ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்! - nelliadynet
Headlines News :
Home » » ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!

ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!

Written By www.kovilnet.com on Monday, January 19, 2015 | 11:49 PM

ச.நாகராஜன்
அமராவதியைச் சேர்ந்த திரு அனில் குர்ஜர் ஓம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து அவரை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்ட போது அவரே உடனடியாக தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்டு அவர் செய்த ஆராய்ச்சி பற்றிக் கூறியதோடு ஞான ஆலயம் செய்து வரும் பணியைப் பாராட்டி வாசகர்களுக்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருக்கு நமது நன்றிகள். இனி படியுங்கள் கட்டுரையை.. ..
அனில் குர்ஜர்
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடு தான்! உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப் புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புத் தான் அதற்கான மாமருந்து என்று  சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

 
ஓம் தரும் நலன்கள்
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.

 
அகார உகார மகாரங்கள்
ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் செய்வதை ஹிந்து மதம் கூறுவதையும் ஓமில் உள்ள அகார உகார மகாரங்கள் பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.ஓம் என நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின் புறம் உதிக்கும் ‘அ’ சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் ’உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிரது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

 
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அனில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம்! 1999 மே மாதம் 29ம் தேதி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.இப்போதோ அவருக்கு 90 சதவிகிதம் பழைய ஆற்றல் வந்து விட்டது.அவருக்கு ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர்டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே எனத் தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

 
ஓம் பற்றிய முந்தைய ஆராய்ச்சிகள்!
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே  மனித உடல் அமைப்பில் இசையின் தாக்கம் பற்றி ஆராய்ந்தார். ஆனால் இப்போது தான் மனித உடல் மீது மந்திரத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்படுகிறது. 1993ல் டெல்லஸ் எட் அல் 14 ஆண்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஓம் மந்திரத்தை உச்சரிக்க வைத்து அதன் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இதே ஆய்வுகளை 1996 வரை வெவ்வேறு குழுக்களை வைத்து மேற்கொண்டு ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்க அளவில் சுவாசம் மெதுவாக ஆவதோடு இதயத் துடிப்பு மிக மெதுவாக இருப்பதையும் கண்டறிந்தார்.



தகாஷி எடல் என்பவர் 1999ல் மேற்கொண்டஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார்.இதை அடுத்து 2003ல் ஹெய்ஸ்னம் ஜினா தேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இரு பகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ என்று  ஆரம்பித்து ம் என்று முடிக்கும் போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது!


குர்ஜரின் ஆராய்ச்சி
இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாகக் கொண்ட அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன!
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன! இந்த ஆய்வின் முடிவில் 1)ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது; 2)எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3)ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸ¤ம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸ¤ம் மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸ¤ம் அனாகதத்தில் (இதயம்) 341.3 ஹெர்ட்ஸ¤ம் விசுத்தாவில் (தொண்டை) 384 ஹெர்ட்ஸ¤ம் ஆஞ்ஜாவில் (மூன்றாம் கண்) 426.7 ஹெர்ட்ஸ¤ம் சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸ¤ம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

 
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

 
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர். அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே. இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய  இன்னொருவர் அஜய் பி.தாக்கரே ஆவார்.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template