” புற நகர் வானத்தை விட கிராமத்து வானம் எவ்வளவோ ப்ரவாயில்லை” என்கிறார் ஒருவர்.
“ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான்
.
ஆனால் இப்படிப் பேசக்கூடிய இருவரும் சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம்.
சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா? நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.
சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள்ளவை அமெரிக்க நகரங்கள். நகரங்களின் வெளிச்சத்தைக் கவனியுங்கள் படம் நாஸா |
ஒருபெரு நகரின் வானத்தின் நிறம் ஆரஞ்சு கலந்த சிவபபாக இருக்கலாம். இதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.. நீங்கள் ஒரு பெரு நகரின் புற நகர்ப் பகுதியில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம்.
நிலவற்ற நாளன்று இரவு 9 மணி வாக்கில் உங்கள் வட்டாரத்தில் நான்கு மாடிக் கட்டடம் இருந்தால் மொட்டை மாடிக்குச் சென்று பெரு நகரின் மையப் பகுதி அமைந்த இடத்தை நோக்கிப் பாருங்கள். மையப் பகுதிக்கு மேலே இருக்கின்ற வானம் சிவந்த நிறத்தில் காணப்படும்.
இன்னொரு வழி இருக்கிறது. நீங்கள் இரவு நேர ரயிலில் சென்னையிலிருந்து திருச்சி அல்லது மதுரைக்குச் செல்கிறீர்கள். ரயில் அந்த நகரை நெருங்க இருக்கும் நேரத்தில் அதாவது காலை 4 அல்லது 5 மணி வாக்கில் ரயிலின் ஜன்னல் வழியே (ரயில் பெட்டிக்குள் விளக்கு எரியக்கூடாது) நகரம இருக்கின்ற திசையை நோக்குங்கள்
அதே விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவும் ஒளிர ஆரம்பித்துள்ளது. ப்டம் நாஸா |
நகருக்கு மேலே வானம் சிவந்த நிறத்தில் தெரியும். சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானம் சிவந்திருப்பது போன்று காட்சி அளிக்கும். இரவு வானத்துக்கு நிறம் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
அமெரிக்க வானவியல் நிபுணர் ஜான் இ போர்ட்டில் (John E Bortle) நிலவற்ற இரவு வானை ஒன்பது வகைகளாகப் பிரித்திருக்கிறார். இப் பட்டியலில் கிராமப்புற வானம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெரு நகர மையப் பகுதிக்கு மேலே உள்ள வானம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. முதல் இரு இடங்களும் கிராமத்துக்கு வெளியே கும்மிருட்டாக இருக்கக்கூடிய இடங்களுக்கு மேலே இருக்கின்ற வானம் ஆகும்.இவை வானத்து நட்சத்திரங்கள் நன்கு தெரியக்கூடிய இடங்களாகும்.
ஜான் போர்ட்டில் வானத்தின் நிற்த்தை வகை பிரித்ததுடன் நில்லாமல் எந்த வகையான வானத்தில் எவற்றையெல்லாம் காணலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய உதயமல்ல. அமெரிக்காவில் ஓர் வான் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அருகே உள்ள நகரங்களிலிருந்து வானில் கிளம்பும் ஒளியே தான் |
பெரு நகரின் மையப் பகுதியில் உள்ளவர்களுக்கு வானில் சந்திரன் தெரியலாம். கிரகங்கள் தெரியலாம்.ஒரு சில பிரகாசமான நட்சத்திரங்கள் தெரியலாம். இரவு வானின் அழகை ரசிக்கப் பெரு நகரம் லாயக்கிலை என்பது அவரது கருத்து. பெரு நகரில் வாழ்பவர்களுக்கு வான் அழகைப் பார்க்க நேரமோ ஆர்வமோ கிடையாது என்கிறீர்களா? அது சரிதான்.
வானம் ஏன் இப்படி வெளிச்சம் போடுகிறது? பெரு நகரத்து வானம் ஏன் வண்ணத்தைப் பூசி நிற்கிற்து? நகரங்களில் எண்ணற்ற வாகனங்கள். இவை பெரும் புழுதியைக் கிளப்புகின்றன. வாகனங்களிலிருந்து ஏராளமான அளவுக்குப் புகை. இவை தவிர,இயற்கையாகக் கிளம்புகின்ற நுண்ணிய துகள்கள். இவை எல்லாம் சேர்ந்து வானில் மிதக்கின்றன்
அமெரிக்காவில் ஒரு பெரிய நகரிலிருந்து இரவு நேரத்தில் வெளிப்படும் ஒளியால் வானமே சிவந்து காணப்படுகிறது. |
இரவில் நகரங்களில் எண்ணற்ற கட்டடங்களில் பிரகாசமான விளக்குகள். விளம்பரப் பலகைகளில் மேல் நோக்கிஒளி வீசும் வகையில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் .வாகனங்களின் விளக்குகள்.விளையாட்டு மைதானத்தில் உள்ள பிரகாசமான விளக்குகள்.
இவை அனைத்தின் ஒளி மேலே செல்கிறது. வானில் உள்ள நுண்ணிய தூசு மீது இந்த ஒளி படும் போது ஒளி சிதறடிக்கப்படுகிறது. பெரு நகரை வானத்து ஒளி இவ்விதமாகப் போர்த்துக் கொள்கிறது. இதனால் இயற்கையான வானம் நம் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு வானம் சிவந்து விடுகிறது..
இரவு வானில் தெரியும் நட்சத்திரங்கள். பெரிய ந்கரங்களிலிருந்து இவற்றைக் காண்பது கடினமே. |
இரவு வானத்தின் இயற்கை அழகை நீங்கள் காண விரும்பினால் அமாவாசை சமயத்தில் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் வானில் மேகங்களே இல்லாத நாளாகப் பார்த்து நன்கு இருட்டிய பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து ஒரு வாகனத்தில்--காரில்-- ஊருக்கு வெளியே சில கிலோ மீட்டர் செல்ல வேண்டும். நெடுஞ்சாலை விளக்குகள் கூட இல்லாத -- குக்கிராமத்துக்குச் செல்கின்ற மண் ரோடில் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டும்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் .உங்களைச் சுற்றி எந்த விளக்கும் தெரியக்கூடாது. அந்த கும்மிருட்டில் உங்களுடன் எடுத்துச் சென்ற மடக்கு சேர்களைப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இருட்டுக்கு உங்கள் கண்கள் நன்கு பழகிக் கொண்ட பின்னர் வானை அண்ணாந்து பார்க்க வேண்டும்.
கரு நீல வெல்வெட் துணியில் வாரி இரைக்கப்பட்ட வைரங்கள் போல வானத்து நட்சத்திரங்கள் அற்புதமாகக் காட்சி அளிக்கும். சற்றே வெளிறிய நிறத்தில் அகன்ற பட்டையாக ஆகாய கங்கை (Milky Way Galaxy) தெரியும். உயரே தெரிகின்ற அக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும்.
உங்கள் கண்ணில் படுகின்ற ஒரு நட்சத்திரம் சூரியனை விடப் ப்ல மடங்கு பெரியதாக, உங்கள் பூமியை விட பல ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கலாம். மங்கலாகத் தெரிகின்ற சிறிய திட்டுகள் கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட அண்டமாக இருக்கலாம்.
நீங்கள் தலைக்கு மேலே காண்பது வானம் தான். ஆனால் அதுவே விண்வெளி. அதுவே அண்டவெளி. அதுவே எல்லையற்ற பிரபஞ்ச வெளி.
திரை உலகில் ஜொலிக்கும் உங்கள் அபிமான நட்சத்திரங்களை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சினிமாத் திரையில், டிவி திரையில் பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. இயற்கையில் தெரியும் வானத்து நட்சத்திரங்களை --வானம் அளிக்கும் அற்புதக் காட்சியை ஒரு தடவையாவ்து பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை எனக்கு எழுதுங்கள்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !