ஒரு கிரகத்தை விழுங்கிய நட்சத்திரம்: - nelliadynet
Headlines News :
Home » » ஒரு கிரகத்தை விழுங்கிய நட்சத்திரம்:

ஒரு கிரகத்தை விழுங்கிய நட்சத்திரம்:

Written By www.kovilnet.com on Friday, March 1, 2013 | 5:43 AM


ஒரு நட்சத்திரம் தன்னைச் சுற்றிக் கொண்டிருந்த கிரகத்தை விழுங்கி விட்டதாக விஞ்ஞானிகள் இப்போது  கண்டுபிடித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் கூறியுள்ளனர்.எங்கோ நடந்த சமாச்சாரம் என இதை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஏனெனில்  பூமியை சூரியன் இப்படித்தான் விழுங்கப் போகிறது,  இப்போதல்ல, 500 கோடி ஆண்டுகள் கழித்து. நட்சத்திரம் என்ன, சிங்கமா, முதலையா ஒரு கிரகத்தை விழுங்குவதற்கு?


நட்சத்திரங்களின் வரலாறு பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டும்..  நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளம் பருவம், முதுமை என எல்லாம் உண்டு. சில வகை நட்சத்திரங்கள் வயதாகி விட்ட  நிலையில் வடிவில் பூதாகாரமாகப் பெருக்க ஆரம்பிக்கும், அப்படிப் பெருக்கும் போது அது சிவந்த நிறத்தைப் பெறும். அக்கட்டத்தில் அந்த நட்சத்திரத்துக்கு செம்பூதம  (Red Giant ) என்று பெயர்.( செம்பூத நட்சத்திரம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை கீழே உள்ள படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். )



செம்பூத நட்சத்திரம் வடிவில் பெருக்கும் போது தனக்கு அருகே உள்ள கிரகங்களை ஒவ்வொன்றாக விழுங்க ஆரம்பிக்கும். இது ஒரு பெரு நகரம் மேலும் மேலும் விரிவடையும் போது அதன் அருகில் உள்ள கிராமங்களை விழுங்குவதைப் போன்றதே.



சூரியனை எடுத்துக் கொண்டால் அது ஒரு நட்சத்திரமே. அதுவும் மேலே குறிப்பிட்டபடி 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு செம்பூத நட்சத்திரமாக வடிவெடுக்கும். அப்போது அது அருகில் உள்ள கிரகங்களை விழுங்க ஆரம்பிக்கும்.

படத்தில்  இடது புறம் உள்ள்து திருவாதிரை ( Betelgeuse)  நட்சத்திரம்..வலது புறம் கேட்டை (Antares). நட்சத்திரம். கீழே அம்புக் குறிக்கு எதிரே உள்ள சிறிய புள்ளி சூரியன்.

சூரியன் முதலில் புதன்(Mercury)கிரகத்தை விழுங்கும்.. அடுத்து வெள்ளி (Venus) காலி.. பின்னர் பூமியும் கபளீகரம். பூமியானது சூரியனிலிருந்து 15 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. சூரியன் வடிவில் எந்த அளவுக்கு பூதாகார வடிவத்தைப் பெறும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.



வானவியல் நிபுணர்கள் செம்பூத நட்சத்திரங்கள் பற்றிக் கூறி வந்துள்ளதெல்லாம் இதுவரை வெறும் ஏட்டளவில் தான் இருந்து வந்துள்ளது. இப்போதோ நிஜமாகவே ஒரு நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்கியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



அந்த நட்சத்திரத்துக்கு  BD + 48 740 என்று பெயர்.  ( நட்சத்திரங்களுக்கு எண்களைப் பெயர்களாக வைப்பது உண்டு)  இந்த நட்சத்திரம்  பெர்சியஸ் ராசி மண்டலத்தில் உள்ளது. இது ரிஷப ராசிக்கு அருகில் உள்ளதாகும்.



மேற்படி நட்சத்திரம் தனக்கு அருகே உள்ள கிரகத்தை விழுங்கியது என்பதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்? கொலைக் கேஸ்களில் சந்தர்ப்ப சாட்சியம் என உண்டு. அது மாதிரியில் தான் ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு நட்சத்திரத்தில் என்னென்ன அடங்கியுள்ளது என்ப்தை அதன் ஒளியை வைத்து கண்டுபிடித்து விட முடியும். அப்படித்தான் கண்டுபிடித்துள்ளார்கள்.



முதல் சாட்சி: பொதுவில் வயதான நட்சத்திரங்களில் லிதியம் என்ற மூலகம்-- ஓர் உலோகம்-- இருப்பது கிடையாது. ஆனால் அந்த ‘ கொலைகார’ நட்சத்திரத்தின் ‘வயிற்றில்’ மிக நிறைய லிதியம் காணப்படுகிறது. அந்த நட்சத்திரம் ஒரு கிரகத்தை விழுங்கியிருந்தால் மட்டுமே அவ்வளவு லிதியம் இருக்க முடியும்.



இரண்டாவது சாட்சி: அந்த நட்சத்திரத்தை சுற்றி வந்த மற்றொரு கிரகம் இப்போது தாறுமாறான சுற்றுப்பாதையில் சுற்ற ஆரம்பித்துள்ளது. ஒரு நட்சத்திரத்தை கிரகங்கள் சுற்றுகின்றன என்றால் அவற்றின் இடையே பரஸ்பர ஈர்ப்பு இருக்கும். அவை ஒன்றை ஒன்று இழுத்துப் பிடித்துக் கொண்டு நிறபதாகவும் கூறலாம். அருகே உள்ள  கிரகத்தை  நட்சத்திரம் விழுங்கி விட்ட  பிறகு  இரண்டாவது கிரகம் நிலை குலைந்து விட்டதாகவும் ஆகவே  அது தாறுமாறான பாதையில் சுற்ற ஆரம்பித்தது  என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.



இவை எல்லாம் The Astrophysical Journal Letters என்னும் இதழில் வெளியாகியுள்ளது.அமெரிக்கா, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.இக்குழுவின் தலைவரும் அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியருமான அலெக்ஸ் வோல்ஸ்கான் இது பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.இந்த  நிபுணர்கள் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு டெலஸ்கோப்பை தங்களது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினர்.



சூரியன் செம்பூத நட்சத்திரம் என்ற கட்டத்தை எட்டும் போது பூமியானது ஒரு வேளை தனது பாதையை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே சில நிபுணர்கள் கூறி வந்துள்ளனர். அவர்கள் கூறுவது சரியாக இருக்கலாம் .ஏனெனில் முதல் கிரகம் விழுங்கப்பட்ட பின்னர் இரண்டாவது கிரகம் தனது இடத்தில் இல்லாமல் வேறு பாதையில்  தாறுமாறான சுற்ற ஆரம்பித்துள்ள்து.  அது போல பூமியும் சூரியனிடமிருந்து தப்பி வேறு பாதையில் சுற்ற ஆரம்பிக்கலாம்.



இல்லாவிட்டாலும் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்குள்ளாக  மனிதன்  செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன. அந்த வகையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இப்போது பணத்தை செலவிடுவதில் தப்பு இல்லை என்றே கூறலாம்.



சரி, வானில்  செம்பூத நட்சத்திரங்கள் உள்ளனவா? அவற்றை நம்மால் காண முடியுமா? திருவாதிரை(Betelgeuse) நட்சத்திரம் ஒரு செம்பூத நட்சத்திரமே. குறுக்களவில் அது சூரியனை விட 700 மடங்கு பெரியது.   ஏப்ரல் மாதத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் திருவாதிரை நட்சத்திரத்தைக் காணலாம். பெயருக்கு ஏற்ற்படி அது சிவந்த நிறத்தில் காணப்படும்.கேட்டை (Antares) நட்சத்திரமும் ஒரு செம்பூத நட்சத்திரமே.  அதுவும் சிவந்த நிறத்தில் காணப்படும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template