கு. ராமகிருஷ்ணன் படங்கள்: ர. அருண்பாண்டியன்
மாற்று வழி
வேளாண் கருவிகள், விவசாய வேலைகளை எளிதாக்குவதற்காகத்தான். ஆனால், பல சமயங்களில் அவை வேலைகளுக்கு இடைஞ்சலாகவும் உருவெடுத்துவிடுவது உண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அத்தகையக் கருவிகள் ஓரங்கட்டப்பட்டு, தேமே என்று தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால், கோதண்டம் போன்ற விவசாயிகளின் கைகளில் கிடைத்தால்… தேவைக்கேற்ப அவை மறுவடிவம் எடுத்துவிடும். ஆம்… தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை, முன்னோடி விவசாயி கோதண்டம், வேளாண் பணிகளுக்காக சின்னச்சின்னக் கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். அதேபோல, எப்படிப்பட்ட கருவியாக இருந்தாலும், அவை விவசாயத் தேவைக்கு நூறு சதவிகிதம் பயன்படும் வகையில் மாற்றி அமைப்பதிலும் கில்லாடி. இதன் மூலமாகவே, இப்பகுதி விவசாயிகளிடம் இவர் பிரபலமும்கூட!
ஒரு பகல்பொழுதில் கோதண்டத்தை அவருடைய நிலத்தில் சந்தித்தபோது, ”நான் 20 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். முழுநேர விவசாயியாக இருப்பதோடு… இயந்திரங்கள் தொடர்பான விஷயங்களில் சின்ன வயதிலிருந்தே ஆர்வம் உண்டு என்பதால், வேளாண் கருவிகளை, வெற்றிகரமாக என்னால் மறுஉருவம் கொடுக்க முடிகிறது. இடையில், போர்வெல் குழாய்களுக்கு ‘சிலாட்டர் பாயிண்ட்’ போடும் நிறுவனத்தை நடத்தியிருக்கிறேன். அந்த அனுபவமும் இதற்குக் கைகொடுக்கிறது” என்று உற்சாகமாக சொன்னவர், தொடர்ந்தார்.
குழிபோடும் கருவி!
”நெல் அறுவடைக்குப் பிறகு, ஈரமான மண்ணில் பருத்தி, சோயாபீன்ஸ் விதைப்பு செய்வது விவசாயிகளின் வழக்கம். இதற்கு ஆள் வைத்துதான் குழி போடுவார்கள். வேலையாட்கள், கூர்மையான குச்சியால் வரிசையாக குழி போட்டுக் கொண்டே செல்வார்கள். இது மிகவும் சிரமமான வேலை. இடைவெளியும் துல்லியமாக இருக்காது. நேரமும் அதிகமாகும். மனித உழைப்பு வீண்விரயம்தான். இதற்கு மாற்றாக, எளிய முறையில ஒரு கருவியை உருவாக்கினேன். இதை நிலத்தில் தள்ளிக் கொண்டே சென்றால், ஒரேசமயத்தில் இரண்டு வரிசைக்குக் குழி போடும்.
சக்கரத்தைச் சுற்றியும் 42 டிகிரி சாய்வாக கம்பி இதில் இருக்கின்றது. இதுதான், தலா 5 அடி இடைவெளியில் குழிகளைப் போடும். கம்பி செங்குத்தாக இருந்தால், வெளியில் வரும்போது குழியைப் பெயர்த்துக் கொண்டு வந்துடும். அதனாலதான் சாய்வாக அமைத்துள்ளேன்.
குழிகளுக்கு இடையேயான இடைவெளி நிரந்தரமானது. தேவைக்குத் தகுந்த மாதிரி இந்தக் கருவியில் மாற்றம் செய்ய முடியாது. ஆனால், வரிசைக்கு வரிசை உள்ள இடைவெளியை மாற்றி அமைக்கலாம். சக்கரத்தை நகர்த்தி, போல்ட் மற்றும் நட்டைத் திருகிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒன்றரை அடி, அதிகபட்சம் இரண்டரை அடி இடைவெளியில வரிசை அமைக்கலாம். இன்னும் அதிக இடைவெளி தேவை என்றால், சக்கரங்கள் சுழலக்கூடிய அச்சுக் கம்பியை, தகுந்தாற்போல நீளமாக மாற்றிக் கொள்ளலாம்.
குழி போடுகிற கம்பியின் நீளம் 4 அங்குலம். இது நிலத்தில் அதிகபட்சம் மூன்று அங்குல, ஆழத்துக்குக் குழி போடும். இயந்திரத்தின் மேல் பகுதியில் அதிக கனமுள்ள மரக்கட்டைகள்… மணல் முட்டைகள் வைத்தால், 3 அங்குல ஆழத்துக்குக் குழி கிடைக்கும். கனத்தைக் குறைத்தால், குறைவான ஆழமுள்ள குழிகளைப் போடலாம். தேவையைப் பொருத்து இப்படி செய்துகொள்ளலாம். இந்தக் கருவியை உருவாக்க 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது. இதைப் பயன்படுத்தி, ஒரே நாளில் 2 ஏக்கர் வரைக்கும் குழி எடுக்கலாம். வேலையாட்களைப் பயன்படுத்தினால், ஒரு ஏக்கருக்குதான் குழி எடுக்க முடியும். இதற்கே 2,500 ரூபாய் செலவாகும்” என்றார்.
குறுவைக்கு ஏற்ற நடவு இயந்திரம்!
நாற்று நடவு செய்யும் கருவியில் கோதண்டம் செய்துள்ள மாற்றம், இப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைப் பற்றியும் பேசியவர் ”நாற்று நடும் கருவி மூலமாக, 10 முதல் 12 அங்குல இடைவெளியில்தான் குத்துகள் அமைக்க முடியும். இது, சம்பா நடவுக்கு சரியாக இருக்கும். ஆனால், குறுவை என்றால், நெருக்கமாக நடவுசெய்தாக வேண்டும். காரணம், 100-110 வயதுடைய குறுகிய கால நெல் ரகங்கள்தான் குறுவையில் பயிரிடுவோம். இவை, குறைவான எண்ணிக்கையிலேயே தூர் வெடிக்கும். ஒரு குத்துக்கு சராசரியாக 9 தூர்கள்தான் வெடிக்கும் (இதுவே சம்பா என்றால், ஒரு குத்துக்கு 20-25 தூர்கள் வெடிக்கும்). குறுவையில் மகசூலும் குறைவாகவே இருக்கும். அறுவடை சமயத்தில் மழை பெய்து மகசூல் இழப்பு ஏற்படும். இதையெல்லாம் ஈடுசெய்வதற்காக குத்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால், நடவு இயந்திரத்தில் இதற்கான வாய்ப்பு இல்லாததால், குறுவையில அதைப் பயன்படுத்த விவசாயிகள் விரும்புவது இல்லை. நான் வாங்கிய நடவு இயந்திரத்திலும், இதே பின்னடைவுதான். என்னிடம் இதை விற்பனை செய்த நிறுவனம், ‘இதை மாற்றி அமைக்க முடியாது’ என்று கையை விரித்துவிட்டது.
நானே களத்தில் இறங்கி மாற்று ஏற்பாடு செய்துவிட்டேன். குறுவைக்கு ஏற்ற வகையில நெருக்கமாக நாற்று நடவு செய்ய, பிரத்யேக மான பல் சக்கரங்களை உருவாக்கினேன். இதை நாற்று நடும் கருவியில் பொருத்தினால், 4 அடி இடைவெளியில குத்துகள் அமையும். இந்த சக்கரங்களை உருவாக்க… சுமார் ஆயிரம் ரூபாய்தான் செலவு பிடித்தது. குறுவைக்கு மட்டும் இந்த சக்கரங்களைப் பயன்படுத்துகிறேன். சம்பாவுக்கு, ஏற்கெனவே கருவியில் இருந்த பல் சக்கரங்களைப் பொருத்திவிடுவேன்” என்று சொன்னார்.
சேற்றில் புதையாத கோனோ வீடர்!
கோனோ வீடர் எனும் களைக்கருவியும், இவர் கைப்பட்டு, தன் பிறவிப் பயனை அடைந்திருக்கிறது. ”வழக்கமாக, கோனோ வீடர் கருவியில் உள்ள சக்கரம் 6 அங்குல விட்டத்தில்தான் இருக்கும். அந்தளவுக்கு சக்கரம் சிறியதாக இருந்தால், சேற்றைக் கிளற முடியாமல் அடிக்கடி சிக்கி கொள்ளும். அதனால்தான் 18 அங்குல விட்டமுள்ள சக்கரம் அமைத்துள்ளேன். இதை மிக எளிதாக, பயிருக்கு நடுவே உருட்ட முடியும். சேற்றிலும் சிக்காது. பயிரையும் தொந்தரவு செய்யாது. பொதுவாக சக்கரத்தில் உள்ள பிளேடுகள் செங்குத்தாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். நான் சாய்வாக அமைத்துள்ளேன். களைகள் அடர்த்தியாக இருக்கும் இடத்தில், கோனோ வீடரை பின்னோக்கி இழுத்தோம் என்றால், களைகளை அப்படியே முழுமையாக அறுத்துக்கொண்டு வந்துவிடும். கடினமான இறுகிய மண்ணையும்கூட அடியோடு கீறிக் கிளறிவிடும். கோனோ வீடரை முன்னோக்கித் தள்ளினால்… களைகளும் மண்ணும் தரையோடு தரையாக அழுந்திவிடும். இதை உருவாக்க, 2,500 ரூபாய் செலவாயிற்று” என்ற கோதண்டம்,
பலே பர்மா செட்!
”நடவுக்கு முன் மண்ணை சமப்படுத்துவதற்காக நுகத்தடியில், ‘பர்மியர் செடோன்’ (மக்கள் வழக்கத்தில் ‘பர்மா செட்’) என்ற கருவியைப் பொருத்தி, மாடுகள் மூலமாக இழுப்பார்கள். வழக்கமாக, இரண்டரை அடி அகலம் கொண்டது இக்கருவி. இதன் உருளை, 10 அங்குல விட்டத்தில் இருக்கும். தடிமனான இரும்புப் பட்டை மற்றும் கனமான உருளைகள் என்று பயன்படுத்துவதால், இதன் எடை 15 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும். பள்ளமான பகுதிகளில் பயன்படுத்தும்போது அமிழ்ந்து, புதைந்துவிடும். விட்டம் பெரிதாக இருப்பதால், மண்ணையும் சேற்றையும் அதிகமாகக் கிளறி, முட்டு முட்டாக ஒதுக்கி வைத்துவிடும்.
இந்தப் பிரச்னைகளையும் நானே சரி செய்துவிட்டேன். நான் உருவாக்கி இருக்கும் ‘பர்மியர் செடோன்’, பல வகைகளில் சிறப்பானது. ஏழரை அடி அகலம், 6 அங்குல விட்டம் கொண்டது. கனம் குறைவான உருளை, மிகமெல்லிய இரும்புப் பட்டை என்று பயன்படுத்தி இருக்கிறேன். இக்கருவியின் மொத்த எடையே 10 கிலோதான். கன்றுக்குட்டி கூட இதை இழுக்கும். பள்ளமான பகுதிகளில் புதையாது. மேற்பரப்பு மண் மற்றும் சேற்றை மட்டும் லாவகமாக இது சமப்படுத்தும்” என்று பெருமிதமாகச் சொன்னவரை, பெருமையோடு பார்த்தபடியே விடைபெற்றோம்.
தொடர்புக்கு: கோதண்டம், செல்போன்: 90421-70460, ஜோதிராமலிங்கம், தொலைபேசி: 0435-2454414
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !