அசைவம் தவறா? சைவம் சரியா? இப்படியே ஆளாளுக்கு வாதிட்டு எதைச் சாப்பிடுவது என்று மாறுபட்ட கருத்துக்களோடு இருக்கையில், இதில் சத்குருவின் கருத்தென்ன? வழக்கம் போல் மாறுபட்ட சிந்தனைத் துளிகளை வழங்கியுள்ளார். அறிந்து கொள்ள மேலே படியுங்கள்… சத்குரு: உணவு மேசையில் அமர்ந்திருக்கிறீர்கள்! பலவிதமான பதார்த்தங்கள் நிரம்பி இருக்கின்றன. நீங்கள் உணவருந்தத் தயார். இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது? ஆனந்தமாக இருந்தால், மனசுக்குள் திரைப்பட பாடலொன்று ஓடும். நட்போ, உறவோ அருகில் இருந்தால், அரட்டைக் கச்சேரி ஆரம்பிக்கும். அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தால் எதிலும் மனசு லயிக்காது. ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ, அப்போது உங்களை எரிச்சலும், கோபமும் எடுத்துச் சுவைத்துக் கொண்டு இருக்கும் சரிதானே! இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. நீங்கள் படிக்கப் போவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதரின் கதை… மஹாவீரர், ஒரு சத்ரியர். மாமிசம் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சாப்பிடும்போது, ‘இதுவும் உயிர்தானே, நாம் ஏன் இதைக் கொன்று சாப்பிட வேண்டும்? இது சரியல்லவே’ என்று ஒரு திடீர் சிந்தனை. அப்போதிருந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு முழுவதுமாக தாவர உணவுக்கு மாறினார். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னொரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தபோது, அவர் எந்த மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தாரோ, அந்த மரம் அவர் பார்த்த எந்த விலங்கையும்விட, எந்தத் தாவரத்தையும்விட மிகவும் உயிரோட்டமாக இருப்பதை உணர்ந்தார். நான் இன்னும் தவறு செய்கிறேனே. இந்த மரத்திலிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிடுகிறேன். இதைச் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று நினைத்தார். அப்புறமென்ன, காய்கறிகளையும் பழங்களையும் உண்ண மறுத்தார். பழம் தானாகக் கீழே விழும் வரை காத்திருந்து, அதன் பிறகே அந்தப் பழத்தை எடுத்துச் சாப்பிட்டார். பழம் விழவில்லையென்றால் அவர் சாப்பிட மாட்டார். காய்கறிகள் உயிர்ப்போடு இருக்கும்போது அவற்றைச் சாப்பிடமாட்டார். அவை அழுக ஆரம்பித்த பிறகே சாப்பிடுவார். இப்படியே சில காலம் கடந்தது. ஒரு நாள் அழுகிய காய் ஒன்றை விழிப்புணர்வுடன் சுவைத்துக் கொண்டு இருந்தார் மகாவீரர். அப்போது அந்த அழுகிய காய்கறி மிகவும் உயிர்ப்புடன் இருப்பதைச் சட்டென உணர்ந்தார். அவ்வளவுதான்… இதுவும் இனி வேண்டாம் என எல்லாம் துறந்து பட்டினியாய் இருக்க ஆரம்பித்தார். 12 வருடங்களில் 11 வருடங்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தார். அதாவது 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடுவார். மீண்டும் 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே அந்த ஒருவேளை உணவையும் சாப்பிடுவார். இப்படி 12 வருடங்களில் 11 வருட காலம் அவர் சாப்பிடவே இல்லை. மகாவீரரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பிறகு ஒருநாள், ‘தனக்குள்ளும் உயிர் இருக்கிறதே, மற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த உயிரை மிகவும் துன்பப்படுத்துகிறோமே! என்று உணர்ந்தார். அதன் பிறகே வழக்கம்போல உணவருந்த ஆரம்பித்தார். இப்போது கேள்வி வருகிறது… எதை நாம் உண்ணலாம். எதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் உயிர் வாழ, எதையாவது கொன்றுதான் சாப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையின் தன்மை அப்படித்தான் இருக்கிறது. தாவரங்களின் தன்மையைவிட விலங்கின் தன்மை மனிதனுக்கு நெருக்கமாய் இருப்பதால்தான், விலங்குகளைத் துன்புறுத்துவதை ‘அஹிம்சை’ என்றும் கருதுகிறோம். ஏனெனில் விலங்குகள் நம்மைப் போல் வாழ்கின்றன. நீங்கள் என் கையை அறுத்தால் ரத்தம் வருகிறது. ஒரு கோழிக்குஞ்சை அறுத்தாலும் ரத்தம் வருகிறது. அதனால்தான் நாம் விலங்கின் தன்மைக்கு நெருக்கமாய் இருப்பதாகக் கருதிக்கொள்கிறோம். உணர்ச்சியின் அடிப்படையில் நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் விலங்கு, தாவரம் இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நீங்கள் ஒரு விலங்கைத் துன்புறுத்தினாலும் தாவரத்தைத் துன்புறுத்தினாலும் அந்த இரண்டு உயிர்களுக்கும் வலியும் பாதிப்பும் ஒரே விதமாகத்தான் இருக்கும். இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன. இப்போது செய்ய முடிவது ஒன்றுதான். சாப்பிடுவதையாவது நன்றியுணர்வுடன் சாப்பிடலாம். உணவின் ஒவ்வொரு கவளத்தையும் நன்றியுணர்வுடன் சாப்பிட வேண்டும். ஆம், நன்றியுணர்வுடன் சாப்பிட்டு பாருங்கள். என்ன சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆனந்தமாக இருக்கும். உடலுக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். சிறப்பான உடல் நலத்துடன் இருப்பீர்கள். இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும். பல உயிர்கள் நமக்காக இறக்கின்றன. சிறிதாவது நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டாமா? நமக்காக உயிர்விடும் உயிரினங்களுக்காக சிறிதாவது உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்தானே, நன்றியுணர்வுடன் சாப்பிடுங்கள், நம்மால் செய்ய முடிந்தது அதுதான் – நன்றி
Home »
» அசைவம் தவறா? சைவம் சரியா?
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !