ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? - nelliadynet
Headlines News :
Home » » ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்?

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்?

Written By www.kovilnet.com on Wednesday, June 26, 2013 | 9:45 PM

vocal_cords_diagram

எல்லோருக்கும் வணக்கம், இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100%பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.
 untitled

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords)என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.
வீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310முறையும் அதிர்கிறது.
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.
பெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது.
நாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.
குரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.
பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே, மறக்காமல் உங்கள் ஓட்டுக்களையும் பதிவுசெய்துவிட்டுச் செல்லுங்கள், உங்கள் ஒவ்வொருவருடைய ஓட்டும் இந்த பதிவு அதிகம் பேரை சென்றடைய உதவும். நன்றி மீண்டும் சந்திப்போம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template