செவ்வாயில் உயிரினம் - நிரூபிக்கத் தயாராகிறது நாசா - nelliadynet
Headlines News :
Home » » செவ்வாயில் உயிரினம் - நிரூபிக்கத் தயாராகிறது நாசா

செவ்வாயில் உயிரினம் - நிரூபிக்கத் தயாராகிறது நாசா

Written By www.kovilnet.com on Thursday, January 10, 2013 | 5:29 AM

செவ்வாயில் உயிரினங்கள் இருந்திருக்கலாம்! வறண்டு சிவந்த பாலைவனம் போல இப்போது காட்சியளிக்கும் செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் பெருங்கடலும், பசுமையும் கலந்த பிரதேசமாக இருந்திருக்கலாம்! செவ்வாய் கிரகவாசிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பூமிக்கு வந்திருக்கக்கூடும்! மனிதர்களாக இல்லையென்றாலும், கிருமிகளின் வடிவத்திலாவது பூமிக்கு வந்திருக்கக் கூடும்! இவை வெறும் அறிவியல் புனை கதைக்கான கற்பனைகள் அல்ல. இவற்றை நம்புவதற்கு வலுவான அடிப்படை ஆதாரங்கள் உள்ளன என்கிறது சமீபத்திய நாசாவின் ஆய்வு முடிவு. 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் இருந்து பூமியில் வந்து விழுந்த விண்கல், பாறையாக கடந்த 1996ம் ஆண்டில் அன்டார்க்டிக் கடல் பகுதியில் அடையாளம் காணப்பட்டது. 'அலென் ஹில்ஸ் 84001' என்று இதற்கு விஞ்ஞானிகள் பெயரிட்டனர். அப்போது, அந்த பாறையின் மீது உயிரித்தன்மை கொண்ட படிமத் துகள்கள் இருந்தன. அவை செவ்வாயில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நாசா கூறியது. ஆனால், விண்ணில் இருந்து பூமியில் மோதியதாலும், அன்டார்க்டிக் கடலின் அசுத்தங்கள், பூஞ்சைகள் பல்லாண்டுகளாக பாறையில் படிந்ததால் உருவானவையே ஃபாஸில் படிமங்களாக தோற்றமளிக்கின்றன என்று கூறி அப்போது பெரும்பாலான விஞ்ஞானிகள் நாசாவின் கருத்தை நிராகரித்தார்கள். ஆனால், அந்த பாறையில் படிந்துள்ளவை செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவை தான் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாக இப்போது நாசா விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவிக்கிறார்கள். இதை தங்களால் நிரூபிக்க முடியும் என்றும் கூறுகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன்பிருந்தை விட இப்போது அதிநுட்பமான மைக்ராஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது நிரூபிக்க முடியாததை தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இன்று நாசா செய்துள்ளது. நாசாவில், கேத்தி தாமஸ்-கெர்டா ஆகியோர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த செவ்வாய் பாறையில் உள்ள படிமங்களை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளது. அதில் கார்பொனைட் மற்றும் மக்னீஸிய உலோக படிகங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். பாறையில் பரவலாகக் காணப்படும் உலோக படிமங்கள் வழக்கத்துக்கு மாறான ரசாயண மற்றும் இயற்பியல் தன்மைககொண்டவை. அவற்றின் அமைப்புகள் புவியியல் சார்ந்து இல்லாமல், உயிரி தன்மையை ஒத்துள்ளது. அதுமட்டுமின்றி பூமியில் உள்ள காந்தக் கிருமிகளின் (magnetic bacteria) சாயல் அவற்றில் வெகுவாக உள்ளது. இவை நிச்சயம் 13 ஆயிரம் ஆண்டுகளில் உருவானவை அல்ல. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்கவே இவை ஆதாரமாக உள்ளன என்ற முடிவிற்கு நாசா ஆய்வுக் குழு வந்துள்ளது. இதுகுறித்து விரைவில் நாசா தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளது. இங்கிலாந்தின் 'அஸ்ட்ரானமி நவ்' இதழின் துணையாசிரியர் எமிலி பால்ட்வின் இதுபற்றி கூறும்போது, 'விண்கல் பாறையில் படிந்துள்ளவை பூமியில் உருவானவை அல்ல என்று நிரூபிக்கப்பட்டால், நம்முடைய சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உயிர்கள் எப்போது, எப்படி தோன்றின என்பது குறித்த புரிதல் மேலும் அதிகமாகும்' என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template