவந்தமாக வெளியே தள்ளி சாகடிப்பது யாருடைய வேலை தெரியுமா? வேலைக்கார ஈக்களின் பல வேலைகளில் இதுவும் ஒன்று.! பாவம் நிராயுதபாணிகள்!
பஞ்ச காலத்தில் வெளியே தள்ளப் பட்ட ராஜாக்கள்
வேலைக்காரத் தேனீக்களுக்கு வேறு பல வேலைகளும் உண்டு. மலர்கள் எங்கு அதிகம் பூத்துக் குலுங்குகின்றன என்பதைக் கண்டறிந்து வந்து மற்றவர்களுக்குச் சொல்லுதல், அடையிலே புதிய ராணி பிறந்தால் பழைய ராணி புதுக் குடித்தனம் போக ஏற்ற இடம் கண்டுபிடித்து வந்து சொல்லுதல், இறந்த தேனீக்களின் உடல்களை அப்புறப்படுத்துதல், எதிரிகளை பயமுறுத்தி விரட்டுதல், தேனீக்களைத் தின்ன வரும் குளவிகளை ஒரு பந்து போல பல ஈக்களாகச் சூழ்ந்து கொண்டு தங்கள் உடல் சூட்டினாலேயே குளவியைக் கொல்லுதல், தேவைப்பட்டால் தன் உயிர் போய் விடுமே என்பது பற்றி சிறிதும் கவலைப் படாமல் எதிரியைக் கொட்டுதல் என இப்படிப் பல வேலைகள் இவற்றுக்கு.
தேனீக்களைத் திருட வரும் குளவியினை பந்து போல் சூழ்ந்து தன் உடல் சூட்டினாலேயே கொன்று விடும் தேனீக்கள்
திருட்டுத்தனமாக தேன் குடிக்க வரும் விட்டில் பூச்சிகளை பயமுறுத்தி விரட்டுதல் பார்க்க வேடிக்கையான் ஒன்று. எதிரிகள் தேனடையை நெருங்கும் போது ஆயிரக் கணக்காக அடையின் மீது உட்கார்ந்திருக்கும் தேனீக்கள் தங்கள் உடலினை அதிரச் செய்யும். இந்த வேலை ஆட்ட களத்திலோ, நடன அரங்கிலோ பலர் சேர்ந்து ஒரே மாதிரி செயல்கள் புரிவது (Synchronous acrobatics / swimming or group dancing) போன்று இருப்பதோடு மட்டும் இல்லாமல் மேலிருந்து கீழாக அலை அலையாக நிகழும் ஒரு செயல். இது ஒரு எச்சரிக்கையே. இதையும் மீறி அடையை நெருங்கினாலோ அடுத்தது ஆயுதப் படையின் தாக்குதல், அதான் கொட்டுதல்.
தேனீக்கள் கொட்டுவதற்கும் தேள், குளவிகள் இவை கொட்டுவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தேளோ, குளவியோ கொட்டும்போது அதன் ஆயுதம் அதனுடனேயே இருக்கும். ஆனால் தேனீ கொட்டினால் அதன் அஸ்திரம் கழன்று கொட்டப் பட்டவரின் உடலில் இருக்கும். இது சுலபமாக நிகழும் ஒன்றல்ல. கொட்டிய தேனீ விர்ரென்று சுற்றித் தன் உடலில் இருந்து கொடுக்கையும் விஷப் பையையும் பிய்த்து விட்டுப் பறந்து விடும். ஆனால் கூடவே கொட்டிய தேனீயின் உயிரும் போய்விடும்.
விஷப்பை சில நிமிஷங்களுக்கு நமது இருதயம் துடிப்பது போலத் துடித்துக் கொண்டிருக்கும். அவ்வாறு துடிப்பது விஷப் பையில் இருக்கும் விஷத்தினை கொட்டு பட்டவரின் உடலுக்குள் செலுத்தவே. அதனால் கொட்டுப் பட்ட உடனே ஒரு சாமண்த்தினாலோ அல்லது நீண்ட நகங்கள் இருந்தால் நகங்களின் உதவி கொண்டோ பையை அமுக்கி விடாமல் கொடுக்கினை வெளியே எடுத்து விட்டால் கொட்டுப் பட்டவருக்கு வலி அதிகம் இருக்காது. எங்கள் வீட்டில் தேனீ வளர்த்த சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் இதை.
மலர்களில் இருப்பது தேன் அல்ல. தேன் செய்யத் தேவையான் மூலப்பொருளே அது. மலர்களில் உள்ள மதுரம் (Nectar) நீர் போன்றிருக்கும் ஒரு இனிப்பான திரவம். இந்தத் திரவத்தினை நாம் சேகரித்து வைத்தால் அது தேனாகாது. கெட்டும் போய் விடும், மலர்களில் இருந்து மதுரத்தை உரிஞ்சின தேனீக்கள் தங்கள் வீடு சென்றதும் அறைகளில் உண்ட மதுரத்தினைத் துப்புகின்றன. அவ்வாறு அவை செய்யும் போது மதுரம் தேனாக உரு மாறுகிறது.
தேனீக்களின் அடையைக் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு தடுப்புச் சுவர். அதன் இரு புறமும் ஆயிரக் கணக்கில் ஒரே மாதிரியான ஆறு பட்டை சுவர்கள் கொண்ணட அறைகள் தேனீக்கள் தங்கள் அழகான அடையைக் கட்டத் தேவையான பொருள் தேன் மெழுகு. வேலைக்காரத் தேனீகளின் வயிற்றுப் பகுதியின் வெளிப்புறம் உள்ள சுரப்பிகளில் இருந்து வெளிவரும் ஒரு பொருளே மெழுகு. இதை அவை தங்கள் கால்களினால் வழித்தெடுத்து அடை கட்ட உபயோகிக்கின்றன.
தேனீக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை மலைத் தேனீ. செடிகளில், மரங்களில், மலை இடுக்குகளில் அடை கட்டும் தேனீ மற்றும் கொசுத் தேனீ.
கொசுத் தேனீக்கள் சுவர் இடுக்குகளிலும், குழாய் மேஜை நாற்காலிகளின் குழாய்களுக்குள்ளும், ஏன் சைகிள் ஹேண்டில் பாரிலும் கூட அடை கட்டும். அதிலிருந்து தேன் எடுக்க முடியாது. அடையும் மெழுகாலான ஒன்றல்ல. அரக்கும் மண்ணும் கலந்த கலவை போன்ற ஒரு பொருளால் மொத்தையாகக் கட்டப்பட்ட ஒன்று. கொசுத் தேனீயால் நமக்குத் தொந்திரவே தவிர நேரடி உபயோகம் இல்லை. சுவற்றிலுள்ள இடுக்கை சிமென்டு பூசி அடைத்துப் பாருங்கள். அதைத் துளைத்துக் கொண்டு சற்று நேரத்தில் வெளியே வரும். இந்த வகைத் தேனீ கொசுவை விட சற்றே தடிமனானது. ஈயை விட மெலிந்தது. கொசுத் தேனீ கொட்டினால் இரண்டு நாட்களுக்கு கொட்டின இடத்தில் எரிச்சலும் மிகக் குறைந்த வலியும் இருக்கும். சொந்த அனுபவம்தான் இதையும் சொல்ல வைக்கிறது.
உருவத்தில் மிகப் பெரியது மலைத் தேனீ. வேலைக்கார ஈக்களே சுமார் இரண்டரை சென்டிமீடர் நீளமிருக்கும். இவை மிக உயரமான மரங்களிலோ, கட்டிடங்களிலோ, மலைக் குகைகளிலோ அரை வட்ட வடிவிலான சுமார் 60 சென்டிமீடர் முதல் 100 சென்டிமீடர் வரை விட்டம் கொண்ட அடையினைக் கட்டும். இவற்றை நெருப்புப் பந்தம் புகைப் பந்தம் கொண்டு விரட்டி விட்டு அடைகளைப் பிய்த்தெடுதுப் பிழிந்து தேனை எடுப்பார்கள் காட்டு வாசிகள். அப்படிப் பிழிந்தெடுக்கப்படும் தேன் சைவ உணவல்ல. அதில் தேனீப் புழுக்கள் மற்றும் முழு வளர்ச்சி அடையாத தேனீக்களின் சாறும் இருக்கும்.
மலைத் தேனீக்கள் மிகவும் ஆக்ரோஷம் மிகுந்தவை. பல தேனீக்களாக சேர்ந்து கொட்டும் போது ஒருவரின் உயிரே போகலாம்.
இந்த இரு வகைத் தேனீக்களுக்கும் இடையே இருப்பது மரம் செடிகளிலும், மலை இடுக்குகளிலும் அடை கட்டும் தேனீக்கள். இவற்றை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று சற்றே மெலிந்திருக்கும். ஒரு குடும்பம் ஒரே அடை கட்டி வாழும். அவ்வப்போது இடமும் மாறும். மற்றொன்று உருவத்தில் சற்றே பெரியது. ஒரே இடத்தின் அருகருகே பல அடைகளைக் கட்டும். இந்த இரண்டாம் வகையே பெட்டிகளில் அடைத்துத் தோட்டங்களில் வைத்து வளர்க்கக் கூடியது.. இதன் ஆங்கிலப் பெயர் ஏபிஸ் மெல்லிஃபெரா (Apis mellifera).
ஏபிஸ் மெல்லிஃபெரா தேனீயை வளர்க்க உபயோகிக்கப்படும் பெட்டி ஒரு இரண்டடுக்குப் பெட்டி. இந்த அடுக்குகளுக்குள் மெல்லிய சட்டத்தால் ஆன ஃப்ரேம்கள் இருக்கும். ஒரு ஃப்ரேமின் மையத்திற்கும் அடுத்த் ஃப்ரேமின் மையத்திற்கும் இடையே உள்ள இடைவெளி சுமார் 3.75 சென்டிமிடர் இருக்கும், இந்த ஃப்ரேம்களில் தேனீக்கள் அடைகளைக் கட்டும்.
கீழ் அறைக்கும் மேல் அறைக்கும் நடுவே வேலைக்காரர்களை மட்டுமே அனுமதிக்கும் அளவிலான துளைகள் கொண்ட தடுப்புத் தகடோ வலையோ இருக்கும். இந்தத் தடுப்பு இருப்பதால் ராணி மேலே சென்று அடைகளில் முட்டை இட முடியாது. சோம்பேரி ராஜாக்கள் சென்று தேனைக் குடிக்க முடியாது. பல ஆயிரம் தேனீக்கள் உழைப்பில் சேர்ந்த தேன் நமக்கு உடல் வருத்தம் இன்றிக் கிடைக்கும்.
தேனீக்கள் அடைகள் கட்டி முடித்து அறைகளில் தேன் நிரப்பி மூடி வைத்தபின் அந்த ஃப்ரேம்களை எடுத்து, அறைகளின் மூடிகளை கத்தியால் சீவி எடுத்து விட்டு, சுழல் இயந்திரங்களில் சுற்றி தேனை எடுப்பார்கள் தேனீ வளர்ப்பவர்கள்.
தேனீ வளர்ப்பது லாபகரமான ஒரு பொழுது போக்கு. ஆனால் சில விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. தேனீக்களுக்குப் பல எதிரிகள். ஓணான், பல்லி, தவளை, எறும்பு என்று. ஆகவே இவை தேனீ வளர்க்கும் பெட்டிகளை அணுகா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரி. இந்தத் தொழிலில் வளர்ச்சி காண்பது எப்படி?
புதிய ராணி வந்தவுடன் பழைய ராணி பல நூறு வேலைக்காரர்களுடன் சில சோம்பேறிகளையும் அழைத்துக் கொண்டு புது வீடு தேடும் பணியில் ஈடுபடும். முதலில் அவை பழைய வீட்டின் அருகிலேயே ஒரு மரத்தை அடைந்து அங்கு இளைப்பாறும். சில வேலையாட்கள் புது இடம் தேடும் பணியில் இறங்குவார்கள். வெளியில் சென்றவர்கள் திரும்ப வருவதற்குள் ராணீத் தேனீயையும் கொஞ்சம் வேலையாட்களையுமாக சேர்த்து ஒரு பெரிய கண்ணாடி சோதனைக் குழாயை உபயோகித்துப் பிடித்து வலைத் துணியால் மூடி அதை அப்படியே ஒரு காலி தேனீ வளர்க்கும் பெட்டிக்குள் உதறி மூடி விட்டால் சிறிது நேரத்திற்குள் பெட்டியில் இருந்து சில வேலக்கார தேனீக்கள் வெளியே வந்து மற்ற்வர்களை அழைத்து வந்து விடும். ஒரு புதிய தேனீக் குடும்பம் உங்களுக்குக் கிடைக்கும். இதைச் சொல்லும் போது என் வாழ்க்கையில் நடந்த இரு சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன.
ஒரு முறை புது வீடு தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ராணியும் மற்ற தேனீக்களும் அவை வசித்து வந்த பெட்டியின் அருகில் இருந்த வேப்ப மரம் ஒன்றின் கிளையைச் சென்றடைந்திருந்தன. ராணி பிடிக்கும் நோக்குடன் வேப்ப மரத்தில் ஏறி பக்க வாட்டாக படர்ந்திருந்த கிளையில் கால்களாலும் கைகளாலும் கிளையை அணைத்துப் பிடித்தபடி தேனீக் கூட்டத்தை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறினேன். ராணியைப் பிடிக்குமுன் கீழே பார்த்தேன் ஒரு வினாடி. பத்தடி தூரத்தில் தரை. அவ்வளவு தான் என் கால்கள் இரண்டும் தந்தி அடிக்க ஆரம்பித்தன பயத்தில். நல்ல வேளை ஆண்டவன் புண்ணியத்தில் ராணியுடன் திரும்பினேன் கை கால் உடையாமல் அன்று.
கிட்டத்தில் இருக்கும் தேனீக்களை சோதனைக் குழாயில் பிடிக்கலாம். அதிக உயரத்தில் இருந்தால் அதற்கு வேறு யுக்தி கையாள வேண்டும். இரண்டு நீளக் கழிகள். ஒன்றின் நுனியில் ஒரு முப்பது சென்டிமீடர் விட்டத்திற்குக் குறையாத வளையம். அதில் ஒரு துணிப் பை. கீழிருந்து ஒரு கயிற்றை இழுத்தால் பையின் வாய் மூடிக் கொள்ள வேண்டும் படியான அமைப்பு. இந்த வளையம் கொண்ட கழியை தேனீக் கூட்டத்தின் கீழே ஒருவர் பிடித்துக் கொள்ள மற்றொருவர் இரண்டாம் கழியின் நுனியில் இருக்கும் துறட்டியால் ஓங்கி அடித்தாற்போல் கிளையை இழுக்க வேண்டும்.
ராணியுடன் சேர்ந்து கொத்தாக தேனீக்கள் பைக்குள் விழுந்திடும். உடனே கயிற்றை இழுத்து பையை சுருக்கு போட்டு மூடிட வேண்டும். பின்னர் தேனீக்களை ஒரு புதிய பெட்டின் உள்ளே விட வேண்டும்.
ஒரு முறை நானும் பெரியண்ணனும் உயரத்தில் சென்றமர்ந்த தேனீக்களைப் பிடிப்பதில் முனைந்தோம். அண்ணன் பை கொண்ட கழியைப் பிடித்து நிற்க, நான் துறட்டியால் கிளையை பட்டென்று இழுக்க, தேனீக்கள் அத்தனையும் அண்ணன் முகத்தில் கொத்தாக விழுந்து கொட்ட, அடுத்த பத்து நாட்களுக்கு வீங்கிய முகத்துடனும் வலியுடனும் அண்ணன் தவிக்க, மறக்க முடியுமா தேனி வளர்க்கும் / பிடிக்கும் அனுபவத்தை?
தேனீக்கள் மலர்களில் இருந்து மதுரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வருவதில்லை. தங்கள் கால்களில் உள்ள பைகளில் மலர்களிலிருந்து மகரந்தத் தூள்களையும் எடுத்துக் கொண்டு வருகின்றன. அவை ஒரு மலரில் இருந்து மற்றொரு மலருக்குச் செல்லும்போது அவற்றின் கால்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மகரந்தத் தூள்கள் புதிய மலரில் குறுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதால் தரமான மணிகளோ காய்களோ உண்டாகின்றன. அதனால் தேனீக்கள் குடியானவர்களின் தோழர்கள் என்றும் சொல்லலாம்.
மதுவெக் குடிக்க வாரீகளா..............மகரந்த மெடுக்க வாரீகளா?
தேனீக்கள் தங்களுக்குள் எண்ணப் பறிமாற்றம் செயது கொள்ள பல வழிகளைக் கையாளுகின்றன. அவற்றுள் முக்கியமானது நடனம். எந்த திக்கில் எவ்வளவு தூரம் சென்றால் அதிக அளவில் தேனும் மகரந்தமும் கிடைக்கும் என்பதை நடனங்கள் மூலமாகவே ஒரு தேனீ மற்ற தேனீக்களுக்குத் தெரிவிக்குமாம்.
ஒற்றைக் காலில் நின்று சுற்றிச் சுற்றி ஆடுதல், உடலின் பின் பாதியை இப்படியும் அப்படியுமாக ஆட்டுதல், குலுக்குதல் என பலவித நடன முத்திரைகளைக் காணலாம்.
தேனீ என்ற இரெண்டெழுத்து வார்த்தை ஜந்துக்குள் எத்தனை வியக்கத் தக்க உண்மைகளை ஒளித்து வைத்திருக்கிறான் இறைவன்!
தேனீக்கள் கொட்டும் கொடுக்கு கொண்டவை ஆயிற்றே அவற்றுடன் மனிதன் அன்பாகப் பழக முடியுமா? ஏன் முடியாது என்று கேட்பவர்கள் பலர் உள்ளனர் இவ்வுலகில். உதாரணத்திற்கு இதோ சிலர்.
|
Last Updated on Friday, 25 February 2011 00:38 |
Home »
» தேனீ இனம் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாமா?
Good lnp
ReplyDeleteGood lnp
ReplyDeleteபயனுள்ள தகவல். மேலும் தேள் கொட்டினால் இந்த குறிப்புக்கள் பின்பற்றினால் விஷம் குறையும்.!
ReplyDelete