பூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு - nelliadynet
Headlines News :
Home » » பூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு

பூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு

Written By www.kovilnet.com on Thursday, February 28, 2013 | 5:42 AM


இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து பிப்ரவரி 25 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒரே சமயத்தில் ஏழு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தி சாதனை புரிந்தது.

இந்த ஏழு செயற்கைக்கோள்களில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து உருவாக்கிய சரல் ( சரல் என்பது Satellite with ARgos and ALtika என்பதன் சுருக்கம்) என்னும் செயற்கைக்கோள் தான் வடிவில் பெரியது. எடை அளவிலும் (சுமார் 400 கிலோ) பெரியது. அந்த வகையில் சரல்செயற்கைக்கோள்  விண்வெளியில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது தான் செய்திகளில் முக்கிய இடம் பெற்றது.
பி.எஸ்.எல்.வி. C 20 ராக்கெட்
சரல் செயற்கைக்கோள் கடல்களை ஆராய்வதற்கானது. குறிப்பாக கடல் மட்டத்தில்  ஏற்படும் சிறு மாற்றங்களையும் கண்டறிந்து கூறக்கூடியது. அமெரிக்காவும் பிரான்சும் சேர்ந்து உருவாக்கி உயரே செலுத்திய ஜேசன் -1, ஜேசன் -2 செயற்கைக்கோள்கள், இந்தியாவின் ஓஷன்சாட் -1, ஓஷன்சாட் -2 செயற்கைக்கோள்கள் உட்பட பல செயற்கைக்கோள்கள் உலகின் கடல்களை ஏற்கெனவே ஆராய்ந்து வருகின்றன். அந்த வகையில் கடல்களை ஆராய்வதற்காக செயற்கைக்கோள்  உயரே செலுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல.

சரல் செயற்கைக்கோள்
அந்த   வகையில் பார்த்தால் பி.எஸ்.எல்.வி செலுத்திய செயற்கைக்கோள்களில் முக்கியமானது கனடா தயாரித்து அளித்த NEOSSat        ( Near- Earth Object Surveillance Satellite) செயற்கைக்கோள் ஆகும்.பெரிய சூட்கேஸ் சைஸிலான இந்த செயற்கைகோளின் எடை வெறும் 65 கிலோ.இந்த செயற்கைக்கோளில் 15 செண்டிமீட்டர் நீளம் கொண்ட டெலஸ்கோப் ஒன்று உள்ளது.

பூமியின் மீது மோத வாய்ப்புள்ள விண்கற்களை (Asteroids) கண்டறிவது தான் இதன் முக்கிய பணியாகும்.அண்மையில் ரஷிய வானில் ஒரு விண்கல் பயங்க்ரமாக வெடித்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான அடுக்கு மாடிக் கட்டடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் தூள் தூளாக உடைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தது நினைவிருக்கலாம்.

இப்பின்னணியில் பார்க்கும் போது கனடிய செயற்கைக்கோளின் முக்கியத்துவம் புரியும். பூமிக்கு அருகே வரும் வாய்ப்புள்ள விண்கற்களைக் கண்டறியும் பணி ஏற்க்னவே நடந்து வருவது தான். பூமி இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி வருகின்ற -- ஆனால் பூமியைத் தாக்காமல் கடந்து செல்கின்ற விண்கற்களின் எண்ணிக்கை 1300 க்கும் அதிகம்.

அமெரிக்க நாஸாவும் சரி, வேறு பிற அமைப்புகளும் சரி, இவ்வித விண்கற்களைக் கவனித்து அவற்றின் பாதைகளையும் கணக்கிட்டு பட்டியலிட்டு வருகின்றன. ஆனால் இவ்வித அமைப்புகள் அனைத்தும் பூமியிலிருந்தபடி வானை ஆராய்ந்து புதிது புதிகாக விண்கற்களைக் கண்டுபிடிப்பவையே.  இந்த அமைப்புகளின் டெலஸ்கோப்புகள் இரவு நேரங்களில் மட்டும் வானை ஆராய்பவை. ஏனெனில் இரவு நேரங்களில் மட்டுமே விண்கற்கள் தென்படும்.சூரிய ஒளி காரணமாக பகலில் இவை தெரியாது.

ஆனால் பூமிக்கு மேலே வானில் இருந்தபடி விண்கற்களைக் கண்டுபிடிக்க இதுவரை எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. கனடாவின் செயற்கைக்கோள் அக்குறையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.வேறு விதமாகச் சொல்வதானால் விண்கற்களைக் கண்டறிய விண்வெளியில் அமையும் முதலாவது செயற்கைக்கோள் இதுவே ஆகும்.

கனடாவின் செயற்கைக்கோள் சுமார் 800 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றி வரும். அப்போது அது பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இதில் வேறு முக்கிய அம்சமும் உள்ளது. 
கனடாவின் செயற்கைக்கோள்
பூமியில் சூரியனை நோக்கிய ஒரு பாதியானது பகலாக இருக்கும். மறு பாதி இரவாக இருக்கும்.  இரவாக உள்ள பாதியிலிருந்து டெலஸ்கோப்புகள் மூலம் வானை ஆராய்ந்து விண்கற்களைக் கண்டறிவது.  எளிது.ஆனால் பகலாக உள்ள வானில் இருக்கக்கூடிய விண்கற்களை பூமியிலிருந்தபடி ஆராய்வது இயலாத காரியம். சூரியனின் பிரகாசமே இதற்குக் காரணம். கனடாவின் செயற்கைக்கோளானது பகலாக உள்ள வான்  பகுதியிலிருந்து வருகின்ற விண்கற்களையும் கண்டறிந்து கூறி விடும். அது எப்படி?
.
 பகல் நேரத்தில் வானம் நமக்கு நீல நிறத்தில் தெரிவதற்குக் காற்று மண்டலம் காரணம்.ஆனால் கனடாவின் செயற்கைக்கோள் காற்று மண்டலத்தைத் தாண்டி 800 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி செயல்படும் என்பதால் அந்த உயரத்தில் வானம் கரிய நிறத்தில் தெரியும். வானில் சூரியன் இருந்தாலும் சூரியனைச் சுற்றியுள்ள வானம் கரியதாகவே இருக்கும். சூரியனும் தெரியும். நட்சத்திரங்களும் தெரியும். அஸ்டிராய்டுகள் அதாவது விண்கற்கள்  மீது சூரிய ஒளி படும் என்பதால் அவையும் வானில் தெரியும்

 நட்சத்திரங்கள் இடம் பெயராது. ஆனால் அஸ்டிராய்டுகள் இடம் பெயருபவை ( கிரகங்களும் தான்).  கனடாவின் செயற்கைக்கோளில் அமைந்த டெலஸ்கோப் இந்த அஸ்டிராய்டுகள் நகரும் விதத்தைப் ப்டம் எடுத்து அனுப்பும் போது அஸ்டிராய்டுகளின் பாதையைக் கணக்கிட்டு விட முடியும்.

கனடாவின் செயற்கைக்கோள் ஒரு நாளில் பல நூறு படங்களை எடுத்து அனுப்பும். எனவே இதுவரை அறியப்படாத பல அஸ்டிராய்டுகளின் பாதைகளைக் கண்டறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 கனடிய செயற்கைக்கோள் பகலில் செயல்படும் விதத்தைக் காட்டும் படம். 
தவிர, கனடாவின் செயற்கைக்கோள் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் என்பதால் வருகிற நாட்களில் பூமி வட்டாரத்தை நோக்கி வருகின்ற ஏராள்மான விண்கற்கள் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலஸ்கோப்புடன் கூடிய இந்த செயற்கைக்கோளை உயரே செலுத்த கனடாவிடம் ராக்கெட்டுகள் கிடையாது என்பதால் அது இதனை செலுத்த இந்தியாவின் உதவியை நாடியது. உயரே செலுத்தப்பட்ட பின்னர் கனடாவின் செயற்கைகோள் செயல்படத் தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை கனடாவில் விண்வெளித் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தலைமையில் நிபுணர்கள் கொண்டாடினர். க்னடா இந்த செயற்கைக்கோளை ‘ வானில் ஒரு காவல்காரன்’ என வருணித்துள்ளது.இந்திய ராக்கெட் இதைச் செலுத்தியது என்றாலும் கனடிய நிபுணர்களே இதிலிருந்து கிடைக்கும் தகவல்களைப் பெற்று வருவர்.

இந்த செயற்கைக்கோளை செலுத்தியதன் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளதாகக் கூறலாம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template