பலருக்கும் வானில் கிரகங்களைப் பார்க்கத்தான் ஆசை. ஆனால் தாங்கள் பார்க்க விரும்பும் கிரகம் வானில் குறிப்பாக எந்த இடத்தில் எப்போது தெரியும் என்ற விவரத்தை அறிவதில் தான் பிரச்சினை. வியாழன் கிரகம் வானில் ரிஷப ராசியில் உள்ளது என்று சொன்னால் புரியாது.
இப்படியான பிரச்சினை எதுவும் இன்றி நீங்கள் டிசமபர் 25 ஆம் தேதி மாலை வியாழன் கிரகத்தைக் காணலாம். சூரியன் அஸ்தமித்த பிறகு கிழக்கு திசையில் நோக்கினால் சந்திரன் தெரியும். சந்திரனுக்கு சற்று அருகே மேற்புறத்தில் தெரிவது தான் வியாழன் கிரகம். சந்திரனுக்குக் கீழ்ப்புறத்தில் தெனபடுவது ஒரு நட்சத்திரமாகும்.
டிசம்பர் 25 ஆம் தேதி அஸ்தமித்ததும் கிழக்கு வானில் வியாழனும் சந்திரனும் இவ்விதமாகத் தெரியும் |
இவை நம் பார்வையில் அருகருகே இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன. நீங்கள் ஒரு சவுக்குத் தோப்பில் நின்றால் எந்த மரம் அருகே உள்ளது, எது தொலைவில் உள்ளது என்று எளிதில் அறிய முடியும். விண்வெளியில் அது சாத்தியமில்லை.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. வியாழன் கிரகத்தைப் பிரும்மாண்டமான பானையாகக் கற்பனை செய்து கொண்டால் அதன் உள்ளே 1400 பூமியைப் போட்டு அடைக்கலாம. வியாழன் அவ்வளவு பெரியது.
பூமியை விட வியாழன் மிக மிகப் பெரியது . படம் நாஸா |
வானில் நீங்கள் பார்க்கும் போது சந்திரன் பெரியதாகவும் வியாழன் சிறிய ஒளிப்புள்ளியாகவும் தெரிகிறது. சந்திரன் அன்றைய தினம் பூமியிலிருந்து 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோ மீட்ட்ர் தொலைவில் இருக்கும். அருகில் இருப்பதால் வடிவில் பெரிதாகத் தெரிகிற்து..ஆனாலும் பௌர்ணமியன்று தெரியக்கூடிய அளவுக்கு இராது. .( 28 ஆம் தேதி தான் பௌர்ணமி)
அன்றையத் தேதியில் வியாழன் கிரகம் பூமியிலிருந்து 60 கோடியே 90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆகவே தான் அது பிரும்மாண்டமான கிரகமாக இருந்தாலும் வடிவில் சிறிய ஒளிப்புள்ளியாகத் தெரிகிறது,
மேலே உள்ள படத்தில் சந்திரனுக்கு அடியில் சிறிய நட்சத்திரம் உள்ளதைக் காணலாம். அது தான் ரோகிணி ( Aldebaran ) நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் சூரியனை விடப் பெரியது. ரோகிணி நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 65 ஒளியாண்டு தொலைவில் உள்ளது ( ஓர் ஒளியாண்டு என்பது சுமார் 9 லட்சம் கோடி கிலோ மீட்டர். அதை 65 ஆல் பெருக்கினால் வருகிற தொகையே ரோகிணி நட்சத்திரம் இருக்கின்ற தூரம்.).
சந்திரன், வியாழன், ரோகிணி ஆகிய மூன்றும் அருகருகே இருப்பது போலத் தோன்றினாலும் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன Pic. Not to Scale |
வானில் நீங்கள் வியாழன் கிரகத்தைக் காணும் போது அதற்கு மேலே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் உள்ளதைப் பார்க்கலாம்.. உற்று நோக்கினால் இது தென்படும். இந்த நட்சத்திரக் கூட்டம் பூமியிலிருந்து சுமார் 440 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.இந்த நட்சத்திரக்கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் உள்ளதாகச் சொல்வார்கள். ஏழாவது நட்சத்திரத்தையும் காண முடியும்.உண்மையில் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் பல நூறு நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.
நீங்கள் புதன்கிழமை மாலை பார்த்தாலும் வியாழன் வானில் அதே இடத்தில் இருக்கும். ஆனால் சந்திரன் இடம் மாறி விடும். பூமியைச் சுற்றி வருகின்ற காரணத்தால் சந்திரன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே இருக்கும்.
வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன.ஆகவே வானவியலின்படி வியாழன் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறும். வியாழன் இப்போது ரிஷப ராசியில் உள்ளது. அடுத்து அது வானவியலின்படி மிதுன ராசிக்கு மாறும்.அதாவது வானில் அது இடம் மாறும். அதையே ஜோசியர்கள் குருப் பெயர்ச்சி என்கிறார்கள்.. ஆனால் ரோகிணி நட்சத்திரம் இடம் மாறாது. அதே போலவே கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் இடம் பெயராது. நட்சத்திரங்கள் இடம் மாறுவது கிடையாது. ரோகிணி என்றும் ரிஷப ராசியிலேயே இருந்து வரும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !