உடலுக்குள் ஒரு டாக்டர் - nelliadynet
Headlines News :
Home » » உடலுக்குள் ஒரு டாக்டர்

உடலுக்குள் ஒரு டாக்டர்

Written By www.kovilnet.com on Monday, October 6, 2014 | 7:55 AM

வருங்காலத்தில் மாத்திரையுடன் சேர்த்து ஒரு சின்ன கம்ப்யூட்டரையும் விழுங்கினால் எப்படி இருக்கும்? கம்ப்யூட்டர் என்றால் முழு கம்ப்யூட்டர் அல்ல, ஒரு சின்ன கம்ப்யூட்டர் சிப். இந்த சிப் மாத்திரைக்குள் ஒளிந்திருக்கும். அதை மாத்திரையோடு விழுங்க வேண்டியது தான்.
அதன் பிறகு இந்த சிப் உடலுக்குள் உட்கார்ந்து கொண்டு அல்லது நீந்திக்கொண்டு விசுவாசமாக தனது பணியை செய்து கொண்டிருக்கும். எதிர்கால மருத்துவம் இப்படி தான் இருக்கப்போகிறது என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். மாத்திரைக்குள் சிப்கள் பொறுத்தி அனுப்பப்படுவதும், உடலுக்குள் சென்சார்களையும், குட்டி குட்டி ரோபோக்களையும் அனுப்பி வைப்பது பயன்பாட்டிற்கு வரலாம் என்கின்றனர். இந்த வகை சிப்களும் ,சென்சார்களும் மருத்துவத்தையே மாற்றி அமைக்கலாம் என்றும் ஆருடம் சொல்கின்றனர். மருத்துவதுறையில் இவற்றால் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும் என்றும் சொல்கின்றனர். இன்னொரு பக்கத்திலோ உடலுக்குள் சிப்களை உலாவ விடுவது அந்தரங்க உரிமை சார்ந்த மீறல்களையும் ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. இந்த விவாதம் இன்னும் தீவிரமாகும் வாய்ப்பும் இருக்கிறது.
சரி, மாத்திரையில் சிப்பையோ சென்சாரையோ வைத்து ஏன் உடலுக்குள் செலுத்த வேண்டும் ? என கேட்கலாம். நோயாளிகளை உள்ளுக்குள் இருந்த கண்காணிப்பதற்காக தான் அதி நவீன ஏற்பாடு. இந்த இடத்தில் கண்காணிப்பு என்பதை மருத்துவ நோக்கிலான கவனிப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஸ்மார்ட் பில் என்று குறிப்பிடப்படும் இந்த வகை மருந்துகள் தொடர்பாக பல்வேறு ஆய்வில் மருந்தக நிறுவனங்களும் பல்கலைக்கழக ஆய்வகங்களும் ஈடுபட்டு வருகின்றன. இவற்றின் நோக்கமும் பயன்பாடும் வேறுப்பட்டவை என்றாலும் அடிபடையில் இந்த அதி நவீன மாத்திரைகளின் வேலை என்ன என்றால் , நோயாளிகள் ஒழுங்காக குறித்த நேரத்தில் மாத்திரையை எடுத்துக்கொண்டனரா? எனும் தகவலை டாக்டருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவிப்பது தான்.
 
மாத்திரையும்,மறதியும் உடன்பிறவா இரட்டை சகோதரர்கள் தான் இல்லையா? நம்மில் பலருக்கே கூட மாத்திரையை சரியான நேரத்தில் சாப்பிடாமால் மறந்த அனுபவம் ஏதாவது ஒரு கட்டத்தில் இருக்கலாம். மாத்திரையை ஒழுங்காக சாப்பிடாமல் மறப்பது சகஜமானது தான் என்றாலும், சில நேரங்களில் இது விபரீதத்தை ஏற்படுத்தலாம்.குறிப்பாக வயதான நோயாளிகள் மற்றும் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டிய மருத்துவ நிர்பந்தம் உள்ளவர்கள் விஷயத்தில் இது உயிருக்கே கூட ஆபத்தாக அமையலாம். எனவே குடும்பத்தினரோ,உறவினர்களோ நோயாளிகள் சரியான நேரத்தில் மாத்திரை எடுத்துக்கொண்டனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக கண்ணும் கருத்துமாக நோயாளிகளை கவனிக்க வேண்டும். பரபரப்பான உலகில் இது சவாலானது தான். அது மட்டும் அல்ல, அல்சைமர்ஸ் போன்ற வயோதிக கால மறதி நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் விஷயத்தில் யாரேனும் அருகாமையில் இருந்தாக வேண்டும். நோயாளிகள் மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிட்டனரா என்று அறிந்து கொள்வதில் டாக்டர்களுக்கும் அக்கரை உண்டு. மருந்தின் செயல்பாடு மற்றும் சிகிச்சையின் முன்னேற்றம் குறித்து அறிய இது மிகவும் அவசியம். நோயாளிகளை பார்க்கும் போது டாக்டர்கள் கேட்கும் முதல் கேள்வி ஒழுங்காக மருந்தை சாப்பிடுகிறீர்களா? என்பதாக தான இருக்கும். ஆனால் இதை உறுதி செய்து கொள்வது எப்படி?
இந்த இடத்தில் தான் கம்ப்யூட்டர் மாத்திரை வருகிறது!. அதாவது சிப் கொண்ட மாத்திரை. சிப் என்றதும் செல்போன் சிப் அளவுக்கு இருக்குமோ என நினைத்து மிரள வேண்டாம். மாத்திரை என்றால் நடுங்குபவர்கள் பிறகு சிப்பையும் சேர்த்து இரட்டிப்பாக நடுங்குவார்கள். இந்த சிப் கடுகை விட சின்னதாக இருக்கும். ஒரு மனல் துகள் அளவு என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒரு சதுர மீ.மீ அளவு என்கின்றனர். ஆனால் இந்த சிப்புக்குள் சென்சாரோ பேட்டரியோ கிடையாது. இது ஒரு ஹைடெக் சுயம்பு. தானாகவே இயக்கி சுயமாக இயங்கி கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஆம், இந்த சிப் உடலுக்குள் சென்றவுடன் , வயிற்றுக்குள் இருக்கும் சில வகை அமிலங்கள் மற்றும் ரசாயனங்களுடன் கலந்ததுமே செயல்படத்துவங்கும். தனக்கு தேவையான ஆற்றலையும் இந்த வினையாக்கம் மூலமே பெற்றுக்கொள்ளும்.
உடலுக்குள் இருந்து கொண்டு இந்த மாத்திரை சிப் என்ன செய்யும்? முதலில் இந்த சிப் தனியானது இல்லை. அதற்கு ஒரு கூட்டாளி உண்டு. மாத்திரையை எடுத்துக்கொள்ளும் நோயாளி உடல் மீது ஒட்டிக்கொள்ளும் பேண்டெய்டு போன்ற பட்டை தான் அதன் கூட்டாளி. சிப் இந்த கூட்டாளியை தொடர்பு கொண்டு தகவல் அனுப்பும். என்ன தகவல்? குறிப்பிட்ட அந்த நபர் மாத்திரையை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொண்டாகி விட்டது எனும் தகவல் தான். இந்த பட்டைக்கும் ஒரு கூட்டாளி உண்டு. அது தான் செயலி (ஆப்). பட்டை பெற்றுக்கொள்ளும் தகவல் செயலியின் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பார்த்தே டாக்டர் அல்லது குடும்பத்தினர் நோயாளியின் நிலை பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம்.
ஆக, அன்புக்குறியவர்கள் மாத்திரை சாப்பிட்டார்களா? இல்லையா என்று கவலைப்படும் நிலை இருக்காது. டாக்டர்களும் நோயாளிகளின் உடல் முன்னேற்றம் பற்றிய தகவலை தங்கள் பணி சூழல் பாதிக்காத வகையில் தெரிந்து கொள்ளலாம்.மாத்திரை சாப்பிட்டாச்சா இல்லையா என்று அறிய முடிவது ஆரம்ப பயன்பாடு தான். இந்த சிப்கள் மூலம் மேலும் எண்ணற்ற வகையில் நோயாளிகளை கவனித்துக்கொள்ளலாம்..
ஆனால் இதை உறுதி செய்யவே மருத்துவ உலகம் அதிக அளவில் பணம் மற்றும் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருப்பதால் இதன் மூலமான பயனே குறிப்பிடத்தக்கது என்கிறனர். பல நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுப்படிருந்தாலும், ப்ரோடியஸ் டிஜிட்டல் ஹெல்த் (Proteus Digital Health ) எனும் நிறுவனம் இதில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இது தொடர்பாக தீவிர சோதனை மற்றும் ஆய்வில் ஈடுப்பட்டு வரும் இந்நிறுவனம் அமெரிக்க மருத்து கட்டுப்பாடு அமைப்பிடம் இருந்து இதை பயன்படுத்துவதற்கான அனுமதியும் பெற்றுள்ளது. அதே போல ஐரோப்பிய ஒன்றியத்திலும் அனுமதி பெற்றுள்ளது. மாத்திரைக்குள் சென்சாரை பொறுத்தி பயன்படுத்துவது பாதுகாப்பானது என உறுதி செய்து கொண்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதல் கட்டமாக இந்த சிப்பை வெற்று மாத்திரையுடன் தான் பயன்படுத்த முடியும். அதாவது மாத்திரையுடன் சேர்த்து இந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இது தகவல் அனுப்பும். அடுத்த கட்டமாக உண்மையான மருத்து கொண்ட மாத்திரையுடனேயே சென்சாரை பொறுத்தும் முயற்சியும் ஆய்வும் நடைபெற்று வருகிறது. இத்தகைய மாத்திரைகள் வந்தால் அவர் உயிர் காக்கும் அற்புதமாக இருக்கும் என்கின்றனர். ஆனால் இதற்கு எதிர் கருத்தும் இல்லாமல் இல்லை.
உடலுக்குள் சிப்பை அனுப்புவது விபரீதமாகலாம் என்று அந்தரங்க உரிமை ஆர்வலர்கள் சொல்கின்றனர். அதிலும் சிப்பை அகற்றும் உரிமை அல்லது ஆற்றல் இல்லாத நிலையில் இது எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். ஆனால் ஒன்று மாத்திரையில் இருக்கும் சென்சாரால் பிரச்சனை கிடையாது. அது எந்த பாதிப்பையும் உண்டாக்காது. இந்த சிப் பயன்படுததக்கூடிய விதம் தான் கேள்விகளை எழுப்ப வைக்கிறது. நோயாளிக்கு வேறு மாத்திரை தரப்பட வில்லை என்பதை எப்படி உறுதி செய்வது என்று கேட்கின்றனர். ஆய்வுக்காக சோதனை மருந்துகளை கொடுத்தால் என்ன செய்வது என்றும் கேட்கின்றனர். இருப்பினும் மருத்துவ துறையினரோ இதில் எந்த தவறும் இல்லை என்கிறனர். கார்களில் சென்சாரை வைத்து கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்யும் போது மருத்துவத்திலும் சென்சாரை பயன்படுத்துவதில் என்ன தவறு என்று கேட்கிறார் எரிக் டோபல். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வுக்கூட இயக்குனர். இந்த வகை சிகிச்சை பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.
உண்மையில்தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இதை சாத்தியமாக்கியுள்ளது. சென்சார்களை அளவில் சிறியதாக குறைந்த செலவில் உருவாக்க கூடிய ஆற்றலே இதற்கு முக்கிய காரணம். இந்த வகை நேனோ சென்சார்கள் என்றும் சொல்லப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு பற்றிய ஆய்வுகளும் முயற்சிகளும் வியக்க வைக்கும். இந்த வகை சென்சார்களை சருமத்துக்குள்ளும் பொருத்த முடியும். அப்போது அவை உற்றத்தோழன் போல உடனிருந்து கண்காணித்து உரிய நேரத்தில் வேண்டிய தகவல்களை தெரிவிக்கும். அதே போல, நோய்க்கூறுகளை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கும் சென்சார்களும் இருக்கின்றன. இந்த சென்சார்கள் உடலுக்குள் நீந்திக்கொண்டு இருக்கும் போது எச்சில் பொன்றவற்றில் கிடைக்கும் ரசாயன தகவல்கள் மூலம் மாரடைப்பு ஏற்படப்போகிறதா என்ற தகவலை முன்கூட்டியே பெற்று நடவடிக்கை எடுக்கலாம். இதே போலவே உடலுக்குள் காமிராவை அனுப்பி புற்றுநோய் செல்களை கண்டறியும் சாத்தியமும் உள்ளது.
இவ்வளவு ஏன் ஒரு சின்ன சிப்பை உடலுக்குள் பொருத்திக்கொண்டு அதன் மூலம் கருத்தடை மருந்தை செலுத்திக்கொள்ளும் வசதியும் கூட அறிமுகமாகி உள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசிப்ஸ் ( MicroCHIPS ) எனும் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. கருத்தடை வேண்டாம் என்றால் இந்த சிப்பை ரிமோட் மூலமும் இயக்கி மருத்தை நிறுத்திக்கொள்ளலாம்.நாளை இதே முறையில் தேவையான மருத்துகளை ரிமோட் மூலமே இயக்கி கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவை எல்லாம் மருத்துவ துறையில் வளர் நிலையில் இருக்கும் நவீன முயற்சிகள். இவற்றின் எதிர்மறையான பயன்பாடு பற்றிய சந்தகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பும் ஆய்வாளர்களுக்கு உள்ளது.
சரி, பல் துலக்குவதற்கும் கூட இதே போன்ற ஸ்மார்ட் பிரெஷ் உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா? அதே போல ஸ்மார்ட் உள்ளாடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.அவை பற்றியும் தொடர்ந்து பார்ப்போம்...
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template