டிவியில் எந்த சேனலை திருப்பினாலும் நியூமராலஜி சம்மந்தமான நிகழ்சிகளே ஒளிபரப்பாகிக்கொண்டு இருப்பதை காண முடிகிறது. இது போன்ற நிகழ்சிகளில் பங்குபெறுவோரின் அபத்தமான கேள்விகளும் அதற்கு அந்த எண்கணித நிபுணர்(?) தரும் அதிஅபத்தமான பதில்களும் கிட்டத்தட்ட இவற்றை நகைச்சுவை நிகழ்சியாகவே ஆக்கிவிடுகிறது. இதற்காகவே நேரம் தவறாமல் இது போன்ற நிகழ்சிகளை பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.
உதாரணத்திற்கு ஒரு சில நிகழ்வுகளை பகிர்கிறேன். ஒரு நியூமரலஜிஸ்ட் பெயரின் இறுதியில் ‘தி’ என்றே எழுத்தே வரக்கூடாது என்றும், கூப்பிடும் போது அது ‘தீ’ என்றே ஆகி விடுவதால், வாழ்வில் பல பிரச்சினைகள் வரும் என்று ஒரு அதிஅற்புதமான Logic நிறைந்த பதிலை கூறினார். . இன்னொருவரோ செந்தில் என்றே பெயரை வைக்கவோ கூப்பிடவோ கூடாது என கண்டிக்கிறார், இப்படிச்செய்தாலும் வாழ்வில் பிரச்னைகள் வருமாம். அட நாராயணா, கடவுளின் பெயரை கூப்பிட்டால் கூட பிரச்னைகள் வரும் என்னும் சொல்லும் இவர்களின் அறிவுஜீவித்தனத்தை என்னவென்பது. இன்னொன்ரு பெயரை சுருக்கவதால் ஆயுள் சுருங்கி விடுமாம், ஆக ஒரு மைல் நீளத்துக்கு பெயர் வைத்துக்கொண்டால் ஆயிர்மாண்டு காலம் வாழலாமா என்ன ? பணத்தை வாரி இறைத்து இதை எல்லாம் நம்பும் மக்களின் நிலைதான் பரிதாபகரமானது.
நியூமராலஜியை இவர்கள் ஒரு அறிவியல் என வருணித்தாலும் இதில் நிறைய லாஜிக் இடிப்பதை காணலாம்.
எழுத்துக்கள் தான் முக்கியம், ஒரு பெயரை எப்படி வேண்டுமானுலும் கெடுத்து கிட்டத்தட்ட( சில சமயங்களில் ஸ்பெல்லிங்கை பார்த்தாலே காமடியாக இருக்கும் ). நியூமராலஜிக்கு தக்கப்படி மாற்றிக்கொண்டால் முன்னேறலாம் என வைத்துக்கொள்வோம். எனில், உச்சரிக்கு விதமாக பெயரொன்றை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் சும்மா ராண்டமாக akdixsddf என அச்சு அசல் நியூமராலஜிக்கு ஏற்ற வாறு வைத்துக்கொள்ளலாமே ?
வாழ்வில் நடக்கும் பிரச்னைகளுக்கு தவறான எண் கூட்டலுடன் உள்ள பெயரே காரணம் என்றால், இது வரை தங்கள் வாழ்வில் பெயரை எழுதிக்கூட பார்க்காதவர்களின் வாழ்க்கையில் எப்படி நியூமராலஜி பொருந்தும் ?
மேலுள்ள கூற்றைப்போலவே, தங்களின் பெயரை ஆங்கிலத்தில் எழுதாமல் ஆங்கிலமல்லாத எழுத்துமுறையிலான தமிழிலோ, தெலுங்கிலோ, ஜப்பானிய மொழியிலேயோ மட்டும் எழுதினால் நியூமராலஜி பொருந்துமா ?
ஆங்கில எழுத்துக்களுக்கு நியூமராலஜி பொருந்தும் என்றால் ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்திய æ þ ā ð போன்ற எழுத்துக்களின் நிலை என்ன ? பல பிரபலங்களின் பெயர்களுக்கு எண்கணிதம் பார்ப்பவர்கள் இது போன்ற எழுத்துக்கள் அடங்கிய பண்டைய ஆங்கில பெயர்களுக்கு பலன் கூற முடியுமா ?
எழுத்துக்களை விடுவோம், ஒரு குறிப்பிட்ட பிறந்த தேதியை வைத்து பலன்களை கூறுகின்றனர் என வைத்துக்கொள்வோம். ஏன் இவர்கள் மேற்கத்திய தேதியை மட்டும் பின்பற்ற வேண்டும், தமிழ் நாட்காட்டி, முஸ்லீம் நாட்காட்டி என பல நாட்காட்டிகள் உள்ளனவே அந்த நாட்காட்டிகளின் உள்ள எண்கள் வாழ்க்கையை பாதிக்காதா ? மேற்கத்திய நாட்காட்டிகளுக்கு மட்டும் தான் அந்த வீர்யம் உள்ளதா ?
இவ்வளவு லாஜிக்கள் பிரச்னைகள் நியூமரலாஜியில் இருக்கும் போது அதை அறிவியல் என கூறுவதும் அதைவிட இவர்களின் கூற்றுக்கு மிக அபத்தமாக திருக்குறளை எல்லாம் மேற்கோள் காட்டுவதும் எப்படிப்பட்ட மடமைத்தனம் என்பது புலனாகும். நியூமராலஜி என்பது வெறும் ஹம்பக், ஹோக்ஸ் இதைத்தவிர வேறேதும் இல்லை. நியூமராலஜி மூலம் பலனடைந்தோம் எனக்கூறுபவர்களுக்கு, அந்த பலன்கள் எல்லாம் மனோரீதியாக ஏற்பட்ட placebo effect-ஏ ஒழிய வேறேதும் இல்லை.
இத்தனை கூறியும் நியூமராலஜியிலும் நேமாலஜியிலும்(பெயரியல் - இது சமீபத்திய கண்டுபிடிப்பு!!) பணத்தை வாரி இறைத்து தன் தலையில் மண்ணை வாரிக்கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது ? ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் ?
|
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !