செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க - nelliadynet
Headlines News :
Home » » செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க

Written By www.kovilnet.com on Saturday, December 22, 2012 | 11:39 PM


Curiosity_Rover -
ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை விஞ்ஞானம்.

மனிதன் வாழ பூமியை தவிர ஏதுவான கிரகங்கள் உள்ளனவா என பல்லாயிரக்கணக்கான ஆய்வாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தின் மீது எப்போதுமே ஆராய்ச்சியாளர்களுக்கு தனி மோகம் உண்டு. காரணம் செவ்வாய் கிரகத்தில் பல வருடங்களுக்கு முன்பு நீர் இருந்ததாக நம்பப்படுவதே.
இதற்காக ஏற்கனவே பல செயற்கைக் கோள்களையும், ரொபோட்களையும் விண்ணிக்கு அனுப்பியுள்ள நாசா விஞ்ஞானிகள், கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி கியூரியோசிட்டி என்ற ரொபட்டிக் விண்கலத்தினை பல்வேறு கனவுகளுடன் வெற்றிகரமாக அனுப்பியது.
யானை போய் அதன் வால் பொறுத்த கதையாக பல தடவைகள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது பல விண்கலங்கள் வெடித்துச் சுக்குநூறாகியுள்ளது.
ஆனால் இந்த கியூரியோசிட்டி விண்கலமானது விஞ்ஞானிகளின் கனவுகளை வழக்கம் போல சுக்குநூறாக்காமல் 563,000,000 கீ.மீ தூரம் பாதுகாப்பாக பயணித்து செவ்வாயில் இவ்வாண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி தரையிறங்கி ஆய்வாளர்களுக்கான ஆராய்ச்சிக் கதவை திறந்து விட்டது.
செவ்வாயில் மனிதன் வாழ ஏதுவான காரணிகளை கண்டுபிடிப்பதனை பிரதான நோக்காகக் கொண்டே இந்த கியூரியோசிட்டி செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் செற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே செவ்வாயில் நீர் இருந்துள்ளதாக நம்பப்பட்ட போதிலும் இதுவரையில் அதனை உறுதிப்படுத்தும் அளவிற்கு திருப்திகரமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நீர் இருப்பதனை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலமைந்த படங்களை நாசாவிற்குச் சொந்தமான கியூரியோசிட்டி விண்கலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.
இதில் உருளையான கூழாங்கற்கள் நிறைந்த நிலப்ப பரப்புக்கள் பல மிகத் தெளிவாக காணப்படுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் பெரும் மகிழ்சியில் உள்ளதுடன் இதனை செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாகவும் கருதுகின்றனர்.
இது தொடர்பில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி ஜோன் கிரொட்சின்கர் கருத்து வெளியிடுகையில், உண்மையில் கியூரியோசிட்டி மூலமான ஆராய்ச்சிகள் மகிழ்சியைத் தருகின்றது.
எனினும் கியூரியோசிட்டியினை செவ்வாய் கிரகத்தின் மத்தில் தரையிறக்க எண்ணியிருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.
ஆனால் செவ்வாய் கிரகத்தின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியத்தக்க வகையில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் சாதாரணமாக -70 பாகை வரையில் வெப்பநிலை குறைவடையும். இதனால் உறைந்த பாலை நிலமாக காணப்படும் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஆராய்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் என்றார்.
தற்போது செவ்வாயின் வெப்பநிலை 0 பாகையிலிருந்து 20 பாகை வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றமையால் நீர் இருப்பின் அதனை கண்டுபிடிப்பது சற்று இலகுவாக அமையும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செவ்வாய் கிரகத்திலுள்ள கல், மண், தட்பவெப்ப நிலைகள் போன்றவற்றின் மேலதிக தகவல்களை துல்லியமாக படங்களாகவும் கியூரியோசிற்றி தற்போது வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கியூரியோசிட்டியில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள கெமரா மற்றும் ரொபட்டிக் அமைப்புக்கள் சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா…
ஆரம்பத்தில் நிலவுக்கு குறியேற அறிவியல் உலகில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது கைகூடவில்லை. ஆனால் அண்மையில் நாசாவின் முன்னாள் விஞ்ஞானிகள் சிலர் இணைந்து ‘கோல்டன் ஸ்பைக்’ எனும் நிறுவனத்தின் மூலம் நிலவிற்கு தேசத்தின் பெருமைக்காக அல்லது ஆராய்ச்சிகளுக்காக ஆட்களை அழைத்துச் செல்ல முடிவுசெய்துள்ளனர்.
இதற்கான கட்டணம் வாயைப் பிளக்க வைக்கிறது. அதாவது அமெரிக்க டொலரில் 1.5 பில்லியன்களாகும். இது இருவருக்கான கட்டணம் மட்டுமே. இவ்வாறான அதிக செலவுகள் காரணமாக நாசாவே நிலவிற்கு மனிதனை அனுப்புவதனை கடந்த 40 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் அமைப்பாளரான எலன் மஸ்க் என்பவர் செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றை ஏற்படுத்தி அதில் சுமார் 80ஆயிரம் பேரை குடியமர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
முதற்கட்டமாக முன்னேறிய நாடுகளிலுள்ள தேகாரோக்கியமுடைய நடுத்தர வயதினரை தலா ஒருவருக்கு 5 கோடி செலவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சேகரிக்கக் கூடிய குறைந்தளவிலான தொகையாகவே இதனை நிர்ணயித்துள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் அங்கே எதிர்காலத்தில் வரவுள்ளவர்களில் நலனுக்காக பணியாற்றி விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. மேலும், வீடுகள் கட்டுவதற்கான உபகரணங்களையும் கொண்டுசெல்ல தயார் செய்யப்படுகிறது.
முதலில் பயணம் செய்யவுள்ளவர்கள் தங்கவென காபனீரோட்சைட் நிரப்பட்ட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளது. அதன் மேல் சூரியனின் வெப்பத்தைத் தாங்க நீர் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் சுதந்திரமாக செவ்வாய் கிரகத்தில் விவசாயத்தினை மேற்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே முதற் பயணத்தின் போதே விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், மீத்தேன், ஆக்ஸிஜன் வாயுக்கள் போன்றவை எடுத்துச்செல்லப்படவுள்ளது. தூர நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சவால்மிக்க திட்டத்தில் பங்குகொள்ள தற்போது, உலகிலுள்ள ஒரு லட்சம் பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் ஆர்வம் காட்டுகின்றனர். இத்திட்டம் வெற்றி பெறுமானால், பூமியிலுள்ள 7 பில்லியன் மக்களும் ஆசைப்படுவார்கள்.
அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் இத்திட்டம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இப்போதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இதற்கென செங்குத்தாக மேலெழும்பவும் தரையிறங்கவும் கூடிய விசேடமான ரொக்கட் ஒன்று பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது.
இந்த ரொக்கட்டுக்கு ‘பல்கொன் 9′ என பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு லண்டனில் உள்ள ராயல் வான்வழி சமூகத்தில் வைத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் அமைப்பாளரும், முதன்மை செயல் அலுவலருமான எலன் மஸ்க் தெரிவித்தார்.
எனவே விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டமானது ‘செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க’ என அழைக்கபோவதை உறுதியாக நம்புகிறது அறிவியல் உலகம். அந்த நம்பிக்கை நிஜமாகும் போது அந்த சவால்மிக்க பயணத்திற்கு நாமும் தயாராவோம்! 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template