செவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை - nelliadynet
Headlines News :
Home » » செவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை

செவ்வாய்க்கு இந்திய விண்கலம்: சீனாவை மிஞ்ச ஆசை

Written By www.kovilnet.com on Tuesday, February 12, 2013 | 8:27 PM



செவ்வாய்க்குச் செல்லத் தவறிய சீன விண்கலம்
செவ்வாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் சீனா தோற்றுவிட்ட நிலையில் செவ்வாய்க்கு சிறிய விண்கலம் ஒன்றை இந்தியா இந்த ஆண்டில் அனுப்ப இருக்கிறது.

இந்தியாவின் திட்டம் வெற்றி பெறுமானால் செவ்வாய்க்கு விண்கலத்தை  அனுப்புவதில் சீனாவை இந்தியா முந்திக் கொண்டதாகி விடும்..

உலகில் இதுவரை ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகிய மூன்று   மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளன.  இந்தியா நான்காவது நாடாக விளங்க வாய்ப்பு உள்ளது.

 செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் போபாஸ் என்னும் குட்டி சந்திரனுக்கு ரஷியா 2011 அக்டோபரில் பெரியதொரு விண்கலத்தை அனுப்ப முயன்றது. அதே விண்கலத்துடன் சீனாவின் யிங்குவோ என்ற சிறிய விண்கலமும் சேர்த்து வைக்கப்பட்டது. ரஷிய விண்கலமும் சீன விண்கலமும் அடங்கிய ராட்சத ராக்கெட்  வெற்றிகரமாக உயரே சென்றது.

ஆனால் அவற்றை செவ்வாயை நோக்கிச் செலுத்த முடியவில்லை. ரஷிய விண்கலத்துடனான தொட்ர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது என்பதே அதற்குக் காரணம். ரஷிய நிபுணர்கள் எவ்வளவு முயன்றும் அத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை.

சில மாதங்கள் செயலற்று  பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த அந்த இரு விண்கலங்களும் கடைசியில் 2012 ஜனவரியில்  கடலில் விழுந்தன.இப்படியாக செவ்வாய்க்கு முதல் முறையாக  விண்கலம் ஒன்றை அனுப்புவதற்கான சீனாவின் திட்டம் தோற்றுப் போனது. இது செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்புவதில் சீனாவை முந்திக் கொள்ள  இந்தியாவுக்கு வாய்ப்பை அளித்தது.
செவ்வாய்க்கு இந்தியா அனுப்ப இருக்கும் விண்கலம்
இந்தியாவின் விண்கலம் இந்த ஆண்டு அக்டோபர் வாக்கில் உயரே செலுத்தப்படும். எனினும் அந்த விண்கலம் உடனே செவ்வாயை நோக்கி கிளம்பி விடாது. நவம்பர் மாதத்தில் தான் புறப்படும்.அதுவரை அது சுமார் ஒரு மாத காலம் பூமியைச்  சுற்றிக் கொண்டிருக்கும்.

இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய்க்கு அமெரிக்கா அல்லது ரஷியா செலுத்துகின்ற விண்கலத்தைத் தாங்கிய ராக்கெட்டானது பூமியை ஒரு தடவை அல்லது ஒன்றரை தடவை சுற்றி விட்டு உடனே  செவ்வாயை நோக்கிப் ப்யணமாகும்..
அமெரிக்காவின் மாரினர் 4 விண்கலம் 1964 ஆம் ஆண்டில் 
செவ்வாய்க்குச் செல்வதற்குப் பின்பற்றிய பாதை 
இந்தியாவின் ராக்கெட் அப்படி செய்யாது. அதற்கு இந்திய ராக்கெட் போதுமான திறன் கொண்டது அல்ல என்பதே காரணம். செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப இந்தியா தனது PSLV- XL  ராக்கெட்டைப் பயன்படுத்த இருக்கிறது.

இது 1360 கிலோ எடை கொண்ட விண்கலத்தை சுமந்து உயரே செல்லும் திறன் படைத்தது.ஆனால் அந்த விண்கலத்தை மணிக்கு சுமார்  40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாயை நோக்கி செலுத்தும் திறன் இதற்கு இல்லை.  அந்த வேகத்தில் செலுத்தினால் தான் அது செவ்வாயை நோக்கிக் கிளம்பும்.

அப்படி இல்லாத நிலையில் ஊஞ்சல் பாணியிலான உத்தியைப் பின்பற்ற வேண்டியுள்ளது. டார்ஸான் படங்களில் டார்ஸான் உயரே இருந்து தொங்கும் விழுதைப் பற்றியபடி மேலும் கீழுமாக நான்கு அல்லது ஐந்து தடவை ஊசலாடுவார். ஆறாம் தடவை  வேகம் பிடித்ததும் அடுத்த விழுதைப் பற்றிக் கொள்வார். நீங்கள் ஊஞ்சலில் ஆடும் போது முதல் தடவையில் வேகம் பெற முடியாது. ஏழு அல்லது எட்டு தடவை மேலும் கீழுமாக ஊசலாடிய பிறகு வேகம் பெறுவீர்கள்.


கிட்டத்தட்ட இது போன்ற முறையை விண்வெளியிலும் பயன்படுத்த முடியும். அதிகத் திறன் இல்லாத ராக்கெட்டைக் கொண்டு சந்திரன், செவ்வாய் ஆகியவற்றுக்கு விண்கலத்தைச் செலுத்த இந்த ஏற்பாடு  உதவும்.

இப்படியான விண்வெளிப் பாதை  அமெரிக்கக் கணித நிபுணரான பெல் புரூனோ உருவாக்கியதாகும்.  இந்தியா 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பிய போது இந்த முறை தான் பின்பற்றப்பட்டது.

ஆகவே தான் சந்திரயான் விண்கலம் சந்திரனை எட்டுவதற்கு 18 நாட்கள் ஆகின. 2007 ஆம் ஆண்டில் சீனாவின் சாங்கே விண்கலமும் இதே மாதிரி பாதையில் தான் சந்திரனுக்கு செலுத்தப்பட்டது. ஆனால்  சந்திரனுக்கு அல்லது செவ்வாய்க்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்புவதற்கு மட்டுமே  இந்த முறை ஏற்றது.
சந்திரனுக்குச் செல்ல சந்திரயான் பின்பற்றிய பாதையின் இன்னொரு படம். செவ்வாய்க்கான இந்திய விண்கலம் இது மாதிர்யான பாதையில் தான் செவ்வாய்க்குச் செல்லும்.
சந்திரயான பல நாட்கள் எடுத்துக் கொண்டதுடன்   ஒப்பிடுகையில் சோவியத் யூனியனின் ( ரஷியா)  ஒரு  விண்கலம் சுமார் 33 மணி நேரத்தில் சந்திரனுக்குப் போய்ச் சேர்ந்தது. அது சக்திமிக்க ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டதே அதற்குக் காரணம்.

 சந்திரயான் விஷ்யத்தில் கையாண்ட அதே பாதையைத் தான் இந்தியா செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதிலும் கையாள இருக்கிறது. அதாவது அந்த விண்கலம் வருகிற அக்டோபரில் உயரே செலுத்தப்படும். உய்ரே சென்றவுடன் அது பூமியை நீள்வட்டப் பாதையில்  சுற்றி வர ஆரம்பிக்கும்.

இந்த நீள் வட்டப்பாதையில் அது பூமியை சுற்ற ஆரம்பிக்கும் போது அண்மை நிலையில் (Perigee)  அது பூமியிலிருந்து 600 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். தொலைவு நிலையில்  (Apogee)  அதை விட மிக உயரத்தில் இருக்கும்.பிறகு தொலைவு நிலையானது படிப்படியாக அதிகரிக்கப்படும்.  தொலைவு நிலை  சுமார் 2,15,00 கிலோ மீட்டர்  ஆக இருக்கும் போது  --- அதாவது நவம்பர் 26 ஆம் தேதியன்று விண்கலம் செவ்வாயை நோக்கி ஏவப்படும்.

சுமார் 300 நாள் பயணத்துக்குப் பிறகு இந்திய விண்கலம் அடுத்த ஆண்டு அதாவது 2014 செப்டம்பர் 22 ஆம் தேதி வாக்கில் செவ்வாய் கிரகத்துக்குப் போய் சேரும். ஆனால் அது செவ்வாயில் தரை இறங்காது. மாறாக செவ்வாய் கிரக்த்தை  நீள் வட்டப்பாதையில் சுற்ற ஆரம்பிக்கும்.( செவ்வாயில் ஒரு விண்கலத்தை இறக்குவது என்பது மிகவும் சிக்கல் பிடித்த விஷயம்)

 நீள் வட்டப்பாதை என்பதால் இந்திய விண்கலம் ஒரு சமயம் செவவாயிலிருந்து 371 கிலோ மீட்டர் உயரத்திலும் இன்னோரு சமயம்  80 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திலும் அமைந்திருக்கும்.

செவவாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் மீதேன் வாயு உள்ளதா என்று அறிவது இந்திய விண்கலத்தின் முக்கிய ஆராய்ச்சிப் பணியாக இருக்கும். இந்த விண்கலத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்காக உள்ள ஐந்து கருவிகளின் மொத்த எடை  சுமார் 15 கிலோ அளவுக்குத் தான் இருக்கும்.

ஆரம்பத்தில் 25 கிலோ எடை அளவுக்குக் கருவிகளை வைப்பதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் அது 15 கிலோவாகக் குறைக்கப்பட்டு விட்டது. அந்த அளவில் இந்திய விண்கலம் சிறிய சைஸ் கொண்டதாக எளிய முயற்சியாகவே இருக்கும்.

இப்படி ஒரு சிறிய விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? நாம் சக்தி வாய்ந்த ராக்கெட்டை  உருவாக்கிய பின்னர் செவ்வாயை நன்கு ஆராய பெரிய விண்கலத்தை அனுப்பலாமே? செவவாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதில் சீனாவை முந்தி விட்டோம் என்று பெருமை பேசுவதற்காகத்தான் சிறிய விண்கலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அனுப்புகிறோமா?

விண்வெளி ஆராய்ச்சி விஷயத்தில் சீனாவிடம் நம்மிடமுள்ளதை விட மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் உள்ளன். சீனா மூன்று தடவை விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள்து. சீனா விண்வெளிக்கு நிரந்தர பறக்கும் இல்லதை அனுப்பியுள்ளது. அது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சீன விண்வெளி வீரர் ஒருவர் அதில் போய் தங்கிவிட்டுத் திரும்பியுள்ளார்.

சீனா இப்படியாக விண்வெளித் துறையில் பல முனைகளிலும் மிக முன்னேறிய நிலையில் உள்ள போது சீனாவை முந்திக் கொண்டு செவ்வாய்க்கு இந்தியா ஒரு விண்கலத்தை அனுப்புவதால் அது நம் தலையில் கிரீடத்தை வைத்து விடப் போவதில்லை.

சீனாவுடன் இந்தியா போட்டா போட்டி எதிலும் ஈடுபடவில்லை. செவவாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்புவது சீனாவை மிஞ்ச வேண்டும் என்ற நோக்கம் கொண்டதல்ல என நம்து நிபுணர்கள் விளக்கம் கூறலாம்.

இன்னொரு நாட்டுடன் போட்டி போடுவதில் தவறு எதுவுமே இல்லை.  நாடுகள் இடையே இப்படியான போட்டா போட்டிகள் மூலம் உலகில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

1957ம் ஆண்டில் தொடங்கி விண்வெளியில் பல சாதனைகளைப் புரிந்த சோவியத் யூனியனை ( ரஷியா) மிஞ்சிக் காட்டியாக வேண்டும் என்ற உந்துததல் காரணமாகவே 1961 ஆம் ஆண்டில் அமெரிக்க  அதிபர் ஜான் கென்னடி ‘சந்திரனுக்கு மனிதனை அனுப்புவோம்’ என்று சூளுரைத்தார். 1969 ஆம் ஆண்டில் அதை அமெரிக்கா சாதித்துக் காட்டியது.

வேறு விதமாகச் சொன்னால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பியதில் அமெரிக்காவின் நோக்கம் குறைந்த பட்சம் ஆரமப கட்டத்தில் .ரஷியாவை மிஞ்ச வேண்டும் என்ற அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருந்தது. சந்திரனை ஆராய வேண்டும் என்ற அறிவியல் நோக்கு  இரண்டாம் பட்சமாகவே இருந்தது

ஆகவே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் சீனாவை மிஞ்ச வேண்டும் என்ற அரசியல் நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் அதில் தவறில்லை. ஆனால் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் இந்தியாவுக்குத் தொடர்ந்து முனைப்பு இருக்க வேண்டும். இப்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ 450 கோடி போதாது.வருகிற ஆண்டுகளில் மேலும் பெரிய விண்கலம் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். அதற்கெல்லாம் இந்திய விண்வெளி அமைப்பிடம் போதிய பணம் இருக்குமா என்பது சந்தேகமே.

சந்திரனுக்கு சந்திரயான்  -2  விண்கலத்தை அனுப்பும் திட்டம் ஏற்கெனவே தாமதப்பட்டுள்ளது. இதை அடுத்த ஆண்டில் அனுப்புவதாக இருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டில் தான் சாத்தியமாகும் போலத் தெரிகிறது.

இந்திய விண்வெளி வீரர்கள் இருவர் ஏறி செல்லும் வகையில் ஒரு விண்வெளி வாகனத்தை உருவாக்கி பூமியைச் சுற்றி வரும் வகையில் அதைச் செலுத்துவதற்கான இந்தியாவின் திட்டம் இன்னும் ஏட்டளவில் தான் உள்ளது. ரஷிய உதவியுடனான இத்திட்டம் ஈடேற இன்னும்  பத்து வருடங்கள் ஆனாலும் வியப்பில்லை.

அந்த அளவில் சந்திரனுக்கு இந்திய விண்வெளி வீரர் ஒருவரை அனுப்புவது என்ப்து இப்போதைக்கு எண்ணிப் பார்க்க முடியாத விஷயமே.

எதை மேலே செலுத்துவதானாலும் ராக்கெட் தேவை. இந்திய விண்வெளி அமைப்பு ( ISRO ) உருவாக்கிய PSLV  ராக்கெட் மாடு மாதிரி உழைக்கிற்து. 1993 ஆம் ஆண்டில் தொடங்கி ( 2012 டிசம்பர் வரை) 22 தடவை செலுத்தபட்டதில்  ஆரம்பத்தில் ஒரு தடவை தான் தோல்வி கண்டது. மற்றபடி தொடர்ந்து வெற்றி கண்டு வந்துள்ளது.

ஆனால் ஒன்று. இந்த ராக்கெட்டினால் அதிகபட்சம் 1800 கிலோ எடையைத் தான் சுமந்து செல்ல முடியும். எனினும் இந்த ராக்கெட்டைக் கொண்டு தான்  சுமார் 800 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியை வடக்கு தெற்காகச் சுற்றும் பல தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இடமிருந்து PSLV,  GSLV Mark 2, GSLV Mark 3. iஇந்த மூன்றில் முதலாவதாக் உள்ள PSLV ராக்கெட் வெற்றியாக அமைந்தது. இரண்டாவதான GSLV  Mark 2 ராக்கெட் வெற்றி என சொல்ல முடியாது. மூன்றாவதான GSLV Mark 3  இனி மேல் தான் விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட உள்ளது.
இதே ராக்கெட்டைக் கொண்டு தான்  சுமார் 36,000 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றும் இணைசுற்று  செயற்கைகோள்               ( Geostarinary Satellite) செலுத்தப்பட்டுள்ளது.

இதே ராக்கெட்டைக் கொண்டு தான் சந்திரனுக்கு சந்திரயான் --1 விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இப்போது இதே ராக்கெட்டைக் கொண்டு தான் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.எல்லாமே மெச்சத்தக்க சாதனை தான்.

ஆனால் இந்தியா அவ்வப்போது  தயாரிக்கும் சுமார் 3 டன் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இந்திய மண்ணிலிருந்து செலுத்த நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இல்லாத குறையினால் ஒவ்வொரு தடவையும்  அதை பிரெஞ்சு கயானாவுக்குத் தூக்கிக் கொண்டு ஓடும் போது  நமது பலவீனம் வெட்ட வெளிச்சமாகிறது. 1994 ஆம் ஆண்டில் PSLV  ராக்கெட் முதல் வெற்றி கண்ட போது ராக்கெட் விஷயத்தில்  நாம் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையில் தான் நாம் --18 ஆண்டுகளுக்குப் பிறகும் ---   இருக்கிறோம்.

PSLV ராக்கெட்டை விட சக்தி வாய்ந்த ராக்கெடை உருவாக்குவதற்கு நாம் முயற்சி செய்யாமல் இல்லை.GSLV  மார்க் 2 என்னும் சக்தி மிக்க ராக்கெட்டை உருவாக்க  1990 ஆம் ஆண்டிலேயே   ஆரம்பம் மேற்கொள்ளப்பட்டது.இது இரண்டரை டன் எடை கொண்ட செயற்கைக்கோளை உயரே செலுத்தக்கூடியது. 2001 ல் தொடங்கி ஏழு தடவை GSLV  ராக்கெட் உயரே செலுத்தப்பட்டதில் இரண்டு தடவை தான் வெற்றி கிட்டியது. மற்ற ஐந்து தடவைகளிலும் இது தோல்வியே கண்டது.\

இதற்கிடையே GSLV  மார்க் 3 என்னும் புது வகை ராக்கெட் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது.  இது நான்கு அல்லது ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோளை அல்லது விண்கலத்தை சுமந்து செல்லக்கூடியது. இது இன்னும் உருவாக்கி முடிக்கப்படவில்லை என்ப்தால் ஒரு தடவை கூட் உயரே செலுத்தப்படவில்லை

இத்திட்டம் வெற்றி பெற்று இந்த ராக்கெட் மிக நம்பகமானது என்று நிரூபிக்கப்பட்டால் தான் நாம் விண்வெளித் துறையில் அனேகமாக  சுய்சார்பு நிலையை எட்டிப் பிடிப்ப்வர்களாக் இருப்போம். .ஆனால் அப்போதும் கூட நாம் ராக்கெட் விஷயத்தில் சீனாவை எட்டிப்பிடித்தவர்களாக இருக்கமாட்டோம்.

இப்படியான பின்னணியில் நாம் ஏதோ சிறியதொரு விண்கலத்தை செவ்வாய்க்குச் செலுத்தி அதன் மூலம்சீனாவை மிஞ்சி விட்டோம் என்று பெருமை பேசுவதற்கான அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template