75 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு உலகின் முதலாவது செயற்கை இருதய மாற்று சிகிச்சையினை செய்து பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். பிரான்ஸின் தலைநகர் பரிசிலுள்ள ஜோர்ஜெஸ் பொம்பிடோ மருத்துவமனையில், இருதயமாற்று சத்திரசிகிச்சை நிபுணர் அலன் கார்பென்டியர் தலைமையிலான மருத்துவர்களே மேற்படி சாதனை இருதய மாற்று சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர்.
உயிரியர் மருத்துவ நிறுவனமான “காமெட்” நிறுவனத்தில், சுமார் 25 வருடங்களாக சோதனை முயற்சியில் இருந்த செயற்கை இதயத்தினையே 75 வயதுடைய முதியவருக்கு பொருத்தியிருக்கிறார்கள். இந்த இருதய மாற்று சிகிச்சை கடந்த புதன்கிழமை (18) ஜோர்ஜெஸ் பொம்பிடோ மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இந்த இருதய மாற்று சிகிச்சை பற்றிய கடந்த சனிக்கிழமை (21) தான் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
செயற்கை இதயத்தினை உருவாக்கிய மருத்துவர்களான அலன் கார்பென்டியர் மற்றும் பிலிப்பே பௌலற்றி ஆகியோர், இந்த செயற்கை இதய மாற்று சிகிச்சை பற்றி குறிப்பிடுகையில்...
“சாதாரணமான மனித இதயத்தினை விட மூன்று மடங்கு அதிகமான, அதாவது சுமார் 900 கிராம் நிறையுடையது இந்த செயற்கை இதயம். லித்தியம் பற்றரிகளின் உதவியுடன் இந்த இதயம் இயங்குகிறது. தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை இதயமானது 75 வீதமான ஆண்களுக்கும் 25 வீதமான பெண்களுக்கும் பொருந்தக் கூடியது. இருந்தபோதிலும், இதனை அனைத்து தரப்பினருக்கும் பொருத்தக்கூடிய வகையில் தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த செயற்கை இருதய மாற்று சிகிச்சைக்கு சுமார் 160,000 ஈரோக்கள் (சுமார் 29 மில்லியன் ரூபாய்) செலவாகின்றன. சாதாரண இதயமாற்று சிகிச்சைக்கும் கிட்டத்தட்ட இதே அளவுதான் செலவாகின்றது. இந்த செயற்கை இதயமானது சுமார் 5 வருடங்கள் தொடர்ச்சியாக இயங்கக் கூடியது என்பது சிறப்பானதாகும்” என்று குறிப்பிட்டனர்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !