கடவுள் இருக்காரா..? சூப்பர் ஸ்டார் சொன்ன குட்டிக் கதைகள்
கடவுள் இருக்கிறாரா… என்ற கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக் கதை பதில் இது.
2012-ல் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி சொன்ன இந்தக் கதை மற்ற தளங்களில் வந்திருந்தாலும், என்வழியில் இப்போதுதான் வெளியாகிறது.
‘கடவுள் இருக்கிறாரா… இல்லையா…’ என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக் கதை, கண்ணதாசன் நாத்திகராயிருந்து ஆத்திகராக மாறியது குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் போன்றவற்றை இப்போது படித்தாலும் புதிதாகத்தான் இருக்கும்…
அந்தக் கதை:
“ஆண்டவன் இருக்கான்… இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கறேன்னு.
விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர் சாஸ்துவோக்தமா… கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர் கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார்.
ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள் இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.
இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார்.
அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு இளைஞர்… பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார்.
உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், ‘என்ன பண்றீங்க’ன்னு கேக்கறார்.
உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார்.
‘இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு’ கேக்கறார்.
உடனே ‘சயின்டிஸ்ட்’ என்கிறார் இளைஞர்…
‘ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே’…
‘பைபிள்’.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.
உடனே, ‘ஏம்பா, அறிவிருக்கா… இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்… நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு’ சொல்லிட்டார்.
‘சரி’..ன்னு கேட்டுக்கிட்டார்.
‘நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு… பேசலாம்’-னு சொல்றார் சயின்டிஸ்ட்.
ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, ‘சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே’ன்னு கேட்டார் சயின்டிஸ்ட். உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!
உடனே அந்த சயின்டிஸ்ட், ‘சார் மன்னிக்கணும்… நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு’, கேட்கிறார்.
‘சரி வாங்கன்னு’ சொல்லி டைம் கொடுத்தார் எடிசன்.
அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க.
அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார்.
அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், ‘என்ன சார்.. இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது’.. ன்னு கேட்டார்.
அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், ‘திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி’ன்னு சொல்றார்.
‘சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க’ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.
‘இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது’…ன்னு எடிசன் சொன்னாங்க.
‘சார்… சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்… சொல்லுங்க’ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.
‘ஏம்ப்பா… நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்… Where there is a creation there should be a creator… படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!’.
சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார். இதை ஏன் சொல்றேன்னா… இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்… சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா… ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்… கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார்.
தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க… அது ப்யூட்டிபுல்.
எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!
கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்… கொளுத்த வேண்டியதுதான் பாக்கி.
ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி… அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார்.
பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!
படைப்பாளி கஷ்டப்படக் கூடாது!
எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள்.
படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்,” என்றார்.
குறிப்பு: இலக்கியவியாதி என்ற பெயரில் கண்டபடி ரஜினியை விமர்சிக்கும் நோயாளிகளுக்கு இந்த கதைகள் சமர்ப்பணம்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !