’சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான்
பூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை.
குறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன்? பூமி மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் இருக்க முடியும்.
சுமார் 4 லட்சம் கி.மீ. தொலவிலிருந்து பார்த்தால் பூமி. இது மாதிரி எங்கேனும் உள்ளதா/ |
சூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் வேறு எந்த கிரகமும் பூமி மாதிரியில் இல்லை. சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டுமே எண்ணற்ற வகை வகையான உயிரினங்கள் இருக்கின்றன.
ஆகவே கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ந்ட்சத்திரங்களுக்கு ( சூரியனும் ஒரு நட்சத்திரமே) கிரகங்கள் இருக்கின்றனவா/ அப்படியான கிரகங்களில் பூமி மாதிரி கிரகம் இருக்குமா ? என்று அறிவதில் கெப்ளர் விண்கலம் ஆரம்ப முதலே தீவிரமாக ஈடுபட்டது.
சரி, பூமி மாதிரி என்றால் என்ன என்பதை விளக்கியாக வேண்டும். சைஸில் பூமி மாதிரியாக மட்டும் இருந்தால் போதாது. சொல்லப்போனால் சுக்கிரன் (வெள்ளி கிரகம் ) பூமி சைஸில் உள்ளது. ஆனால் அது அக்கினிக் குண்டமாக --அத்துடன் ”அமுக்கு பிசாசு “போல உள்ளது.
பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ளது. ஆகவே தான் பூமியில் புதனில் உள்ளது போல விபரீத வெப்பமும் விபரீதக் குளிரும் இல்லை. செவ்வாயில் உள்ளது போல கடும் குளிர் இல்லை. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் தான் வியாழன், சனி போன்ற கிரகங்கள் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.
பூமியில் காற்று மண்டலம் உள்ள்து. பூமியின் காற்று மண்டலமே சூரியனிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் வருகின்ற ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துகிறது.இதன் பலனாகவே பூமியில் உயிரினம் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது.
தவிர, பூமியின் காற்றழுத்தம் தகுந்த அளவில் உள்ளது. ஆகவே தான் பூமியில் தண்ணீர் உள்ளது. நீராவி வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் தண்ணீர் உள்ளது. காற்றழுத்தம் அளவுக்கு மீறிப் போனதால் தான் வெள்ளி கிரகம் பாழாய்ப் போய் விட்டது. கடும் காற்றழுத்தம் உள்ளதால் வெள்ளி கிரகத்தில் போய் இறங்கும் எந்த (ஆளில்லா ) விண்கலமும் அப்பளம் போல நொறுங்கி விடுகிறது.
பூமியைப் போல சந்திரனும் சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ள்து தான். ஆனால் சந்திரனை ஆபத்தான கதிர்கள் தாக்குகின்றன.தகுந்த காப்பு உடை இல்லாமல் சந்திரனில் இருக்க முடியாது.
கெப்ளர் விண்கலம். பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம் |
தகுந்த தூரத்தில் இருந்தால் போதாது. தகுந்த காற்று மண்டலம் இருந்தாலும் போதாது. பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இல்லத்தரசிகள் வீடுகளில் நெருப்பில் அப்பளம் சுடும் போது ஒரே பக்கத்தில் அதிகம் வெப்பம் தாக்கினால் அப்பளம் தீய்ந்து விடும் என்பதை அறிந்து தக்கபடி திருப்பித் திருப்பிப் போடுவர். பூமியின் சுழற்சி வேகம் தக்க அளவில் உள்ளதால் நாம் பிழைத்தோம்.
சந்திரனைப் பாருங்கள். சந்திரனில் தொடர்ந்து 14 நாள் வெயில்.தொடர்ந்து 14 நாள் இரவு. சந்திரனில் ஒருவர் பகலாக உள்ள புறத்தில் 14 நாள் இருந்தால் பொசுங்கிப் போய்விடுவார்.. இரவாக உள்ள புறத்தில்14 நாள் இருந்தால் குளிரில் விறைத்து செத்துப் போய்விடுவார்.
கெப்ளர் விண்கலம் ஆரம்பத்தில் வியாழன் மாதிரியில் பனிக்கட்டி உருண்டையாக உள்ள கிரகங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தது. ஒரு நட்சத்திரத்திலிருந்து ( அந்த நட்சத்திர மண்டலத்தின் சூரியன் என வைத்துக்கொள்ளுங்களேன்) தகுந்த தூரத்தில் உள்ள ஓரிரு கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது.
எனினும் கெப்ளர் கண்டுபிடித்துள்ள பல கிரகங்கள் பற்றிய தகவலகள் இன்னும் பகுத்து ஆராயப்படவில்லை.அவற்றில் ஒரு வேளை பூமி போன்ற கிரகம் இருக்கலாம்.
கெப்ளர் விண்கலம் எப்படி கிரகங்களைக் கண்டுபிடிக்கிறது?.இரவு வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வானில் மிக உயரத்தில் விமானம் போகிற சத்தமே கேட்காமல் இருக்க, அந்த விமானம் ஒரு கணம் அந்த நட்சத்திரத்தை மறைக்கிறது. அந்த நட்சத்திரத்தை ம்றைத்தது விமானமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஊகிக்கிறீர்கள். அது மாதிரியில தான் நட்சத்திரங்களின் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இதை வேறு விதமாகவும் வருணிக்கலாம். அமாவாசை இரவில் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நிற்கிறீர்கள்.சுற்றிலும் எங்குமே வெளிச்சம் இல்லை. தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் மினுக் மினுக் என விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அந்த விளக்குக்கு அருகே யாராவது நிற்கிற்ர்ர்களா எனப்து நம் கண்ணுக்குப் புலப்படவில்லை. திடீரென ஒரு கணம் விளக்கு மறைக்கப்படுகிறது. யாரோ குறுக்காக நடந்து சென்றிருக்க வேண்டும் என ஊகிக்கிறீர்கள். இன்னொரு தடவையும் இப்படி விளக்கு மறைக்கப்படுகிறது. இதிலிருந்து அங்கே யாரோ குறுக்காக நடந்து செல்கிறார் என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.
கெப்ளர் கண்டுபிடித்த சிறிய கிரகம். இது ஓவியர் வ்ரைந்த படம் |
இதே விதமாக கெப்ளர் விண்கலம் வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது. கெப்ளர் இப்படியாக அனுப்புகின்ற படங்கள், தகவல்கள் ஆகியவற்றை நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.
கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆராய்ந்து வரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை லட்சம் நட்சத்திரங்கள் ஆராயப்பட்டுள்ளன.
வானில் தென்படுகின்ற நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றவையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்ற்னர். அந்த அளவில் நமது அண்டத்தில் (Galaxy) கோடானு கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே இந்த பிரும்மாண்டமான பிரபஞ்சத்தில் பூமி மாதிரி எங்குமே இருக்க வாய்ப்பில்லை என்று கருதக்கூடாது என்று ஒரு நிபுணர் கூறினார். தவிர இப்பிரஞ்சத்தில் பூமி தான் நடுநாயகமாக இருப்பதாகவும் கருதலாகாது என்றார் அவர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !