வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது. ஏன் தெரியுமா? - nelliadynet
Headlines News :
Home » » வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது. ஏன் தெரியுமா?

வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது. ஏன் தெரியுமா?

Written By www.kovilnet.com on Friday, August 2, 2013 | 1:38 AM

Wow! சிக்னல் பூமியை வந்தடைந்தது பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், சிறிது பௌதிகம் (Phisics) படிக்கலாமா? “பௌதிகம் என்றால் பல்கலைக் கழகத்திலேயே சிதறி ஓடுவோம். அது இங்கேயுமா? இப்போ எதுக்குப் பௌதிகம்” என்கிறீர்களா? பல்லைக் கடித்துக் கொண்டு படியுங்கள். பௌதிகம் ஏனென்று புரியும்.பிரபஞ்சம் என்பது மிகவும் அமைதியானது. அமைதி என்றால், அவ்வளவு அமைதி. நமது பூமியைப் பாருங்கள். அமைதியே இல்லாமல், இயற்கையானாலும், செயற்கையானாலும் எப்போதும் சத்தத்துடனேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. பூமியுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சம் ரொம்பச் சாதுவான பிள்ளை. வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது.பிரபஞ்சத்திலும் எத்தனையோ வெடிப்புகள் கணத்துக்குக் கணம் ஏற்படுகின்றன. சமயங்களில் நட்சத்திரங்களே வெடித்துச், சிதறுகின்றன. தினமும் ஒன்றுடன் ஒன்று நட்சத்திரங்களோ, கோள்களோ மோதித் தூளாகின்றன. அதனால் ஏற்படும் சத்தங்கள் நமக்கு கேட்கும் பட்சத்தில் நாம் இறந்தே விடுவோம். அவ்வளவு பாரிய சத்தம் உருவாகும். ஆனால் நமக்கு எதுவும் கேட்பதே இல்லை. அதிகம் ஏன்? நமது சூரியனில் கூட, கோடான கோடி ஐதரசன் குண்டுகள் வெடிப்பது போல, தினமும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் எங்கும் அமைதியே காணப்படுகிறது. “இவையெல்லாம் ரொம்பத் தூரத்தில் நடக்கின்றன,அதனால்தான் அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதில்லை” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அல்லக் காரணம். அங்கு ஏற்படும் வெடிப்பின் அளவுக்கு அந்தத் தூரங்கள் ஒன்றுமே இல்லை. நிச்சயம் கேட்டே தீரும். ஆனால் கேட்பதில்லை. சொல்லப் போனால், அவற்றுக்கு அருகில் நின்றாலும், அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதற்கு சாத்தியம் இல்லை. ஏன் தெரியுமா? இது பற்றி எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா?  ஒலி (சத்தம்) என்பது வேறு. ஒலியைக் கேட்பது என்பது வேறு. ஒலி எங்கும் உண்டு. அதைக் கேட்பது என்பதில்தான் நமக்குப் பிரச்சனை. ஒலியை நாம் எப்படிக் கேட்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.ஒரு இடத்தில் உருவாகும் ஒலி, நமது காதை வந்தடைவதற்கு ஊடகம் ஒன்று தேவை. பூமியில் அந்த ஊடகமாக இருப்பது காற்று. அதாவது அட்மாஸ்பியர். காற்று, சத்தத்தைக் கடத்திக் கொண்டு எமது காதை வந்தடைகிறது. பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சம் எங்கும் ஒலி உண்டு. ஆனால் நமக்குக் கேட்பதில்லை. காரணம் பூமியைத் தாண்டி எங்குமே காற்று இல்லை. பிரபஞ்சம் எங்கும் காற்றில்லா வெறுமைதான் உண்டு. சூரியனில் இருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ சத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காற்றுப் போன்ற ஊடகம் நிச்சயம் தேவை. நமது விஞ்ஞானம் அறிந்தவரை பூமியைப் போன்ற இவ்வளவு நேர்த்தியான அட்மாஸ்பியர் உள்ள கோள் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது கிரகங்களுக்குப் பூமி போன்ற அட்மாஸ்பியர் இருந்தாலும், அது அங்குள்ள சத்தத்தை உள் வாங்குமேயொழிய வெளிவிடாது. மொத்தத்தில் பிரபஞ்சத்தின் பாரிய வெடிப்புகளின் சத்தங்களை நாம் கேட்காமல் இருப்பதற்குக் காரணம், பிரபஞ்சம் காற்றில்லாப் பெருவெளியென்பதுதான்.
ஒலியும், ஒளியும் அலைகளாகத்தான் இருக்கின்றன. அலைகளாகச் செல்லும் அனைத்துக்கும் அலை நீளம் என்ற ஒன்று உண்டு. அலை நீளத்தை அளப்பதற்கு ’ஹேர்ட்ஸ்’ (Hertz – Hz) என்னும் அலகை நாம் பயன்படுத்துகிறோம். மனிதனது காதுக்கும், கண்ணுக்கும் ஒரு குறித்த அலை நீளங்களை மட்டுமே கிரகித்துக் கொள்ளும் சக்தி உண்டு. சூரியனில் இருந்து வரும் ஒளியில் மிகமிகச் சிறிய பகுதியான, ஏழு நிறங்கள் மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறது. அந்த ஏழு நிறங்கள் தாண்டிய, புற ஊதாக் கதிர்களும், இன்ஃப்ரா சிவப்புக் கதிர்களும் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை. இதே போலத்தான் ஒலியும். 20 Hzஇலிருந்து 20 KHz வரை உள்ள ஒலி மட்டும்தான் மனிதனால் கேட்க முடியும். அவை தாண்டிய ஒலிகள் ’கேளா ஒலிகள்’ எனப்படும். கேளா ஒலிகளில் முக்கியமானவை ரேடியோ அலைவரிசைகள் Radio Frequency-RF). 3 KHz இலிருந்து 300 GHz வரைக்கும் உள்ள அலை வரிசைகளைத்தான் ரேடியோ அலை வரிசைகள் என்பார்கள். அவற்றைக் கீழே ஒரு அட்டவணையில் தந்திருக்கிறேன்.
ரேடியே சிக்னல்கள் தானாக உருவாவதில்லை. அவை உருவாக்கப்படுபவை. மனிதனாலோ அல்லது வேறு உயிரினங்களினாலோ உருவாக்கப்படுபவைதான் இந்த ரேடியோ சிக்னல்கள். ரேடியோ சிக்னல்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் கருவிகள் தேவை. இப்படியான கருவிகளில் ஒன்றுதான் ’ரேடியோ டெலெஸ்கோப்’ என்று சொல்லப்படும், வானியலை ஆராயப் பயன்படுத்தும் டெலெஸ்கோப்புகள். இவற்றுள் மிகப்பெரிய அளவுள்ள டெலெஸ்கோப்புகளை ’வெரி லார்ஜ் அர்ரே’ (Very Large Array-VLA) என்பார்கள். 25 மீட்டர்களிலிருந்து 300 மீட்டர்கள் வரை குறுக்களவுள்ளவைகள் அவை.
ரேடியோ டெலெஸ்கோப் உள்ள ஒரு வானிலை ஆராய்ச்சி மையமான, பேர்கின்ஸில் (Perkins- Delaware Ohio) 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நள்ளிரவு, ஜெர்ரி ஏமான் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென கணணித் திரையில் ஒரு அதிசயத்தைக் கண்டார். 220 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கும் சஜிட்டாரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் இருந்து, மிகச் செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதைக் கண்டார். நன்றாகக் கவனியுங்கள் ரேடியோ சிக்னல் என்பது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதாலோ, இரண்டு நட்சத்திரங்கள் மோதுவதாலோ ஏற்படுவதல்ல.அதை யாராவது உருவாக்க வேண்டும்.சஜிட்டாரியஸ் நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள X1 சஜிட்டாரி, X2 சஜிட்டாரி ( Sagittarii X1,X2 ) ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்குமிடையில் இருந்து அந்த சிக்னல் வந்தது.அதாவது அங்குள்ள ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு ரேடியோக் கருவிகள் மூலம், நடந்த ஒரு சம்பாசனையாகத்தான் அது இருக்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் இருந்த கருவிகளின் திறண் போதாமையால், அதைத் தொடர்ந்து அவதானிக்க முடியவில்லை.  சரியாக 72 செக்கன்கள் வந்த அந்தச் சிக்னல் படிப்படியாகக் குறைந்து அப்படியே இல்லாமல் போயிற்று. 72 செக்கன்கள் என்பது நமக்குச் சிறிய நேரமாக இருந்தாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அளவு நேரம்தான். இந்த சிக்னலைப் பார்த்ததும் தன்னையறியாமல், Wow! என்று ஆச்சரியத்துடன், ஜெர்ரி அதே காகிதத்தில் எழுதினார்.அதனால் அதை Wow! சிக்னல் என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
ரேடியோ சிக்னலாக வாவ் சிக்னல் இருந்ததால், அதை நிச்சயம் யாரோ அங்கு உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தார்கள். அந்த ’யாரோ’ என்பவர்கள் நிச்சயமாக ஏலியன்களாகத்தான் இருக்க முடியும். ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் செல்லும் அஸ்ட்ராநாட்ஸ் எல்லாருமே பூமியுடன் இப்படிப்பட்ட ரேடியோ அலை வரிசை மூலமாகத்தான் உரையாடுவார்கள். அது போல அங்கும் யாரோ, யாருடனோ உரையாடியிருக்க வேண்டும்.எப்போதோ ஒரேயொரு தடவை நடந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு, ஏலியன்கள்தான் சிக்னலை அனுப்பினார்கள் என்று எப்படி அடித்துச் சொல்ல முடியும்? ஒருதரம் என்பது எப்போதும் தற்செயலாக இருப்பதற்குத்தான் சாத்தியம் உண்டு. ஆனால் இந்தச் சாத்தியத்தை உடைத்தெறிந்தது இன்னுமொரு சம்பவம்.மேற்கு வேர்ஜீனியாவில் இருக்கும் கிரீன்பாங்க் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த டான் மெரிக் (Dr.Don Merick) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு, 23 யூலை 1997ம் ஆண்டு அதிகாலை 3மணிக்கு, ஒரு ரேடியோ சிக்னல் கிடைத்தது. அந்த சிக்னலைக் கண்டதும் அவர் போர்ட்டா ரிகாவில் இருக்கும் ஆரஷீபோ ஆராய்ச்சி நிலையத்துக்கும், மசாசூசெட்ஸ் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஃபோன் மூலமாக இந்தச் செய்தியையும், அந்த சிக்னல் வந்த இடத்தையும் அறிவித்தார். அவர்களும் அதே இடத்துக்குத் தங்கள் ரேடியோ டெலஸ்கோப்பைத் திருப்ப, அவர்களுக்கும் அதே சிக்னல் கிடைத்தது. இந்தச் சம்பவமும் விஞ்ஞானிகளைத் தூக்கிவாரிப் போட்ட சம்பவமாக அமைந்தது. ஆனால் இதில் அமெரிக்க அரசு ஏனோ ஒரு தயக்கதைக் காட்டியது. பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த அரசு அதிகாரி, “அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் அது பற்றி எந்த அபிப்பிராயமும் சொல்லப் போவதில்லை. எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லை” என்று சொல்லிவிட்டு, உடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அமெரிக்கா அங்கு எதை மறைக்க வெளிக்கிட்டது என்பது இன்னும் புதிராகவே இருக்கின்றது. ஆனால் அதைவிட ஒரு ஆச்சரியமான வேலையை அமெரிக்க அரசு அடுத்துச் செய்தது.’ஏலியன்களுக்கான ஆராய்ச்சிக்காக, 20 பில்லியன் டாலர்களை ஒவ்வொரு வருடத்துக்கும் ஒதுக்குவதாகவும், இது அடுத்த பத்து வருடங்களுக்கு அது தொடரும்’ என்றும் அறிவித்தது. இல்லாத ஏலியன்களை இருக்கிறது என்று ஆராய இவ்வளவு அதிகப்படியான பணத்தை அமெரிக்கா ஏன் ஒதுக்க வேண்டும்? உலகிலேயே அமெரிக்கா மட்டும் அல்ல, அனைத்து அரசுகளும் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்வது விண்வெளி ஆராய்ச்சியில்தான். அதுவும் குறிப்பாக ஏலியன் வேட்டையில்தான். வெளிக்கிரக உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே  SETI (Search for ExtraTerrestrial Intelligence) என்ற ஒரு உலகளாவிய அரச அமைப்பையே உருவாக்கி வைத்திருக்கின்றனர் என்றால் பார்துக் கொள்ளுங்கள்.
SETI என்று ஒரு அமைப்பு, அதற்கென்று கோடி கோடியான பணம், அதில் ஈடுபடுவதற்கு ஆயிரக்கணக்கான உலக மகா விஞ்ஞானிகள் என, அனைத்தையும் அரசுகள் உருவாக்கி ஏலியன்களை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், சாதாரண மக்களான நாம் ஏலியன்கள் பற்றிப் பேசினாலே அது பொய்யென்று அரசுகள் குதித்து கூத்தாடுகின்றன. அவர்களாகக் கண்டுபிடிக்கும் உண்மைகளையும் மறைக்கின்றன. நமது கண் முன்னாலே இருக்கும் பல ஆச்சரியங்களையோ, அதிசயங்களையோ கூட முறைப்படி ஆராய மறுக்கின்றன. கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களுக்கெல்லாம் ராக்கெட்டை அனுப்பி, அங்கு என்ன இருக்கிறது என்று ஆராய்கிறார்கள். ஆனால் பூமியிலேயே இருக்கும் அதிசயங்களை ஆராய மறுக்கிறார்கள். எத்தனை ஆச்சரியங்கள் இன்றும் விடை சொல்லப்படாமல் மிஸ்டரிகளாகவே நம் முன்னால் நிற்கின்றன.
அப்படி நம் கண்முன்னே நிற்கும் ஒரு அதிசயம்தான் ஸ்டோன் ஹெஞ்ச். 5000 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது. கற்கால நாகரீகத்தின் கடைசிக் காலகட்டம் அது.இங்கிலாந்தின் வரலாற்றில் எந்தப் பதிவுகளும் இல்லாத காட்டுவாசி மக்கள் மட்டும் வாழ்ந்த காலம். அந்தக் காலத்தில் 100 டன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்களை, பல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்து , வைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்துக்கு நகர்த்தி, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக இருக்கும் பயிர் வட்டங்களின் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் நிறைய ஆச்சரியங்களும் மர்மங்களும் உண்டு. அந்த மர்மங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் நம்மை வியப்பிலாழ்த்தியபடி இருக்கின்றன. “பயிர் வட்டங்கள் பல விதமாக பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறதே, ஏன் ஸ்டோன் ஹெஞ்ச் மட்டும் ஒன்றுதான் இருக்கிறது?” என்று நீங்கள் கேட்டால், மேலும் ஆசாரியமான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன. வட்ட வடிவமாக பலவித ஹெஞ்சுகள் இங்கிலாந்து எங்கும் காணப்படுகின்றன?இந்த ஸ்டோன் ஹெஞ்ச் எப்படிக் கட்டப்பட்டது? எதற்காகக் கட்டப்பட்டது? அது கட்டப்பட்டதில் உள்ள ஆச்சரியங்கள் என்ன? இது தவிர்ந்து மேலும் உள்ள மற்ற ஹெஞ்கள் எவை? என அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களுடன், அடுத்த தொடரில் சந்திப்போம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template