அங்கப் பிரதட்சிணம் செய்யும் யுரேனஸ் என்ற கிரகம் - nelliadynet
Headlines News :
Home » » அங்கப் பிரதட்சிணம் செய்யும் யுரேனஸ் என்ற கிரகம்

அங்கப் பிரதட்சிணம் செய்யும் யுரேனஸ் என்ற கிரகம்

Written By www.kovilnet.com on Monday, April 7, 2014 | 11:12 PM


கோயிலுக்குச் செல்பவர்களில் பெரும்பாலோர் வலம் வருவார்கள். நேர்த்திக் கடன் செய்த சிலர் அங்கப் பிரதட்சிணம் செய்வர். அதாவது தரையில் படுத்து உருண்டபடி கடவுளை வலம் வருவர்.

சூரிய மண்டலத்தில் உள்ள (புளூட்டோ உட்பட) ஒன்பது கிரகங்களில் யுரேனஸ் என்ற கிரகம் தவிர மற்ற அனைத்தும் சூரியனை வலம் வருகின்றன. ஆனால் யுரேனஸ் அங்கப் பிரதட்சிணம் செய்கிறது. உழக்கை தரையில் கிடத்தினால் அது உருண்டு செல்வது போல யூரேனஸ் சூரியனைச் சுற்றுகிறது. எல்லா கிரகங்களுக்கும் வட துருவம் மேல் நோக்கி இருக்கும். ஆனால் யுரேனஸ் படுத்தபடி சுற்றுவதால் சுமார் 40 ஆண்டுக் காலம் அதன் வட துருவம் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். அப்போது தென் துருவத்தில் இரவாக இருக்கும். பிறகு ஒரு கட்டத்தில் தென் துருவம் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். அப்போது வட துருவப் பகுதியில் இரவாக இருக்கும்.

அமாவாசை இரவில் நீங்கள் விடிய விடிய வானைப் பார்த்துக் கொண்டிருந்தால் அநேகமாக புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கிரகங்களையும் பார்த்துவிடலாம். இவை அனைத்தையுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மனிதன் சிந்திக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த ஐந்து கிரகங்களை மட்டுமே பார்த்து வந்தான். சூரிய மண்டலத்தில் இதற்கு அப்பாலும் கிரகம் இருக்க முடியும் என யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இப்படியான பின்னணியில்தான் சனி கிரகத்துக்கும் அப்பால் உள்ள ஒரு கிரகத்தைச் சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

ஹெர்ஷல் (1738-1822) ஓர் அதிசய மனிதர். உலகில் முதன் முறையாகப் புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்த அவர், ராணுவத்தில் பாண்ட் வாத்தியம் வாசிப்பவராக இருந்து விட்டு 38வது வயதில் வானவியல் பக்கம் திரும்பியவர். ஜெர்மனியின் ஒரு பகுதி அப்போது இங்கிலாந்து மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதுதான் அவர் ராணுவ பாண்ட் கோஷ்டியில் சேர்ந்தார். அந்த வேலை பிடிக்காமல் போகவே சொல்லாமல் கொள்ளாமல் ராணுவத்திலிருந்து தப்பி ஓடினார். ராணுவத்திலிருந்து திருட்டுத் தனமாகத் தப்பி ஓடியவரை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்க முடியும். ஹெர்ஷல் பின்னர் இங்கிலாந்தில் குடியேறி பிரபல வானவியல் நிபுணராகிய பிறகு, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஒருசமயம் அவர் நூலகத்தில் வானவியல் தொடர்பான ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தார். அவருக்கு உடனே வானவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.

வானவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதென்றால் டெலஸ்கோப் வேண்டுமே. கடையில் சிறிய டெலஸ் கோப் ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தலானார். வாடகை கொடுத்து கட்டுப்படியாகவில்லை. உடனே அங்குமிங்குமாக லென்ஸ் உட்பட தேவையான பொருட்களை வாங்கி டெலஸ்கோப்பைத் தாமே உருவாக்கிக் கொண்டார். பிறகு லென்ஸுகளையும் தானே தயாரிக்கலானார். அடுத்து தான் உருவாக்கிய டெலஸ்கோப்புகளை விற்பதிலும் ஈடுபட்டார். வாழ்க்கை நடத்த இது போதிய வருமானத்தை அளித்தது. இசை வகுப்புகளை நடத்திக் கொண்டே கிடைத்த நேரங்களில் டெலஸ்கோப் தயாரிப்பு. பகல் எல்லாம் இசை வகுப்பு, டெலஸ்கோப் தயாரிப்பு. இரவானால் டெலஸ்கோப் மூலம் வான் ஆய்வு. அவர் பல சிம்பனிகளை எழுதியவர். ஓர் இசைக் குழுவின் டைரக்டராகவும் இருந்தவர்.

ஹெர்ஷல் தமது வானவியல் ஆய்வுகளில் முதலில் நட்சத்திரங்களை ஆராய ஆரம்பித்தார். வானில் நட்சத்திரங்கள் இரட்டை இரட்டையாக ஜோடி சேர்ந்து காணப்படும். இப்படியான நட்சத்திரங்களைப் பட்டியலிட ஆரம்பித்தார். நட்சத்திரக் கூட்டங்களையும் பட்டியலிட்டார். நட்சத்திரங்கள் வானில் நிலையாக ஒரே இடத்தில் இருப்பவை. இடம் விட்டு நகராதவை. ஆகவே வானில் ஓர் ஒளிப்புள்ளி இடம் பெயருமானால் அது நட்சத்திரம் அல்ல என்று உறுதியாகக் கூற முடியும். இப்படி இடம் நகரும் ஒளிப்புள்ளி ஒன்றை ஹெர்ஷல் 1781-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். அநேகமாக அது வால் நட்சத்திரமாக இருக்கும் என்று கருதினார்.

தாம் ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஹெர்ஷல் அறிவித்தார். ஆனால் அந்த ஒளிப்புள்ளிக்கு வால் நட்சத்திரத்துக்கே உரிய தலையும் இல்லை, வாலும் இல்லை. மற்ற வான் ஆராய்ச்சியாளர்கள் அந்த ஒளிப் புள்ளியை விரிவாக ஆராயலாயினர். அது வால் நட்சத்திரமாக இருக்க முடியாது. ஒரு கிரகமாக இருக்க வேண்டும் என்று பல விஞ்ஞானிகளும் கூறினர். அதன் சுற்றுப் பாதையை ஆராய்ந்தபோது அது கிரகமே என்று உறுதியாகியது.

ஹெர்ஷல் தாம் கண்டுபிடித்த அந்தக் கிரகத்துக்கு இங்கிலாந்து மன்னரின் பெயரை வைத்தார். பின்னர் அதற்கு யுரேனஸ் என்று பெயர் மாற்றப்பட்டது..

யுரேனஸ் கிரகம் வியாழன் கிரகத்தைப் போலவே பனிக்கட்டி உருண்டை. அது வியாழன் கிரகத்தை விடச் சற்றே சிறியது. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ் இடம் பெறவில்லை என்றாலும் மேற்கத்திய நாடுகளில் ஜோதிடம் கூற யுரேனஸ் கிரகத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.

யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 300 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ளதைப் போல சுமார் 20 மடங்கு. ஆகவே தான் வெறும் கண்ணால் யுரேனஸ் கிரகத்தைப் பார்க்க முடிவதில்லை. யுரேனஸ் கிரகத்திலிருந்து பார்த்தால் சூரியன் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போலத் தென்படும்.

மிக நீண்ட காலம் யுரேனஸ் கிரகத்தைப் பற்றி விரிவாகத் தெரியாமல் இருந்தது. எனினும் 1977-ம் ஆண்டில் அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பினால் செலுத்தப்பட்ட வாயேஜர் -2 எனப்படும் ஆளில்லா விண்கலம் 1986-ம் ஆண்டில் யுரேனஸ் கிரகத்தை மிகவும் நெருங்கிக் கடந்து சென்றது. அப்போது அந்த விண்கலம் யுரேனஸ் கிரகம் பற்றிப் பல புதிய தகவல்களைக் கண்டுபிடித்தது.

சனி கிரகத்துக்கு உள்ளது போலவே யுரேனஸ் கிரகத்துக்கும் வளையங்கள் உள்ளன. எனினும் இந்த வளையங்கள் மிக மெல்லியவையாகத் தெரிகின்றன.
பூமிக்கு ஒரு சந்திரன். ஆனால் யுரேனஸ் கிரகத்துக்கு 27 சந்திரன்கள். யுரேனஸ் மல்லாக்கப் படுத்தபடி சூரியனைச் சுற்றுவதால் அதன் சந்திரன்கள் பெரிய ஜெயண்ட் வீல் போல யுரேனஸை மேலும் கீழுமாகச் சுற்றுகின்றன.

யுரேனஸின் காற்று மண்டலம் முக்கியமாக ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது. மீதேன் போன்ற வேறு சில வகை வாயுக்களும் உள்ளன. டெலஸ்கோப் மூலம் பார்த்தால் யுரேனஸ் கிரகம் நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதற்கு அதன் காற்று மண்டலத்தில் உள்ள மீதேன் வாயுவே காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் யுரேனஸ் ‘படுத்த’ நிலையில் சூரியனைச் சுற்றுவதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. யுரேனஸ் ஆரம்பத்தில் மற்ற கிரகங்களைப் போல செங்குத்து நிலையில் இருந்திருக்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு கால கட்டத்தில் யுரேனஸ் மீது பூமியொத்த கிரகம் மோதியபோது அது தலை சாய்ந்து போயிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

யுரேனஸ் கிரகத்தை விரிவாக ஆராய 2022-ம் ஆண்டு வாக்கில் ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும் என்று சுமார் 120 விஞ்ஞானிகள் 2010-ம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு யோசனை தெரிவித்தனர். அமெரிக்காவிலும் இப்படியான ஒரு யோசனை கூறப்பட்டுள்ளது.

யுரேனஸுக்கு விண்கலத்தை அனுப்ப 2018-ம் ஆண்டு உகந்ததாக இருக்கும் என்றும் ஒரு யோசனை கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு விண்கலம் அனுப்பப்பட்டால் அது யுரேனஸ் கிரகத்துக்கு 2030-ம் ஆண்டு வாக்கில் போய்ச் சேரும்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template