நீல் ஆம்ஸ்டிராங்க் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி நிலாவில் காலடி வைக்கும் வரை நிலாவில் மனிதன் காலடி வைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்து வந்தது. இப்போது அந்த நிலாவில் நாமும் காலடி வைக்கக்கூடிய வாய்ப்பு கனிந்துள்ளது. இதற்காக அமெரிக்காவில் கோல்டன் ஸ்பைக் என்ற கம்பெனி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கம்பெனிதான் நிலாவுக்கு சுற்றுலாப் பயணத்திட்டம் தீட்டி செயல்படுத்த உள்ளது. இந்த கம்பெனியின் தலைவர் கெர்ரி கிரிப்பின், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நிலாவில் கால் பதிக்க விரும்புகிற மனிதர்களுக்காக இவர் இன்பச்சுற்றுலா திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.38 ஆயிரத்து 500 கோடி) முதலீடு செய்ய வேண்டிவரும் என கணக்கிடப்பட்டுள்ளது. நிலாவுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நபர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 ஆயிரத்து 250 கோடி) வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு நபர்கள் நிலாவுக்கு உல்லாசப்பயணம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூடவோ, குறையவோ செய்யலாம்.
இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வருகிற ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படும். நிலாவுக்கு இன்பச்சுற்றுலா செல்வது தொடர்பாக கெர்ரி கிரிப்பின் கூறுகையில், எங்களது கனவெல்லாம் நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத்தகுந்த விதத்தில் சுற்றுலாப்பயணம் ஏற்பாடு செய்வதுதான் என்றார்.
நிலாவுக்கு முதல் உல்லாசப்பயணம் 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப்பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக்கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கோல்டன் ஸ்பைக் நிறுவனத்தின் தலைவர் ஆலன் ஸ்டெர்ன் நிருபர்களிடம் பேசுகையில், எங்கள் பயணத்திட்டம் ஒட்டுமொத்த அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புரட்சித்திட்டம் என்று கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !