செவ்வாயில் ‘இரும்பு விண்கற்கள்’ கண்டுபிடிப்பு... கியூரியாசிட்டி அனுப்பிய போட்டோவில் ஆச்சர்யம்!
மெரிக்காவின் நாசா அனுப்பி வைத்துள்ள கியூரியாசிட்டி விண்கலமானது, செவ்வாய் கிரகத்தில் பெருமளவில் இரும்பு விண்கற்கள் இருப்பதை கண்டுபிடித்துக் கூறியுள்ளது. சர்வதேச அளவில் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் குறித்து ஆராய்ச்சி செய்ய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அங்கிருந்தபடி புகைப்படங்களை அனுப்பி வருகிறது கியூரியாசிட்டி. அதன்படி, சமீபத்தில் கியூரியாசிட்டி அனுப்பிய புகைப்படங்களில் அங்கு இரும்பு விண்கற்கள் பெருமளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கியூரியாசிட்டி படம் எடுத்து அனுப்பியுள்ள செவ்வாய் கிரகத்தில் கிடக்கும் இந்தக் கற்கள் 2 மீட்டர் நீளம் மற்றும் அதே அளவிலான அகலம் கொண்டதாக உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ள முதலாவது இரும்பு விண்கல் இதுதான். இதற்கு லெபனான் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். லெபனான் நாட்டைப் போன்ற வடிவம் கொண்டிருப்பதால் இதற்கு இப்பெயரை நாசா சூட்டியுள்ளது.
பாறைகளும், உலோகங்களும் இணைந்த கலவைதான் மெட்டியோரைட்ஸ் என்று சொல்லப் படக் கூடிய இரும்பு விண் கல்லாகும். விண்ணிலிருந்து இவை பெரும்பாலும் பொதுவாக பூமியில் விழுவது வழக்கமானது.
இத்தகைய இரும்பு விண்கல்லை வைத்து பல அரிய விஷயங்களை நாம் கண்டுபிடிக்க முடியும். காலக் கடிகாரம் போன்றவை இவை என்றால் அது மிகையில்லை. சூரிய குடும்பத்தின் பல புதைந்து போயுள்ள ரகசியங்களை, இரும்பு விண்கல் மூலம் நாம் அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட இரும்பு விண்கற்கள், செவ்வாய் கிரகத்தில் நிரம்பியிருப்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
தோராயமாக 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் சூரியக் குடும்பமும், நமது பூமி உள்ளிட்ட கிரகங்களும் உருவாக ஆரம்பித்தன. அந்த சமயத்தில், பெரும் பெரும் பாறைகளும், விண்கற்களும் மோதி, ஒன்றாக மாறி பெரும் நெருப்புக் கோளமாக மாறி உருவானதுதான் பூமி. அப்போது தான் செவ்வாய் உள்ளிட்ட இதர கிரகங்களும் உருவாகின.
இப்படி மோதி ஒன்றானபோது அந்தக் கற்கள், பாறைகளில் இருந்த உலோகங்கள் குறிப்பாக இரும்புத்தாது உருகி கிரகத்தின் மையப் பகுதிக்குப் போய் விட்டது. எல்லா கிரகங்களிலும் இரும்பு உள்ளிட்ட கன ரக உலோகங்கள் இப்படி மையப் பகுதியில் உள்ளனவாம். இது போக லேசான பளு கொண்ட பாறைக் குழம்பு ஆறி, பொடிப் பொடியாகி நிலப்பரப்புகளாக மாறி விட்டன.
தற்போது செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரும்பு விண்கற்களின் மையப் பகுதியில் முன்பு ஒலிவின் தாதுக்கள் இருந்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே செவ்வாயில் உள்ள விண்கல் குறித்து 2005ல் அமெரிக்கா அனுப்பிய ஆப்பர்சூனிட்டி விண்கலமும் படம் பிடித்துக் காட்டியுள்ளது
செவ்வாய் கிரகத்தில் விண்கற்கள் ஏராளமாக உள்ளன என்பது முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். இந்தக் கற்கள் அவ்வளவு சீக்கிரம் துருப்பிடித்து இற்றுப் போவதில்லை. பல பில்லியன் ஆண்டுகள் கூட இவை அப்படிய இருக்குமாம். செவ்வாயின் நிலப்பரப்பில் இவை ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து காணப்படும்.
செவ்வாய் கிரககத்தில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் 10 கிராமுக்கும் மேற்பட்ட எடை கொண்ட 500 முதல் 50,000 விண்கற்கள் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த கற்கள் அனேகமாக பூமியிலிருந்து போய் செவ்வாய் கிரகத்தில் விழுந்தவையாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது. எப்படி செவ்வாய் கிரகத்தின் விண்கற்கள் பூமிப் பரப்பில் விழுந்தனவோ அதேபோல பூமியின் விண்கற்கள் செவ்வாயில் விழுந்திருக்கலாம் என்கிறார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !